அரங்கம்:  தந்திர மான்கள்!

(புத்தகப்பையை தோளிலிருந்து டேபிளில் இறக்கிவைத்துக்கொண்டு பெருமூச்சுடன்) அப்பாடா!
அரங்கம்:  தந்திர மான்கள்!

காட்சி 1
நேரம்: மாலை 4 மணி
இடம்: விமலின் வீடு
பாத்திரங்கள்: விமல், தாத்தா, அம்மா
(பள்ளியிலிருந்து வீட்டுக்குள் நுழைகிறான் விமல்)

விமல்: (புத்தகப்பையை தோளிலிருந்து டேபிளில் இறக்கிவைத்துக்கொண்டு பெருமூச்சுடன்) அப்பாடா!
(ரிமோட் கண்ட்ரோலைக் கையில் எடுத்துக்கொண்டே டிவி சுவிட்சைப் போடுகிறான்)

விமல்: (ஏமாற்றத்துடன் முணுமுணுக்கிறான்) சே! 
கரண்ட் இல்லையா! 
(சற்றுத் தள்ளி நாற்காலியில் அமர்ந்திருந்த தாத்தா இதைக் கவனிக்கிறார்)

தாத்தா: (விசிறியால் விசிறிக்கொண்டே) கார்ட்டூன் சேனல் பார்க்க முடியாமப் போச்சா?
விமல்: ஆமா தாத்தா! வெளியே போனா அம்மா திட்டுவாங்க. வெயில் காலத்துல சாயங்காலம் ஆறுமணிவரை வெயில் அடிக்கும் அதனால ஆறுமணிக்கு மேலதான் ஃப்ரெண்ட்ûஸ பார்க்கப் போகணும்னு அம்மா கண்டிஷன் போட்டுட்டாங்க. ஏழுமணிக்குத்தான் ஹோம் ஒர்க் செய்யணும். மணி இப்பத்தான் நாலாகுது. ரெண்டு மணிநேரம் போரடிக்குமே தாத்தா. அதான் என்ன செய்யறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.
(இருவரும் சிலநொடிகள் மௌனமாக 
இருக்கின்றனர்)

விமல்: ஐடியா! நான் நைசா கிரவுண்டுக்குப் போயிடறேன். நீங்க அம்மாக்கிட்ட சொல்லிடாதீங்க. புத்தகப்பையை எடுத்து ஒளிச்சு வச்சுடறேன் வரும்போது உங்களுக்கு சாக்லேட் வாங்கிட்டு வர்றேன்
அம்மா: (சமையலறையிலிருந்து ஹாலுக்குள் நுழைந்துகொண்டே) தாத்தாவும் பேரனும் என்ன திட்டம் போட்டுக்கிட்டு இருக்கீங்க?
(கையில் எடுத்து வந்திருந்த காபியை தாத்தாவுக்கும் பேரனுக்கும் கொடுக்கிறார்)

விமல்: ஒண்ணூமில்லம்மா! சும்மா பேசிக்கிட்டிருந்தோம்.
அம்மா: உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா! கிரவுண்டுக்கு விளையாடப் போறதுக்குத்தானே திட்டம் போட்டே?
விமல்: (மனதுக்குள்) அம்மாகிட்டயிருந்து எதையும் மறைக்க முடியலையே! அதுக்கான திறமை என்கிட்ட இல்லையோ?
அம்மா: கைகால் அலம்பிட்டுவந்து காபியைக் குடி!
(அம்மா செல்கிறார். பாத்ரூமுக்குள் சென்று முகம், கைகால்களை கழுவிவிட்டு காபியைக் குடிக்கிறான் விமல்)

காட்சி 2
இடம்: விமலின் வீடு 
பாத்திரங்கள்: தாத்தா, விமல்
(அடுத்து என்ன செய்யலாம் என யோசனையுடன் தாத்தாவின் அருகிலிருக்கும் இன்னொரு நாற்காலியில் அமர்கிறான் விமல்)

தாத்தா: (விமலின் ஏமாற்றம் நிறைந்த முகத்தைப்பார்த்து) கரண்ட் இல்லாட்டி என்ன? நான் உனக்குக் கதை சொல்றேன். எங்கிட்ட நிறைய கதையிருக்கு.
விமல்: என்ன கதை தாத்தா?
தாத்தா: ரெண்டு மான்களோட கதை
விமல்: (ஆர்வத்துடன்) கதையோட பேரு?
தாத்தா: "தந்திர மான்கள்!'
விமல்: நீங்க எவ்வளவுதான் கதையை விவரிச்சுச் சொன்னாலும் கார்ட்டூன்படம் பார்க்கிறமாதிரி இருக்காதே தாத்தா!
தாத்தா: டிவில பொம்மைப்படம் பார்க்கறதைவிட இந்தமாதிரி இன்னொருத்தர் கதைசொல்லி அதைக் கேக்கறது எப்பவும் நல்லது. அந்தக் காலத்துல என்னோட அம்மா எத்தனை கதைகள் எனக்குச் சொல்லியிருக்காங்க தெரியுமா! (பெருமூச்சு விடுகிறார்) கதையை புத்தகத்துல படிக்கிறது அதைவிட நல்லது. அப்பத்தான் மொழியை நல்லா புரிஞ்சுக்கமுடியும். நான் கதையை விவரிச்சுச் சொல்லும்போதோ, புத்தகத்துல படிக்கும்போதோ அந்தக் கதை உன்னோட மனசுல படம்மாதிரி ஓடும். அப்ப, அந்தக் கதை நடக்கிற இடத்தையும், சூழ்நிலையையும் உன்னோட கற்பனையில உருவாக்கிக்குவ. உன்னோட மூளையும் விரிவடையும். ஆனா, பொம்மைப்படம் பார்க்கிறப்ப இதெல்லாம் நடக்காது. வெறும் பிரமிப்பு மட்டுமே உருவாகும்
விமல்: நீங்க கதையைச் சொல்லுங்க தாத்தா. நீங்க சொன்னமாதிரி இருக்குதான்னு பார்க்கிறேன்!
தாத்தா: மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கிற ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு காடு!
விமல்: ஆரம்பமே பயங்கரமா இருக்கு தாத்தா. ரொம்ப திரில்லிங்கா இருக்குமா?
தாத்தா: கதை முழுவதையும் கேட்டு முடிச்சதும் இது திரில்லிங்கான கதையா, இல்லையான்னு நீயே முடிவு பண்ணிக்க. நீ எத்தனை பொம்மைப்படம் பார்த்திருப்ப. அதுல வர்றமாதிரி ஒரு காட்டை நீயே உன்னோட கற்பனையில உருவாக்கிக்க! அந்தக் காட்டுல "ஜாக்', "டிங்கு'ன்னு ரெண்டு மான்கள் இருந்ததுங்க.
விமல்: அவ்வளவு பெரிய காட்டுல ரெண்டே ரெண்டு மான்கள்தான் இருந்துச்சா தாத்தா?
(தாத்தா முறைத்துப் பார்த்தபடி எதையோ சொல்ல முயன்றார். அதற்குள் மீண்டும் விமல் பேச ஆரம்பித்தான்)

விமல்: ரெண்டு மான்களும் அண்ணன் தம்பிங்களா?
தாத்தா: இல்ல! ரெண்டும் நல்ல நண்பர்கள்!
விமல்: நானும் லாரன்சும் மாதிரி!
தாத்தா: அப்படியே வச்சுக்க. எப்பவுமே ரெண்டு மான்களும் சேர்ந்தே விளையாடுங்க. எங்கே போனாலும் சேர்ந்தே போகுங்க! அப்படியிருக்கும்போது, ஒருநாள், "ஜாக்'கைத் தேடி டிங்கு போயிக்கிட்டு இருந்துச்சு. அப்ப, வழியில ராஜாங்கிற சிங்கம் நாக்கை சுழட்டிக்கிட்டு வந்து டிங்கு முன்னால ஜங்குன்னு குதிச்சிச்சு!
விமல்: அய்யய்யோ! அப்புறம்? ராஜாசிங்கம் கையில மாட்டுச்சுன்னா இட்லிக்குச் சட்னியாயிடுமே தாத்தா!.....
தாத்தா: உன்னைமாதிரியே டிங்குவும் ஒருநொடி திகைச்சுப்போய் சிலைமாதிரி நின்னுடுச்சு. அடுத்தநொடியே சுதாரிச்சுக்கிட்டு ஓட ஆரம்பிச்சிச்சு. ராஜா சிங்கமும் துரத்த ஆரம்பிக்குது. டிங்குவும் செடிகொடி, மரங்களுக்கிடையில உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு ஓடுது. ராஜா சிங்கமும் "விட்டேனா பாரு'ன்னு துரத்திக்கிட்டே இருக்குது. டிங்குவுக்கு மூச்சுவாங்க ஆரம்பிச்சிடுச்சு. இதயம் கன்னாபின்னான்னு துடிச்சுது!
விமல்: கடவுளே! டிங்குவை எப்படியாவது காப்பாத்து!
தாத்தா: நீ வேண்டிக்கிட்டது நல்லதாப் போச்சு! அங்கே பார்த்தியா! கடவுள்
மாதிரி!.
விமல்: (இடைமறித்து) கஜாங்கிற யானை வந்துச்சா தாத்தா?
தாத்தா: (சிரித்துக்கொண்டே) இல்ல! டிங்குவோட நண்பன் ஜாக் அங்கே வந்துக்கிட்டு இருக்குபாரு.
விமல்: சிங்கத்துக்கிட்ட எப்படித் தாத்தா மான் சண்டைபோட்டு ஜெயிக்கமுடியும். ஜாக், ஜிம்முக்குப்போய் பாடிபில்டிங் பண்ணிக்கிச்சா?
தாத்தா: ஹா! ஹா! நீயும் கற்பனை பண்ண ஆரம்பிச்சுட்டியே! இப்பத்தான் நீ ஒண்ணை தெரிஞ்சுக்கப் போறே! உடம்புமட்டும் பெருசாவும் பலமாவும் இருந்தா பத்தாது. மூளையும் பலமா இருக்கணும். புத்தியுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்னு சொல்வாங்கள்ல!.
விமல்: அட்வைஸ் செஞ்சது போதும் தாத்தா! கதையைச் சொல்லுங்க. சஸ்பென்ஸ் தாங்கமுடியல!
தாத்தா: சிங்கத்துக்கிட்ட தன்னோட நண்பன் இப்படிவந்து மாட்டிக்கிட்டானே! சிங்கமும் அவ்வளவு சீக்கிரம் டிங்குவை விட்டுடாதேன்னு ஒரு நொடி திகைச்சுப் போச்சு ஜாக். உடனே சுதாரிச்சிக்கிட்டு ஒரு ஐடியா பண்ணுச்சு. வேகமா ஓடி டிங்குவுடன் சேர்ந்து ஓட ஆரம்பிச்சிடுச்சு. ரெண்டுபேரும் சரிக்குச் சம்மா ஓடறாங்க. டிங்குவுக்குக் குழப்பமாயிடுச்சு. "ராஜா சிங்கத்துக்கு இன்னைக்கு ரெண்டு சாப்பாடா'ன்னு யோசிச்சுச்சு. அதுக்கு ஒண்ணும் புரியல. ..."நான் தான் ஆபத்துல மாட்டிக்கிட்டேன். நீயும் எதுக்கு இப்படிவந்து சிக்கிக்கிட்ட?' ன்னுகிட்டே மூச்சுவாங்கியபடி கேட்டுச்சு. அதுக்கு ஜாக், "டே மடையா! அதோ தெரியுதுபாரு! அந்தப் புதருக்குள்ள போய் ஒளிஞ்சுக்க. நல்லா ரெஸ்ட் எடு! நான் ரெண்டுமூணு நிமிஷத்துக்கு ராஜா சிங்கத்துக்கு போக்குக்காட்டி ஓடி இதே இடத்துக்கு மீண்டும் வருவேன். அப்ப என்னைமாதிரியே நீயும் என்னோட சேர்ந்து ஓடி வரணும் புரியுதா?'னு சொன்னுச்சு.
விமல்: நண்பனுக்காக தன்னோட உயிரையே கொடுக்கப்போகுதா தாத்தா! (சிலநொடிகள் யோசித்து, குழப்பத்துடன்) அப்படிக்கூட இதை எடுத்துக்க முடியாதே. மீண்டும் இதே இடத்துக்கு வருவேன்னு சொல்லுதே ஜாக்? எதுக்குன்னு புரியலையே!
தாத்தா: தன் நண்பன் சொன்னமாதிரியே கண்ணிமைக்கும் நேரத்துல புதருக்குள்ள ஓடி ஒளிஞ்சுக்கிச்சு டிங்கு! சிங்கத்துக்கு குழப்பமாயிடுச்சு.... " இந்த மானுங்க நம்ம முன்னால ஓடுச்சே. இன்னைக்கு டபுள் சாப்பாடுன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன். அதுக்குள்ள ஒரு மான் டஸ்க்னு மறைஞ்சுடுச்சே'...ன்னு யோசிச்சுக்கிட்டே "இந்த மானை விட்டுடக்கூடாது'... ன்னு ஜாக்கை தொடர்ந்து துரத்துது. ஜாக், அந்தக் காட்டையே ஒரு சுத்து சுத்திவந்து மீண்டும் டிங்கு ஒளிஞ்சிருக்கிற இடத்துக்கு வந்துச்சு. அதுக்குள்ளாற டிங்கு நல்லா ரெஸ்ட் எடுத்துக்கிட்டு ஃப்ரெஷ் ஆகியிருந்துச்சு. ஜாக்கை எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஜாக், டிங்கு அருகே ஓடிவரவும், ரெண்டும் மீண்டும் சேர்ந்து ஓட ஆரம்பிச்சதுங்க.  அங்கே பார்த்தியா! இன்னொரு புதர் தெரியுது. அதுக்குள்ள நான் போய் ஒளிஞ்சுக்கிறென். நீ தொடர்ந்து போக்குக்காட்டி ஓடிட்டு மீண்டும் இதே இடத்துக்கு வான்னு சொல்லிட்டு டஸ்சுன்னு புதருக்குள்ள மறைஞ்சுக்கிச்சு ஜாக்!
விமல்: எனக்குப் புரிஞ்சுபோச்சு தாத்தா. இப்படியே ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து நாலைஞ்சு ரவுண்டு ஓடிஓடி ராஜா சிங்கத்தை டயர்டாக்குறதுதான் மான்களோட தந்திரம். இல்லையா தாத்தா?
தாத்தா: சரியாச் சொன்ன விமல்! டிங்கு புரிஞ்சுக்கிட்டமாதிரியே நீயும் புரிஞ்சுக்கிட்டியே. நீ சொன்னமாதிரியே நாலாவது ரவுண்டுல ராஜா சிங்கத்துக்கு நாக்கு வெளியே தள்ளிடுச்சு. மூச்சுவாங்கிப்போய் பேசாம ஒரு இடத்துல படுத்துக்கிச்சு. ஜாக்கும் டிங்குவும் சந்தோஷமா புல்வெளியை நோக்கி ஓட ஆரம்பிச்சதுங்க. இதுல இருந்து உனக்கு என்ன புரியுது?
விமல்: (உற்சாகமாக) உடல்மட்டும் பலமா இருந்தா பத்தாது. புத்திசாலித்தனமாவும் இருக்கணும்னு புரியுது. ரெண்டு மான்களையும் மாத்திமாத்தி துரத்துனா ஒரு மானைக்கூட உருப்படியா பிடிக்கமுடியாதுன்னு சிங்கத்துக்குத் தெரியல. சுதாரிப்பா இருந்திருந்தா புதருக்குள்ள ஒளிஞ்சுகிட்ட மானை ஒரே ரவுண்டுல பிடிச்சிருக்கும்

(கதை முடியவும் கரண்ட் வரவும் சரியாக இருந்தது)

தாத்தா: போய் டிவியைப் போட்டுப்பாரு!
விமல்: வேண்டாம் தாத்தா. நீங்க சொன்ன கதையே கார்ட்டூன்படம் பார்த்தமாதிரி இருந்துச்சு!

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com