பிளாக்கியின் பயம்!

குஞ்சுக் காகங்களான ஆஷாவுக்கும், பிளாக்கிக்கும் சிறகுகள் முளைத்துவிட்டன. அவை வளர்ந்து பறப்பதற்கேற்றப் பக்குவத்தைப் பெற்றுவிட்டன.
பிளாக்கியின் பயம்!

குஞ்சுக் காகங்களான ஆஷாவுக்கும், பிளாக்கிக்கும் சிறகுகள் முளைத்துவிட்டன. அவை வளர்ந்து பறப்பதற்கேற்றப் பக்குவத்தைப் பெற்றுவிட்டன.

முதலில் ஆஷா காகம் கூட்டை விட்டுத் தத்தித் தத்தி வெளியே வந்து மரக்கிளையில் அமர்ந்தது. அருகிலிருந்த இன்னொரு கிளையில் அமர்ந்திருந்த அம்மா காகம் பிரவுனி, ஆஷாவை உற்சாகப்படுத்தியது.

""பரவாயில்லையே! உன் உடலைச் சமநிலைப்படுத்திக் கிளையில் அமர்ந்து விட்டாயே! இதே கவனத்துடன் பறக்க ஆரம்பி பார்க்கலாம்!'' என்றது.

அம்மாவின் நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளால் தூண்டுதல் அடைந்த ஆஷா, சட்டென்று சிறகை விரித்துப் பறந்து மரக்கிளைகள் வழியாக நுனிக்கிளையில் வந்து அமர்ந்தது. முதல் முறையானதால் உடலை சமநிலைக்குக் கொண்டு வரச் சற்றுச் சிரமப்பட்டது. இருந்தாலும், அதன் மனத்தில் ஏற்பட்ட "நான் வானில் பறக்கப் போகிறேன்!' என்ற எண்ணம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அடுத்து நுனிக் கிளையிலிருந்து மேலெழும்பிக் காற்றில் சிறகடித்துச் சிறிய தூரம் பறந்த ஆஷா, கீழே இறங்கி ஒரு வீட்டின் காம்பவுண்டுச் சுவரில் கால் பதிக்கும்போது தடுமாறிக் கீழே விழுந்தது.

பிரவுனியின் மனம் பதற்றப்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆஷாவின் அருகில் பறந்து வந்து,"நீ முதல் முறையாகப் பறக்கிறாய் அல்லவா... அதனால் சிறிது தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். போகப் போகத் துல்லியமாகக் கணக்கிட்டு, எப்படித் தரை இறங்குவது என்பதைக் கற்றுக் கொள்வாய். ம்.... மீண்டும் பறந்து பழகு!'' என்றது.

தடுமாறி விழுந்ததால் நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டிருந்த ஆஷாவுக்கு, அம்மாவின் வார்த்தைகள் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மீண்டும் எழுந்து பறந்தது. அதிக உயரத்துக்குச் செல்லாமல் சற்றுத் தாழ்வாகவே பறந்து தரையில் எப்படி நிலை கொள்வது என்பதை வெகு விரைவில் பழகிவிட்டது. அடுத்து இன்னும் சற்று உயரமாகப் பறந்து அந்தப் பகுதியை ஒரு சுற்றுச் சுற்றி வந்து தன் இருப்பிடத்தைத் துல்லியமாக அடையாளம் கண்டு தன் கூடு இருக்கும் மரத்தை அடைந்தது.

ஆஷா இப்படிப் பறந்து பழகிக் கொண்டிருப்பதை இன்னொரு குஞ்சுக் காகமான பிளாக்கி கவனித்துக் கொண்டிருந்தது. ஆஷாவைப்போல் தன்னால் பறக்க இயலுமா என்ற சந்தேகம் அதன் மனத்தில் எழுந்தது.

அம்மா பிரவுனி கூட்டருகில் வந்து, ""பிளாக்கி! ஆஷாவைப் பார்த்தாயா? எவ்வளவு நன்றாகப் பறக்கிறது! நீயும் கிளம்பு'' என்றது.

""அம்மா! என்னால் பறக்க முடியுமா?'' என்று நம்பிக்கையில்லாமல் கேட்டது பிளாக்கி.

""ஏன் முடியாது? உன்னுடன் பிறந்தவள்தானே ஆஷா. எவ்வளவு அழகாகப் பறக்கிறாள்! எதையும் கற்றுக்கொண்டு நாம் பிறப்பதில்லை. நம் முயற்சியால் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றது பிரவுனி.

""நான் கருமையான கழுத்தை உடையவள். என்னால் எப்படிப் பறக்க முடியும்?''

""அதனால் என்ன? நிறத்துக்கும் திறமைக்கும் சம்பந்தம் இல்லை...,ஆஷாவின் கழுத்துப் பகுதியும் கருப்பாகத் தானே இருக்கிறது. அவள் பறக்கவில்லையா?'' என்ற கேள்வியை எழுப்பியது பிரவுனி. பிளாக்கி, அதற்குப் பதிலேதும் சொல்லாமல் மவுனமாக இருந்தது.

சலிப்படைந்த பிரவுனி, ""இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் உனக்கும் சேர்த்து நான் இரை தேடுவது?!'' என்று கோபமாகக் கூறி விட்டு அவ்விடத்தை விட்டுப் பறந்தது.

மறுநாள் காலை விடிந்ததிலிருந்தே மழை வருவதற்கான அறிகுறியாக வானத்தில் கருமேகங்கள் திரண்டிருந்தன. சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை, சிறிது நேரத்தில் பெருமழையாகப் பிடித்துக்கொண்டது.

அன்று முழுவதும் பெய்த மழை மறுநாளும் தொடர்ந்தது. ஜனங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்கள்.

இலை, கிளைகளைத்தாண்டி கூட்டுக்குள்ளும் மழைத்துளிகள் விழுந்ததால் ஆஷா மறைவான இடத்துக்குப் பறந்து சென்றது. பிரவுனியும் கிளம்பத் தயாரானது.

""பிளாக்கி! இப்போதாவது உன் பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் விட்டு விட்டு என்னுடன் பறந்து வா!'' என்றது பிரவுனி!

மழையில் நனைந்து கொண்டிருந்த பிளாக்கி எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தது. அதற்கு இன்னும் பயம் விலகவில்லை. சில நொடிகள் காத்திருந்து பார்த்த பிரவுனியும் மறைவான இடத்திற்குப் பறந்து சென்றது.

அந்த மரத்திலிருந்து சிறிது தூரத்தில் ஏரி ஒன்று இருந்தது. அது மழை நீராலும் காட்டாற்று வெள்ளத்தாலும் நிரம்பி வழிந்தது. அதிக நீரின் அழுத்தத்தால் ஏரியின் கரை உடைந்தது. வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் நுழைந்தது. அதிக வேகத்தில் வந்த வெள்ளம் வழியில் இருந்த அனைத்தையும் அடித்துக் கொண்டு சென்றது.

பிளாக்கியின் கூடு இருந்த மரம் மிகப் பழமையானது. அதனால் வெள்ளத்தின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. வேரோடு சாய்ந்தது. சாய்ந்த வேகத்தில் பிளாக்கியின் கூடு இருந்த கிளை முறிந்து வெள்ள நீரோடு வேகமாக அடித்துச் சென்றது. பிளாக்கிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மழைத் துளிகளோடு சேர்ந்து வெள்ள நீரும் அதன் உடலை நனைத்தது. பிளாக்கிக்குக் குளிரெடுக்க ஆரம்பித்தது.

கிளை சென்ற வழியில் பெரிய பாறாங்கல் ஒன்று குறுக்கிட்டது. கிளை சென்ற வேகத்தில் அந்தப் பாறாங்கல் மீது மோதினால் கூடு சுக்குநூறாக உடைந்து விடும்! இப்போதே கூடு பாதி உடைந்து விட்டது!

"கூடு முழுவதும் உடைந்து விட்டால், தண்ணீரில் மூழ்கி உயிரை விட வேண்டியதுதானா?...' என்ற பயம் ஏற்பட்டதும், தன்னிச்சைச் செயலாக பிளாக்கி தன் சிறகுகளில் இருந்த நீரை ஒரு உதறு உதறியது. சட்டென்று தாவி வேகமாகச் சென்று கொண்டிருந்த மரக் கிளையில் அமர்ந்தது. அமர்ந்த வேகத்தில் சட்டென்று சிறகை விரித்து வேகமாக மேலும் கீழுமாக அசைத்துப் பறக்க ஆரம்பித்தது.

நல்ல வேளை! பிளாக்கி பறக்க ஆரம்பித்த சில விநாடிகளில் மரக்கிளையோடு கூடும் பாறாங்கல்லில் மோதி உடைந்தது! கொஞ்சம் தாமதித்திருந்தாலும் கூட்டுடன் சேர்ந்து பிளாக்கியும் நீரில் மூழ்கியிருக்கும்.

பறந்து சென்ற பிளாக்கி அருகிலிருந்த சிறிய சிமென்ட் மேடையில் உடலைச் சமநிலைப்படுத்தி இறங்கியது. தடுமாற்றம் ஏற்பட்டாலும் சுதாரித்துக் கொண்டது. வெள்ள நீர் அந்தச் சிமென்ட் மேடையையும் மூழ்கடிக்க வாய்ப்பிருப்பதை உணர்ந்த பிளாக்கி, மீண்டும் பறந்து சென்று அருகிலிருந்த ஆலமரத்தின் கிளையில் மிகச் சரியாக அமர்ந்தது.

பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது! அருகில் சிரிப்புச் சத்தம் கேட்டது! திரும்பிப் பார்த்தால் பக்கத்துக் கிளையில் அம்மா பிரவுனி!

""உன்னால் பறக்க முடியாது என்றாயே...? இப்போது எப்படிப் பறந்தாய்?''

""ஆமாம்! எப்படி நான் பறந்தேன்?...,என்னை அறியாமலேயே நான் பறந்திருக்கிறேன்!''

""நீ முயற்சி செய்யாமலேயே "என்னால் முடியாது' என்று முடிவெடுத்து விட்டாய்! உன்னால் முடியும் என்பதை உணர்த்த இயற்கையே உனக்கொரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது! உன் பறக்கும் திறமையை பயன்படுத்துவதற்கு நெருக்கடி கொடுத்திருக்கிறது!'' என்ற பிரவுனி சிறிது இடைவெளி விட்டு மீண்டும், ""எல்லோரிடமும் திறமை இருக்கிறது...,அதை வெளிக்காட்டுவதற்குத் தன்னம்பிக்கையற்ற மனம்தான் தடையாக இருக்கிறது!'' என்றது.

""உண்மைதான் அம்மா'' என்று பிளாக்கி ஆமோதித்தபோது மழை நின்றிருந்தது. பிளாக்கி மீண்டும் தன் சிறகை விரித்து எந்த விதத் தயக்கமும் பயமுமில்லாமல் ஆனந்தமாகக் காற்றில் "ஜிவ்' வென்று பறக்க ஆரம்பித்தது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com