கூட்டு முயற்சி!: பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சின்னஞ்சிறு கதை!

அன்பு நகரின் பிரதான தெருவில் நின்று கொண்டிருந்த  ஆட்டோவில் இருந்து ஒலிபெருக்கி சப்தம்!..... 
கூட்டு முயற்சி!: பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சின்னஞ்சிறு கதை!


அன்பு நகரின் பிரதான தெருவில் நின்று கொண்டிருந்த  ஆட்டோவில் இருந்து ஒலிபெருக்கி சப்தம்!..... 

""அன்புள்ள மாணவ மணிகளே... பெற்றோர்களே.... பொதுமுடக்கம் காரணமாக வீட்டுக்குள் முடங்கியிருக்கும் குழந்தைகளின் தோட்டக்கலைத் திறனை அறிய ஒரு சிறந்த வாய்ப்பு. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போட்டி இது! செடி வளர்ப்பில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு விதைப் பந்துகளும்..., உரப் பைகளும்... இலவசமாக வழங்கப்
படும். முப்பது நாள்கள் கழித்து வந்து பார்வையிட்டு, சிறந்த முறையில் செடிகளை வளர்த்த குழந்தைகளுக்கு நகராட்சி அதிகாரி மூலம் பரிசுகள் வழங்கப்படும்..!'' 

அறிவிப்பைக் கேட்டதும் ஒரே பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மகேஷும், நரேஷும், மாணவி நிம்மியும் துள்ளிக் குதித்து ஓடினர். 

அந்த ஆட்டோவின் அருகில் நின்றிருந்த இரட்டை மாட்டு வண்டியில் ஏராளமான விதைப் பந்துகளும், உரப் பைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்பகுதியில் இருந்த மாணவ, மாணவிகள் பலர் அந்த இடத்துக்கு வந்து குவிந்துவிட்டனர். 

அவர்களை வரிசையில் நிற்க வைத்து, பெயர், முகவரி எழுதிக்கொண்டபின், அனைவருக்கும் விதைப் பந்துகளும், உரப் பைகளும் வழங்கப்பட்டன.

மகேஷ், நரேஷ், நிம்மி மூவரும் ஆளுக்கு மூன்று வீதம் மொத்தம் ஒன்பது விதைப் பந்துகளை வாங்கிக்கொண்டனர். 

மகேஷ் விதைப் பந்துகளுடன் வீட்டில் நுழைந்ததும், அவன் அப்பாவும், அம்மாவும் அவனிடம் கோபம் கொண்டனர்.

""நமது வீட்டில் செடி வளர்க்க   ஏது இடம்? நீ ஏன் மூன்று விதைப்பந்துகளை வாங்கி வந்தாய்? இவற்றை வீணாக்காதே! வேறு யாரிடமாவது கொடுத்து விட்டு வா..!'' என்று கண்டிப்புடன் கூறினர். 

""கோவப்படாதீங்க... ரெண்டு பேரும் நான் சொல்றதை பொறுமையா கேளுங்க. இந்த விதைப் பந்துகளை நம் வீட்டில் வளர்க்க முடியாவிட்டால் என்ன...? இவை வேறு எந்த இடத்தில் வளர்ந்தாலும் நமக்கு சந்தோஷம்தானே..!'' 
""ஆமாம்... அதற்காக இந்த விதைகளை எங்கே வைத்து வளர்க்கப் போகிறாய்..?''
""அதற்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்... அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமா..? இன்னும் 30 நாள்கள் காத்திருக்கணும்...'' என்று சஸ்பென்ஸாக கூறிவிட்டு வெளியே ஓடினான் மகேஷ். 
அன்று முதல் அவன் செடி வளர்ப்பில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்தான். முப்பது நாள்கள் கடந்தன...
அன்பு நகருக்கு வந்த நகராட்சி அதிகாரி ஒவ்வொரு வீடாக வந்து குழந்தைகள் வளர்த்த செடிகளைப் பார்வையிட்டார். பல செடிகள் வாடி வதங்கியிருந்தன. பல செடிகள் வளரவில்லை. அதைப் பார்த்து அதிகாரியின் முகம் வாடியது. "குழந்தைகள் போட்டி போட்டுக்கொண்டு விதைப் பந்துகளை வாங்குவதில் காட்டிய ஆர்வத்தை செடிகளை வளர்ப்பதில் காட்டவில்லை' என்பதை அறிந்து மனம் வருந்தினார். 
இறுதியாக அதிகாரி நரேஷ் வீடு மற்றும் நிம்மி வீட்டுத் தோட்டத்துக்கு வந்தார். அங்கே அவர் கண்ட காட்சியில் அவர் முகம் மலர்ந்தது. அங்கிருந்த அனைத்து செடிகளும் பூத்திருந்தன..!
""நரேஷுக்கும், நிம்மிக்கும் முதல் பரிசைக் கொடுத்துவிடுவோம்!'' என்று அதிகாரி உற்சாகமாகக் கூறினார். அப்போது அதனை நரேஷும், நிம்மியும் மறுத்தனர். 
""இல்லை சார்... மகேஷ் வீட்டில் செடி வளர்க்க இடமில்லை. அதனால் எங்கள் இருவரின் வீட்டில் அவனது விதைப்பந்துகளை விதைத்தான். மகேஷ் ஆழமாகக் குழி தோண்டி விதைகளைப் புதைத்தான். நரேஷ் உரங்களைப் போட்டான். நான் பூவாளியில் நீர் பாய்ச்சினேன்.'' என்றாள் நிம்மி.
""சில நாள்களில் விதைகள் வளர ஆரம்பித்தன. மகேஷ் வந்து செடிகளுக்கு நன்றாக வேர்ப் பிடிக்கும் வகையில் பாத்திகளைக் கட்டிக்கொடுத்தான். எங்கள் செடிகள் நன்றாக வளர்வதற்கும் அவன்தான் ஆலோசனைகளைக் கூறினான். செடிகள் சீக்கிரம் நன்றாக வளர வேண்டும். மண்ணில் நன்றாக வேரூன்ற வேண்டும் என்ற மகேஷின் அக்கறைதான் இதற்குக் காரணம்.'' என்றான் நரேஷ். 
""கூட்டு முயற்சிக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பதற்கு மகேஷ் ஓர் உதாரணம்!'' என்று கூறிய அதிகாரி மகேஷையும், அவனது அப்பா, அம்மாவையும் மனம் நிறையப் பாராட்டி பரிசுகளைத் தந்து வாழ்த்தினார்..! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com