மருந்து!
துவாரகையில் கிருஷ்ணன் தலைவலியால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். நாராயண!..... நாராயண!.... என்று நாரதரின் குரல் கேட்டது.


துவாரகையில் கிருஷ்ணன் தலைவலியால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார்.
நாராயண!..... நாராயண!.... என்று நாரதரின் குரல் கேட்டது.
""வாரும் நாரதரே!'' என்றார் கண்ணன்.
""பரந்தாமனுக்கு வணக்கம்!... ஏன் வாட்டமுடன் காணப்படுகின்றீர்?.... என்ன ஆயிற்று?... ''
""தலைவலி!.... தாங்க முடியவில்லை!.... வைத்தியர்கள் வந்து பார்த்து மருந்துகளையும் தந்தனர்!.... தலைவலி தீர்ந்த பாடில்லை!""
""இதென்ன ஆச்சரியம்!... உங்களுக்குத் தெரியாத மருந்தா?....''
""நீ சொல்வதும் சரிதான்!..... ஆனால் என் தலைவலி தீர்க்கும் மருந்தை நான்அறிவேன்..... ஓர் உண்மையான பக்தனின் கால் தூசே அந்த மருந்து!.... பக்தர்களின் கால் தூசுகளைச் சேகரித்து அதைக் குழைத்துப் பூசினால் என் தலைவலி தீரூம்!... ஆனால் அதற்கு வழி?''
தன்னை சோதிக்கவே கண்ணன் இந்த மாதிரி கேட்கிறான் என நாரதர் நினைத்தார்!.... இறைவன் கிருஷ்ணனின் தலையில் தன் பாத தூசைத் தடவுவதா?... இதென்ன அபசாரம்?....என்னை மகாபாவம் சேர்ந்துவிடாதா?.... கிருஷ்ணர் சோதிக்கிறார்... நிச்சயம் இதற்கு நாம் இணங்கக் கூடாது என தீர்மானித்தார்.
""சரி, நான் சென்று உங்கள் பக்தர்களிடம் கேட்கிறேன்.... பாத தூசுகளைச் சேகரித்துக்கொண்டு இங்கே வருகிறேன்!...' என்று கூறிவிட்டு அங்கிருந்து மெதுவாக நழுவிவிட்டார் நாரதர்.
இறைவன் கண்ணன் முகத்தில் புன்னகை!
எந்த பக்தரும் கண்ணனுக்கு தங்கள் பாத தூசியைத் தர சம்மதிக்கவில்லை.... அதைப் பெரும் பாவமாகக் கருதினர். எனவே கண்டிப்புடன் மறுத்துவிட்டனர்.
நாரதர் கோகுலத்தின் பிருந்தாவனத்திற்கு விரைந்தார். அங்கிருந்த கோபிகைகளிடம் கிருஷ்ணனின் தலைவலி பற்றியும், மற்றும் அதற்கான மருந்தைப் பற்றியும் கூறினார்.
கோபிகைகள் பதற்றமடைந்தனர். ""அப்படியா?.... எங்களது பாததூசிகளைச் சேர்த்துப் பூசினால் எங்கள் கண்ணன் தலைவலியிலிருந்து விடுபடுவாரா?.... நாங்கள் பாக்கியசாலிகள்!....'' எனக் கூறிவிட்டு ஒரு பெரிய துண்டை விரித்து அதில் கண்ணன் புகழைப் பாடி நடனமாடினர். கண்களில் பக்திக் கண்ணீர்! நடனமாடிய துண்டில் நிறைய தூசிகள் சேர்ந்திருந்தன.
பிறகு துண்டைச் சுருட்டி, நாரதரிடம் தந்து, ""இதில் எங்கள் பாததூசிகள் சேர்ந்திருக்கின்றன.... இதைக் குழைத்துத் தேய்த்து எங்கள் கண்ணனின் தலைவலியைக் குணப்படுத்துங்கள்!...'' என்று கண்களில் பக்திக் கண்ணீருடன் தந்தனர்.
நாரதர் துண்டை எடுத்துக்கொண்டு, ""உங்களது பாததூசியை கிருஷ்ணரின் தலையில் தேய்த்தால், அந்த பாவம் உங்களை வந்து சேராதா?.... அந்தக் கவலை உங்களுக்கு
இல்லையா?'' என்று கேட்டார்.
அதற்கு கோபிகைகள், ""பாவம் வந்தால் என்ன?... வரட்டுமே!... அது பற்றி எங்களுக்குக் கவலையில்லை!.... எங்கள் கண்ணனின் தலைவலி குணமாக வேண்டும்!.... அதுவே எங்கள் விருப்பம்!'' என்றனர்.
நாரதர் அந்தத் துண்டை எடுத்துக்கொண்டு துவாரகைக்கு விரைந்தார். கிருஷ்ணர் அந்த தூசியை நீரில் குழைத்து தலையில் பூசிக்கொண்டார். உடனே அவரது தலைவலி பறந்தது!
பக்திப் பரவசம் மிகுந்த கோபிகைகளின் தூய்மையான அன்பை நினைத்துப் பரந்தாமனின் கண்களில் கண்ணீர் திரண்டது!
- எஸ்.செளஜன்யா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...