அரங்கம்: என்ன? எங்கே? எப்பொழுது?

சென்னை கார்ப்ரேஷன், தியாகராயநகர் பாண்டி பஜார் பாதையோரச் சுவர்களை அழகிய வண்ணத்தால் அலங்கரித்துள்ள காட்சியை ரசித்துக் கொண்டே செல்லும் பெண்மணி!
அரங்கம்: என்ன? எங்கே? எப்பொழுது?

சென்னை கார்ப்ரேஷன், தியாகராயநகர் பாண்டி பஜார் பாதையோரச் சுவர்களை அழகிய வண்ணத்தால் அலங்கரித்துள்ள காட்சியை ரசித்துக் கொண்டே செல்லும் பெண்மணி!

 - ஹப்பா

காட்சி 1
இடம்: பள்ளி மைதானம்
பாத்திரங்கள்: ஜான், சரவணன் என்ற சரா

ஜான்: கவிழ்ந்த கப்பலை எப்படி நிமிர்த்தறதுனு கவலையோட உட்கார்ந்திருக்கிறமாதிரி தெரியுதே! ஏதாவது பிரச்சனையா?
சரா: (மெலிதாகச் சிரித்தபடி) அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேண்ணா! ஏதோ நினைப்புல இருந்துட்டேன்!
ஜான்: பொய் சொல்ற! முகம் வாடிப் போயிருக்கு. சந்தோசத்தை பங்கு போட்டுக்கிட்டா இரட்டிப்பாகும். கவலையை பங்கு போட்டுக்கிட்டா பாதியா குறைஞ்சுடும்!
(சரா மவுனமாக இருக்கிறான்)
ஜான்: அதைவிடு. பி.டி. வாத்தியார்கிட்ட நீயும் போய் பேர் கொடுக்கலியா. அங்கே பார். எல்லோரும் பெயர் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. போன வருசம் ஓட்டப் பந்தயத்துல நீ தானே ஃபர்ஸ்ட் வந்தாய்!
சரா: (முகத்தைச் சுளித்தபடி) பிடிக்கலைண்ணா!
ஜான்: அதான் ஏன்னு கேக்கறேன்?
சரா: காசி பேர் குடுத்துருக்கான். அவன் கூடப் போட்டி போடப் போறதில்லை
ஜான்: அவன் உன் நண்பங்கறதாலயா! (ஏதோ நினைத்தவனாக) ஆமா! இப்பத்தான் நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறதில்லையே. சண்டை போட்டுக்கிட்டீங்களா?
சரா: நான் ஒண்ணும் சண்டை போடல! அவன் தான் முறைச்சுக்கிட்டுத் திரியறான்
ஜான்: (முதுகைத் தட்டிக்கொடுத்து இன்னும் சற்று நெருங்கி அமர்ந்தபடி) அப்படி என்ன தான் நடந்துச்சு உங்க ரெண்டு பேருக்குள்ள? 
சரா: ஒரு மாசத்துக்கு முன்னால!.

காட்சி 2
இடம்: தெரு
மாந்தர்:: சரா, காசி,

(மாலையில் சராவும் காசியும் பள்ளிக்கூடம் விட்டு வீதியில் நடந்து செல்கிறார்கள். அப்போது திடீரென்று மழை பிடித்துக்கொள்கிறது)

காசி: (எரிச்சலுடன்) சே! வீடுபோய் சேர்ந்ததுக்கப்புறம் மழை பெய்யக்கூடாதா?!
சரா: மழை பெருசாகிக்கிட்டே போகுது. வா! மூடியிருக்கிற கடையோரமா நின்னுக்கலாம்.
(இருவரும் கடை மறைவில் நிற்கின்றனர்)
காசி: நீ குடை கொண்டு வரலியா? எப்பவும் எடுத்துட்டு வருவியே
சரா: பிளாஸ்டிக் கொங்காணி கொண்டு வந்திருக்கேன்
காசி: ரொம்ப நல்லதாப்போச்சு. வா ரெண்டுபேரும் அதை போர்த்திக்கிட்டுப் போகலாம்
சரா: ரெண்டு பேரு எப்படிடா அதுல போகமுடியும்? ஒருத்தர் மட்டும் போகலாம்.
காசி: மனசுல இடமிருந்தா கொங்காணியிலேயும் இடம் இருக்கும்டா. 
சரா: அதுக்கில்லடா. ரெண்டுபேரும் இதுல போனால் நம்ம புத்தகப்பை நனஞ்சுடும். உள்ளே இருக்கிற புத்தகமெல்லாம் வேஸ்டாயிடும். நாம நனஞ்சாலும் பரவா
யில்லை. ரெண்டுபேரு போக முடியாதுங்கறதாலதான் பிளாஸ்டிக் கொங்காணியை வெளியே எடுக்கல. 
காசி: அவ்வளவுதானாடா நம்ம ஃப்ரெண்ட்ஷிப்! (வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொள்கிறான்)
சரா: ஏண்டா இப்படிப் பேசற? உண்மையைத் தானே சொல்றேன். ஒருத்தர் போர்த்திக்கிட்டுப் போனா உடல்முழுக்க நனையாமலும், முதுகுல சுமந்துக்கிட்டிருக்கிற புத்தகம் நனையாமலும் வீடு போய் சேர்ந்துடலாம்னு தானே சொன்னேன். வேணும்னா நீ மட்டும் பிளாஸ்டிக் கொங்காணியை போர்த்திக்கிட்டுப் போடா. நான் மழை நின்னதும் வர்றேன்.
காசி: (மவுனம்)
சரா: சரி! வா ரெண்டுபேரும் ஒரே கொங்காணியை போர்த்திக்கிட்டுப் போகலாம்
காசி: (அதற்கும் மவுனம்)
சரா: என்னடா வம்பாப் போச்சு. எதுக்கும் ஒத்துவர மாட்டேங்கிற. சரி! நான் சீக்கிரமா வீட்டுக்குப்போய் குடையை எடுத்துக்கிட்டு வர்றேன். அதுவரைக்கும் நீ இங்கேயே இரு. ஒரு கிலோமீட்டர் தூரம்தானே!
(காசி அதற்கும் மவுனமாக இருப்பதைப்பார்த்து சரா கொங்காணியை போர்த்திக்கொண்டு கிளம்புகிறான்)

காட்சி 3
இடம்: சராவின் வீடு
மாந்தர்: சரா, சராவின் அம்மா
(மழைநீர் கொங்காணியிலிருந்து (மழையில் நனையாமல் இருக்கக் கூடை போன்ற அமைப்பு) வடிந்துகொண்டிருக்க, வீட்டுக்குள் நுழைகிறான் சரா)

சராவின் அம்மா: பிளாஸ்டிக் கொங்காணியை அப்படியே ஓரமா வச்சுட்டு உள்ளே வா. வீடெல்லாம் தண்ணியாயிடப்போகுது!
சரா: (முதுகில் இருந்த புத்தகப் பையை கழற்றி வைத்துக்கொண்டே) குடை எடுத்துட்டு வாங்கம்மா!
சராவின் அம்மா: ஏண்டா!
சரா: காசி மழைக்கு ஒதுங்கி கடைக்குள்ள நிக்கிறான். மழை பேஞ்சுக்கிட்டே இருக்கு. இப்போதைக்கு நிக்காது போலிருக்கு. அடுத்த தெருவுலதானே அவன் வீடு இருக்கு. கூட்டிட்டுப் போய் விட்டுட்டு வந்துடறேன்
சராவின் அம்மா: அண்ணன் காலேஜ்ல இருந்து வந்துட்டான். அவனோட சைக்கிளை எடுத்துட்டுப் போ!
(பிளாஸ்டிக் கொங்காணியை கேரியரில் வைத்துக்கொண்டு, குடையை பிடித்தபடி சைக்கிளில் விரைகிறான் சரா)

காட்சி 4
இடம்: பள்ளி மைதானம்
மாந்தர்: ஜான், சரா

ஜான்: அப்புறம் என்னாச்சு?

சரா: காசி நின்னுகிட்டிருந்த கடைக்குப் போய் பார்த்தேன். அவனை அங்கே காணோம்!. அப்படியே அவன் வீட்டுக்குப் போய் அவங்க அம்மாகிட்ட கேட்டேன். அவன் வந்துட்டதாகவும் ரூமுக்குள்ள இருக்கான்னு சொன்னாங்க. அவன் இருக்கிற ரூமை தட்டிப்பார்த்தேன். பதிலே இல்ல. அவங்கம்மாவும் தட்டிப்பார்த்தாங்க. வரல. "ஏம்பா! ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டீங்களா'ன்னு அவங்கம்மா கேட்டாங்க அதுக்கப்புறம் அவன் பேசவேயில்லை. வழியில பார்த்து நான் பேச முயற்சி செஞ்சாலும் முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போயிடுவான்.

ஜான்: இதுக்கா அவன் உன்னோட டூ விட்டுக்கிட்டான். என்ன புள்ளைங்களோ போங்க! அதுக்கும் நீ ஓட்டப்பந்தயத்துல கலந்துக்காததுக்கும் என்ன சம்பந்தம்? உன் பெயரையும் கொடுக்க வேண்டியதுதானே!

சரா: அவன் நல்லா ஓடுவான். அவன்கிட்ட அந்தத் திறமையிருக்கு. ஒவ்வொரு வருசமும் நான் அந்தப்போட்டியில கலந்துக்குறதாலதான் எனக்காக விட்டுக்கொடுத்து அவனோட பெயரை கொடுக்கிறதில்ல. இன்னைக்கு எம்மேல உள்ள கோபத்துல அவன் பெயரை கொடுத்திருக்கான். இந்த தடவையாவது அவன் போட்டியில கலந்துக்கிட்டு முதல்பரிசு வாங்கட்டும்.
ஜான்: (சராவை தழுவிக்கொண்டு) நட்புன்னா எப்படியிருக்கணும்னு எனக்குக் கத்துக்கொடுத்துட்ட!

காட்சி 5
இடம்: பள்ளி மைதானம்
மாந்தர்: சரா, காசி, ஜான்

(பள்ளி விளையாட்டு மைதானம். ஓட்டப்பந்தயத்துக்கு வீரர்கள் தயாராகிறார்கள். விசில் அடித்ததும் அனைவரும் ஓடுகிறார்கள்)

ஜான்: ம்! ஓடு! ஓடு! காசி ஓடு!
சரா: (பரபரப்புடன்) அண்ணா! காசியை முந்தியடிச்சுக்கிட்டு ஒருத்தன் ஓடறான் பாருங்க. காசி ஜெயிச்சுடுவானா?
ஜான்: ஆரம்பத்துல முன்னே பின்னே வருவாங்க! கடைசியில யாரு ஜெயிக்கிறாங்கன்னு பாரு!
சரா: அவனுக்காக நான் விட்டுக்கொடுத்தது வீணா போயிடப் போகுதுண்ணா!
ஜான்: அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது சரா! நம்பிக்கையிழக்காதே! (திடீரென உற்சாகத்துடன்) அங்கே பாரு. காசி முந்திக்கிட்டான். எவ்வளவு துள்ளலோட ஓடறான்பாரு. ஓடு! ஓடு!
சரா: ஓடு! ஓடு! இன்னும் கொஞ்சம் தூரம்தான். அதோ! அதோ! எல்லைக்கோட்டை தொட்டுட்டான். (உற்சாகத்தில் விசிலடிக்கிறான்) காசி நீ ஜெயிச்சுட்டடா! அண்ணா! உங்களோட நம்பிக்கை வீண் போகல!

காட்சி 6
இடம்: பள்ளி மைதானத்தில் விழா மேடை
மாந்தர்: தலைமை ஆசிரியர், காசி, ஆசிரியர்கள், மாணவர்கள்

(விழா மேடையில் காசிக்கு வெற்றிக்கோப்பையை தலைமை ஆசிரியர் வழங்குகிறார். அனைவரும் கைதட்டுகின்றனர்)

காட்சி 7
மாந்தர்: காசி, சரா, ஜான்
(கோப்பையை வாங்கிக்கொண்டு மேடையைவிட்டு கீழே இறங்கி நேராக சராவை நோக்கி வருகிறான் காசி)

காசி: (கோப்பையை சராவின் கையில் கொடுத்து) இந்த வெற்றிக்கோப்பை உனக்கானது தான்டா! நீ இந்த போட்டியில கலந்துக்கிட்டிருந்தா என்னால ஜெயிச்சிருக்க முடியாது. ஜான் அண்ணா எல்லாத்தையும் என்கிட்ட சொன்னாரு. என்னோட நண்பன் எனக்காக விட்டுக்கொடுத்த முதலிடத்தை எப்படியாவது எட்டிப் பிடிச்சுடணும்னு வெறியோட ஓடினேன்! ஜெயிச்சுட்டேன்! என்னை மன்னிச்சுக்கடா. உன்னை நான் சரியாப் புரிஞ்சுக்கலையோன்னு இப்ப வருத்தப்படறேன்.

சரா: (காசியை கட்டிக்கொண்டு) கெட்டதுலேயும் ஒரு நல்லது நடந்துருக்கு! நீ இந்த கோப்பையை வாங்கினதுக்கு நாம் ஒரு சில நாட்கள் பிரிஞ்சிருந்தது ஒரு காரணாமாயிருக்கு. உன்னோட திறமை நம்ம பள்ளிக்குத் தெரியறதுக்கு ஒரு வாய்ப்பா அமைஞ்சிருக்கு. அதுக்காக அடிக்கடி இப்படி பிரிஞ்சு போயிடாதே!
(ஜான், காசி, சரா மூவரும் வாய்விட்டுச் சிரிக்கின்றனர்)

திரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com