வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வேண்டாத ஆசை!

கண்ணப்பன் காய்கறிக்கடைக்குச் சென்றான். கத்தரிக்காயைப் பொறுக்கி ஒரு பேசினில் போட்டான்.

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 5:08 am

முத்துக் கதை
"கண்ணப்பா!....''
"இதோ வந்துட்டேம்மா!...''
"இந்தா, பணம், கடைக்குப் போய் கால் கிலோ கத்தரிக்காய் வாங்கிட்டுவா''
"எனக்குப் பழக்கம் இல்லையேம்மா...''
"எப்போ பழகிக்கிறது? போ...சீக்கிரம்!....இந்தா பை!...எனக்குத் தலைக்குமேலே வேலை இருக்கு!''
கண்ணப்பன் காய்கறிக்கடைக்குச் சென்றான். கத்தரிக்காயைப் பொறுக்கி ஒரு பேசினில் போட்டான். அதை எடைபோட கடைக்காரரிடம் கொடுக்கப் போனான். 
ஒரு முதிய பெண் பொறுக்கிக் கொடுத்த கத்தரிக்காயை எடை போட்டுக் கொண்டிருந்தார் கடைக்காரர். அந்த முதிய பெண் பத்து ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்து மீதி சில்லறை வாங்கிக் கொண்டாள். அவள் கடைக்காரரிடம், "ஒரு காய் கொசுறு போடுங்க!'' என்றாள். 
கடைக்காரர் சிரித்துக் கொண்டே, "சரியாத்தாம்மா எடை போட்டிருக்கேன்....நீங்களும் சரியாத்தான் விலையைக் கொடுத்திருக்கீங்க....அப்புறம் எதுக்குக் கொசுறு?...'' என்றார். 
அந்த முதிய பெண் விடுவதாக இல்லை. "பரவாயில்லே ஒரு காய் போடுங்க....'' என்றாள். கடைக்காரரும் ஒரு காயை அவளுடைய பையில் போட்டார்.
கண்ணப்பன் இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருந்தான். கத்தரிக்காய் நிரப்பிய பேசினை கடைக்காரரிடம் தந்தான். கடைக்காரர் அதை எடை போட்டார். கத்தரிக்காய் கால்கிலோவிற்குச் சற்று கூட இருந்தது. அதிலிருந்து இரண்டு கத்தரிக்காய்களை எடுத்தார். எடை சரியாகிவிட்டது. பத்து ரூபாயை கண்ணப்பனிடமிருந்து வாங்கிக்கொண்டு மீதியைக் கொடுத்தார். 
கண்ணப்பன் அவரிடம், "இன்னும் ஒரு காய் கொசுறு போடுங்க.....'' என்றான். 
கடைக்கார், "தம்பி, இலவசம் கேட்பது தவறு!...எடை சரியாக இருக்கு!...எடுத்திட்டுப் போ!'' என்றார்.
"அந்த அம்மாவுக்கு மட்டும் குடுத்தீங்களே!...''
"அந்த அம்மாவுக்கு பேராசை...இனி அவங்களை சொல்லித் திருத்த முடியாது....நீ சின்னப்பையன்...இப்பவே இந்தமாதிரி விஷயங்களைக் கத்துக்கணும்...போய் வா!'' 
"அதெல்லாம் முடியாது...ஒரு காய் போடுங்க...'' என்றான் கண்ணப்பன். 
கடைக்காரரும் போனால் போகிறதென்று ஒரு கத்தரிக்காயை கண்ணப்பன் பையில் போட்டார். 
வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினான். அம்மாவிடம் நடந்ததைச் சொன்னான். அம்மா, "கடைக்காரர் சொன்னதுதான் சரி...'' என்றார். 
கத்தரிக்காய்களை எடுத்துக் கொண்டு சமையல் அறைக்குப் போனார் அம்மா. சிறிது நேரம் கழிந்தது. அம்மா சமையலறையிலிருந்து, "கண்ணப்பா....கத்தரிக்காய் எல்லாம் நறுக்கினேன்....அதில் ஒரு கத்தரிக்காய் சொத்தை...உள்ளே புழு இருந்தது...குப்பையிலே போடவேண்டியதுதான்!'' என்று கூறினாள். 
"வேண்டாத ஆசை வந்தது அது பயன் இல்லாமப் போச்சு!'' என்றான் கண்ணப்பன் புன்னகையுடன். அன்று முதல் அவன் இலவசமாக எதையும் பெற விரும்புவதே இல்லை. 
- வியாரென்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.