அரங்கம்: தியாகி

தியாகி சண்முகம், தியாகியின் பேத்தி கல்லூரி மாணவி கவிதா, கிராம நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை மல்லிகா, ஆசிரியர் பரமசிவம்,பள்ளி மாணவர்கள் செல்வம், முருகன்,மாணவிகள் சத்யகாந்தி, சுபாஷினி.
அரங்கம்: தியாகி

காட்சி - 1
இடம்: தியாகி சண்முகம் வீடு

மாந்தர்: தியாகி சண்முகம், தியாகியின் பேத்தி கல்லூரி மாணவி கவிதா, கிராம நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை மல்லிகா, ஆசிரியர் பரமசிவம்,பள்ளி மாணவர்கள் செல்வம், முருகன்,மாணவிகள் சத்யகாந்தி, சுபாஷினி.

(93 வயதான சுதந்திரப் போராட்டத் தியாகி சண்முகம் பழைய பிரம்பு நாற்காலியில் அமர்ந்தபடி சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். அப்போது, தியாகியின் பேத்தி கவிதா வருகிறார்)
கவிதா: தாத்தா... உங்களைப் பார்க்க பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் வந்திருக்காங்க..! சாப்பிடறீங்கன்னு சொன்னேன்... வெளியில காத்திருக்காங்க...!
தியாகி: அட... என்னம்மா நீ..! அவங்களைக் காக்க வைக்க வேண்டாம்! உள்ளே வரச் சொல்லு..! நான் சாப்பிட்டுக்கிட்டே பேசிடுறேன்..! அவங்களுக்கும் சாப்பிட ஏதாவது கொண்டு வந்து கொடும்மா..!
கவிதா: சரிங்க தாத்தா..!
(ஆசிரியர்களும், மாணவர்களும் உள்ளே வருகின்றனர். மாணவி சத்யகாந்தியின் கையில் ஓர் உண்டியல் வைத்திருப்பதை தியாகி சண்முகம் கவனிக்கிறார்).
தியாகி: வாங்க...! வாங்க...! எல்லாரும் இப்படி உட்காருங்க..!
(ஆசிரியை நாற்காலியிலும், மாணவமணிகள்
தரையிலும் அமர்கின்றனர். தியாகி சாப்பிடும் தட்டில்
இருக்கும் உணவை ஆசிரியை மல்லிகா பார்வையிட்டபடி.....)
மல்லிகா: (ஆச்சரியமாக) ஐயா..! தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமல் சாப்பிடுகிறீர்களே...!
தியாகி: உங்களுக்கு ஒன்று தெரியுமா? சாப்பாட்டுக்கு சிறந்த தொட்டுக்கை "பசி'தான். பசித்தவனுக்கு தொட்டுக்கொள்ள ஏதும் தேவைப்படாது. பசியே தொட்டுக்கைதான்..!
(அதைக் கேட்டு அனைவரும் சிரிக்கின்றனர்).
மல்லிகா: இந்த வயதிலும் "பசி' எடுக்கிறதே..! அதுவே நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதன் அடையாளம்தான்.
தியாகி: உடம்பில் தேவையற்றதை திணிக்காத வரைக்கும் தேகம் ஆரோக்கியமாக இருக்கும்..! (மாணவன் செல்வம் குண்டாக இருப்பதைப் பார்த்து விட்டு.....) தம்பி..! நீ கொஞ்சம் உடம்பைக் கவனித்துக் கொள்ள வேண்டும்...!
(அனைவரும் சிரிக்கின்றனர். கவிதா அனைவரும் அருந்த மோர் கொண்டு வந்து கொடுக்கிறார். தியாகி மெல்ல எழுந்து சென்று கைகளைக் கழுவி விட்டு வந்து கயிற்றுக் கட்டிலில் அமர்கிறார்).

தியாகி: பள்ளி வளாகத்துக்கு வெளியே ஆசிரியர்கள், மாணவர்கள் ஒற்றுமையைப் பார்க்கும் போது, இந்த சமூகத்தின் மேலேயே ஒரு மதிப்பு ஏற்படுது..! "மாணவர்களுக்கு மதிப்பு அளிப்பதுதான் கல்வி வெற்றியின் ரகசியமாகும்' என்று மேல் நாட்டு அறிஞர் எமர்ஸன் கூறியுள்ளார். மகாத்மா காந்தியடிகளைக் கவர்ந்த மூன்று எழுத்தாளர்களில் அவர் ஒருவர்.
ஆசிரியர்கள் மாணவர்களை மதிக்கும்போது, மாணவர்களும் ஆசிரியர்களை மதிப்பார்கள். மதிப்போடு மதிப்பு சேரும்போது அது விலை மதிப்பற்றதாகி விடும். ஆசிரியர்கள்-மாணவர்கள் உறவு அப்படிப்பட்டதாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஓர் உதாரணமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது...! அது இருக்கட்டும்... நீங்கள் வந்த விஷயத்தைக் கூறுங்கள்..!

மல்லிகா: ஐயா..! நமது பாரதத்தின் 74-ஆவது சுதந்திர தின விழாவை பள்ளி வளாகத்தில் கொண்டாட இருக்கிறோம்.

மாணவன் செல்வம்: ஆமாம் ஐயா..! நீங்கள் வந்து விழாவுக்கு தலைமை வகித்து, ஆசியுரை வழங்க வேண்டும்..!

தியாகி: உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி..! நான் 15.8.1927 -இல் பிறந்தேன். 13 வயது முதல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தேன். நாடு சுதந்திரம் அடைந்தபோது எனக்கு வயது 20. இப்போது 93 வயது ஆகிவிட்டது. வெளியில் வர உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இங்கிருந்தே உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்..!
மாணவி சத்யகாந்தி: ஐயா...! மாணவ, மாணவிகள் சார்பாக சுதந்திர தினத்தன்று உங்களுக்கு ஒரு பொன்னாடை அணிவிக்க விரும்புகிறோம். அதனைத் தாங்கள் அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தியாகி: (சிரித்தபடி) அப்படியா...! சரி..! சரி..! ஆனால், பளபளக்கும் ஜிகினா துணியை வாங்காதீர்கள்..! அது உபயோகப்படாது..! கதர் சால்வை வாங்குங்கள்..! குளிருக்குப் போர்த்திக்கொள்ள வசதியாக இருக்கும்..!
மாணவி: சரிங்க ஐயா..! கதர் சால்வையே வாங்கி விடுகிறோம்.

பரமசிவம்: நன்றி ஐயா...! நாங்கள் புறப்படுகிறோம்..!
தியாகி: கொஞ்சம் இருங்கள்..! மாணவர்கள் கையில் உண்டியல் வைத்திருக்கிறார்களே..! விழாவுக்கு நன்கொடை வசூலிக்கத்தானே..! நானும் கொஞ்சம் நன்கொடை தருகிறேன்..!
சத்யகாந்தி: வேண்டாம் ஐயா..! சுதந்திரப் போராட்ட வீரரான உங்களிடமே வசூலித்து, உங்களுக்கு மரியாதை செய்வது சிறப்பாக இருக்காது...! எங்கள் பள்ளி ஆசிரியர்கள் பத்து பேரும் தலா ரூ.50. பள்ளி மாணவர்கள் 90 பேரும் தலா ரூ.20 நன்கொடை அளித்துள்ளார்கள். விழாச் செலவுக்கு இதுவே போதும் ஐயா..!
தியாகி: சபாஷ்..! மாணவி சத்ய காந்தி அருமையாகப் பேசுகிறார். இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது!
(அனைவரும் சத்யகாந்தியைப் பெருமையுடன்
பார்க்கின்றனர். தியாகி சண்முகம் உள்ளே திரும்பி,
பேத்தி கவிதாவை அழைக்கிறார்).
தியாகி: கவிதா...!
கவிதா: சொல்லுங்க தாத்தா..!
தியாகி: சுதந்திர தின விழாவுல இவங்களோட நீயும் கொஞ்சம் கூடமாட உதவி செஞ்சின்னா நல்லாருக்கும்..!
கவிதா: அப்படியே செய்யறேன் தாத்தா..!
தியாகி: ரொம்ப சந்தோஷம்மா..! போயிட்டு வாங்க..!
கவிதா: வாங்க போகலாம்...!
(அவர்களுடன் கவிதாவும் சேர்ந்துகொள்ள...
அனைவரும் வெளியே வருகின்றனர். கவிதாவின்
இருசக்கர வாகனத்தில் மல்லிகா அமர்ந்துகொள்ள,
ஆசிரியர், மாணவர்கள் மற்றும் மாணவிகள் அவரவர்
சைக்கிள்களில் புறப்படுகின்றனர்).

காட்சி - 2
இடம்: பள்ளி வளாகம்.
மாந்தர்: தலைமை ஆசிரியை மல்லிகா, ஆசிரியர்
பரமசிவம், மாணவர்கள் செல்வம், முருகன்,
தியாகியின் பேத்தி கவிதா.

மல்லிகா: டைலர் மைதீன் கடையில் மூவர்ணக் கொடியைத் தைத்துக் கொள்ளலாம். கொடிக் கயறு டவுனில் சென்று வாங்கி வரவேண்டும். வேலு கடையில் இனிப்புகளை வாங்கலாமா?
கவிதா: ஓ...! தாராளமாக வாங்கலாம்..! கோலமாவு, பூக்கள் எல்லாம் வாங்க வேண்டும் அல்லவா...?
மல்லிகா: ஆமாம்..!
கவிதா: அப்படியானால் இப்பொழுதே புறப்பட்டால்தான் பொழுது சாயும் முன்பு திரும்பி வரலாம்..!
மல்லிகா: இதோ... சத்யகாந்தி இப்போது வந்து விடுவாள். உண்டியல் அவளிடம்தான் இருக்கிறது. உண்டிலைத் திறந்து பணத்தை எண்ணி, சரிபார்த்து எடுத்துக் கொண்டு நாம் புறப்படலாம்.
கவிதா: பத்து ஆசிரியர்கள் தலா ரூ.50 என்றால் மொத்தம் ரூ.500. தொண்ணூறு மாணவர்கள் தலா ரூ.20 என்றால் மொத்தம் ரூ.1,800. ஆக மொத்தம் ரூ. 2,300 வரும்.
மல்லிகா: ஆமாம்... நீ சொல்வது சரிதான்..! எதெதெற்கு எவ்வளவு என்று இப்போதே கணக்கு போட்டு வைத்துக் கொள்ளலாம்.
(கவிதா ஒரு பேப்பரில் செலவுக் கணக்கு எழுதுகிறாள். அப்போது மாணவர்கள் செல்வமும், முருகனும்
அங்கு வருகின்றனர்).
மல்லிகா: என்னடா... நீங்க மட்டும் வர்றீங்க..? சத்யகாந்தியும், சுபாஷினியும் எங்கே...?
முருகன்: டீச்சர்...! நாங்கள் கீழ வீதி வழியாக வந்தோம். அவர்கள் மேல வீதி வழியாக வருவதாகக் கூறினார்கள்..!
செல்வம்: எங்களுக்கு முன்னாலேயே வந்திருப்பார்கள் என்று நினைத்தோம். இன்னும் வரவில்லையா?
மல்லிகா: வழியில் ஏதாவது பிரச்னையா? என்று தெரியவில்லை...! எதற்கும் நீங்கள் போய் பார்த்துவிட்டு வர்றீங்களா...?
முருகன், செல்வம்: சரி... டீச்சர்...!
மல்லிகா: சீக்கிரம் போங்க...!
(இருவரும் தங்கள் சைக்கிள்களில் வேகமாகச்
செல்கின்றனர்).

காட்சி - 3
இடம்: மேல வீதி.
மாந்தர்: மாணவர்கள் செல்வம், முருகன்,
மாணவிகள் சத்யகாந்தி, சுபாஷினி.

(இரண்டு சைக்கிள்கள் வேறு வேறு இடங்களில்
நிறுத்தப்பட்டு இருக்கின்றன. சத்யகாந்தி தேம்பித் தேம்பி அழுதுகொண்டு இருக்கிறாள். சுபாஷினி
பரபரப்பாக அங்கும், இங்கும் எதையோ தேடிக் கொண்டு இருக்கிறாள். செல்வமும், முருகனும்
அங்கு வருகின்றனர்).
செல்வம்: சுபா... நீ என்ன தேடறே..? சத்யா ஏன் அழுதுகிட்டு இருக்கா?
சுபாஷினி: வர்ற வழியில சத்யகாந்தி தாகமாக இருக்கு... தண்ணி குடிச்சுட்டு போலாம்னு சொன்னா...! பக்கத்துல இருக்கிற லைப்ரரிக்குள்ள போயி தண்ணி குடிச்சுட்டு வந்தோம். அவளோட சைக்கிள் கீழ விழுந்து கிடந்தது. பசுமாடு தள்ளி விட்டுடுச்சுன்னு ரோட்டோரம் கடை வைச்சிருக்கிற பாட்டி சொன்னாங்க...! அப்பறம் பாத்தா... சைக்கிள் முன்புறக் கூடையில வைச்சிருந்த உண்டியலைக் காணோம்..! உண்டியலைப் பாத்தீங்களான்னு பாட்டி கிட்ட கேட்டோம். அவங்க பாக்கலைன்னு சொல்லிட்டாங்க...! அதான் சத்யா அழுதுகிட்டு இருக்கா..!
செல்வம்: ஐய்யய்யோ...! இப்போ என்ன பண்றது? டீச்சர்கிட்ட என்ன பதில் சொல்றது? சுதந்திர தின விழாவை எப்படிக் கொண்டாடுறது...?
சத்யகாந்தி: (அழுதுகொண்டே) கிளாஸ் லீடர்ன்னு ரொம்ப திமிரா நடந்துகிட்டேன்...! அதுக்கு கடவுள் தண்டனை கொடுத்துட்டாரு..!
முருகன்: சரி... சரி... அழுவாதே...! டேய்...வர்ற வழியில வேற எங்கேயாவது விழுந்திருக்கான்னு நாமளும் தேடிப் பாப்போம்...!
செல்வம்: சரி...! வா...!
(சத்யகாந்தி அழுவதைப் பார்த்து சுபாஷினியும் அழுகிறாள்).

காட்சி - 4
இடம்: மேல வீதி.
மாந்தர்: தலைமை ஆசிரியை மல்லிகா, ஆசிரியர்
பரமசிவம், மாணவர்கள் செல்வம், முருகன், கவிதா, மாணவிகள் சத்யகாந்தி, சுபாஷினி.

(வெகு நேரமாக மாணவர்களைக் காணாமல்
அனைவரும் தேடி வருகின்றனர். சத்யகாந்தி அழுதபடி நடந்தவற்றைக் கூறுகிறாள்....!)
மல்லிகா: (வருத்தமுடன்) சின்னப் பசங்ககிட்ட பொறுப்பை ஒப்படைச்சது தப்பாயிடுச்சே...! இப்போ எப்படி விழாவைக் கொண்டாடுறது...?
கவிதா: டீச்சர்..! காணாம போன உண்டியலைப் பத்திக் கவலைப் பட இப்போ நேரமில்லை..! தாத்தாவோட பென்ஷன் பணம்; ஏடிஎம் கார்டு என்கிட்ட இருக்கு...! அதை வைச்சி விழாச் செலவைப் பார்ப்போம்..!
(சத்யகாந்திக்கு ஆறுதல் கூறி அழைத்துச் செல்கின்றனர்.)

காட்சி - 5
இடம்: பள்ளி வளாகம்.
மாந்தர்: தலைமை ஆசிரியை மல்லிகா, ஆசிரியர்
பரமசிவம், மாணவர்கள் செல்வம், முருகன், கவிதா, பால்காரர் முனுசாமி, மற்றும் பலர்).

(சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது... தேசியக் கொடி ஏற்றி, தேசியகீதம் பாடுகின்றனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்படுகின்றன...! சத்யகாந்தி மட்டும் இனிப்பை சாப்பிடாமல் இருக்கிறாள்...!
அப்பொழுது பால்காரர் முனுசாமி அங்கு வருகிறார்)
மல்லிகா: வாங்க முனுசாமி....! இனிப்பை எடுத்துக்கோங்க..! உங்க பையனும் நம்ம ஸ்கூல்தானே..!
முனுசாமி: ஆமாங்க... சேகர் என் பையன்தான். நேத்து என் பால் குவளையில இந்த உண்டியல் கிடந்ததுங்க..! நேத்து பசுமாட்டை ஓட்டி வரும்போது ஒரு சைக்கிளை தள்ளிவிட்டுது. அப்போ இந்த உண்டியல் தவறி என் பால் பாத்திரத்துல விழுந்திடுச்சு போலருக்கு...! காலையிலதான் பார்த்தேன். பள்ளிக்கூடம் பேரு போட்டிருந்தது...! அதான் எடுத்துகிட்டு ஓடியாந்தேன்..!
(அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி..!
சத்ய காந்தி இனிப்பை சாப்பிடுகிறாள்..!)

-திரை-
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com