சிறுவன் கண்டுபிடித்த திறமை!

ஜெய்ப்பூர் அரண்மனை வீதியில் வண்டிக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தார்.
சிறுவன் கண்டுபிடித்த திறமை!

ஜெய்ப்பூர் அரண்மனை வீதியில் வண்டிக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தார்.

 அந்நகருக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளைத் தன் வண்டியில் அமர வைத்து அவர்கள் நகரில் எந்த இடத்தைப் பார்க்க விரும்புகிறார்களோ அங்கே அழைத்துச் செல்வார். அந்தச் சுற்றுலாப் பயணிகள் கொடுக்கும் கூலிப் பணத்தை வாங்கி தன் வாழ்க்கையை நடத்தி வந்தார். மனைவியையும் மகனையும் வறுமையின்றிப் பாதுகாத்து வந்தார்.

 ஒரு நாள் அவர் தன் மகனை வண்டியில் வைத்துப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

 அவர் மகனோ தெருவை வேடிக்கை பார்த்தவாறே அமைதியுடன் வண்டியில் அமர்ந்திருந்தான்.

 அப்போது கோட்டை வாயில் வழியாக வண்டி சென்று கொண்டிருந்தது. கோட்டை வாயில் சுவற்றில் அழகிய பொம்மை ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. அச்சிறுவன் அந்த பொம்மையை உற்று நோக்கினான். பின்னர் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தான்.

 ""அப்பா! அப்பா! அதோ சுவரில் ஒரு பொம்மை காணப்படுகிறதே..., அது போன்று எனக்கு ஒரு பொம்மை வேண்டும்''என்றான்.

 ""மகனே! நீ கேட்ட பொம்மையைப் பார்த்து விட்டேன். அதைப் போல உனக்கு ஒரு பொம்மையைச் செய்து கொடுக்கிறேன். நான் உன்னைப் போன்று சிறுவனாக இருந்தபோது சிற்பி ஒருவரிடம் சிலைகள் செய்வது பற்றி பயிற்சி எடுத்துக் கொண்டேன். பின்னர் பல்வேறு காரணங்களால் அந்தச் சிற்பப் பணியைத் தொடராமல் விட்டுவிட்டேன். ஆனால் நான் கற்றுக் கொண்டதெல்லாம் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. நாளையே நீ கேட்டுக் கொண்டபடி சிலை செய்யத் தொடங்குகிறேன்...,கவலைப் படாதே...''என்றார் வண்டிக்காரர்.

 மகனும் மகிழ்ச்சி அடைந்தான்.

 மறுநாளே சிலை செய்யும் பணியைத் துவங்கினார் வண்டிக்காரர். ஓரிரு நாட்களில் அழகிய பொம்மைச் சிலையைச் செய்து முடித்தார்!

 அச்சிலையைக் கண்டு அவர் மகன் சந்தோஷமும் ஆச்சரியமும் அடைந்தான்.

 ""அப்பா! இந்தச் சிலை நான் கோட்டைச் சுவற்றில் பார்த்த சிலையைப் போலவே அழகாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்துவிட்டது! ரொம்ப நன்றி அப்பா!'' என்றான்.

 எப்பொழுதும் அந்தச் சிலையை தன் கையிலேயே வைத்திருந்தான் அந்தச் சிறுவன்! வெளியில் செல்லும் போதும் அதை எடுத்துச் செல்வான். ஏன் படுக்கையில் கூட அந்தச் சிலையோடுதான் படுத்துக் கொள்வான்.

 ஒருநாள் அவன் அந்தச் சிலையைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியில் சென்றபோது  சுற்றுலாப் பயணிகள் பலர் அந்தச் சிலையைப் பார்த்து வியப்படைந்தனர். அதனைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்க முயற்சித்தனர்.

 தன் தந்தை செய்த சிலைக்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை உணர்ந்தான் வண்டிக்காரன் மகன்.

 உடனே அவன் மனதில் ஓரு யோசனை தோன்றியது. வீட்டிற்கு வந்து அவன் இரவெல்லாம் தூங்காமல் நெடுநேரமாக தன் மனதில் தோன்றிய புதிய யோசனையைப் பற்றிச் சிந்தித்தான்.

 மறுநாள் புத்துணர்ச்சியோடு தன் தந்தையின் முகத்தைப் பார்த்து,

"தந்தையே!! உங்களிடம் சிறப்பான கைத்திறமை இருக்கிறது! நீங்கள் விதவிதமான பொம்மைகள் செய்து விற்பனை செய்தால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும்.  அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அதனை வாங்குவார்கள். நம்மைத் தேடி வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடமே நாம் எளிதாக சிலைகளை விற்பனை செய்துவிடலாம்!''என்றான்.

 தன் மகனின் ஆலோசனையைக் கேட்டு வண்டிக்காரர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

 ""மகனே! நீ அற்புதமான யோசனையை வழங்கினாய்! உன்னுடைய யோசனையை நான் ஏற்றுக் கொள்கிறேன். உனது ஆலோசனைப்படி நான் பொம்மைகளைச் செய்கிறேன். நாம் அவைகளை விற்க முயற்சிக்கலாம்.'' என்றார்.

 அன்று முதல் சிறுவனின் தந்தை கடினமாக உழைக்கத் தொடங்கினார். விதவிதமான பல செய்து குவித்தார். அவருடைய பொம்மைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது! ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அவருடைய பொம்மைகளை வாங்கிச் சென்றார்கள். அவருடைய பொருளாதார நிலையும் உயர்ந்தது.

 வண்டிக்காரர் தன் மகனின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினார்.

 ""மகனே! உன்னுடைய யோசனை தக்க பயன் அளித்திருக்கிறது. நீ சொன்னபடியே நான் செய்த பொம்மைகள் சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கின்றது. அதோடு நம் பொருளாதார நிலையும் இப்போது உயர்ந்துவிட்டது.'' என்றார். 

 அதனைக் கேட்ட அவர் மகனோ, ""அப்பா! ஒவ்வொருவரும் அவருக்குள் இருக்கின்ற திறமையை வீணாக்கக் கூடாது என்று என் ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள். அதனால்தான் உங்களுக்குள் இருந்த திறமையை உணர்ந்து அதனை நீங்கள் சிறப்பாக செயல்படுத்திக் கொள்ளுமாறு தெரியப்படுத்தினேன்.'' என்றான்.

 வண்டிக்காரரும் தன் மகனின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com