அரங்கம்: மிஸ்டர் க்யூ!
ராம் - அப்பா ஒரு சந்தேகம்.... விமானம் எப்படி மேலே பறக்குது?.... உலோகத்தால் ஆன உடல், இறக்கைகள், மனிதர்கள் எஞ்சின் டயர் இதெல்லாம் தூக்கிக் கிட்டு...?


காட்சி - 1
இடம் - இல்லம்
மாந்தர் - அப்பா வைத்யநாதன், அம்மா பார்வதி,
குழந்தைகள் ராம், ப்ரியா.
ராம் - அப்பா ஒரு சந்தேகம்.... விமானம் எப்படி மேலே பறக்குது?.... உலோகத்தால் ஆன உடல், இறக்கைகள், மனிதர்கள் எஞ்சின் டயர் இதெல்லாம் தூக்கிக் கிட்டு...? ஒரு பேப்பரே காற்றில் கொஞ்ச தூரம் போய் திரும்ப மண்ணில் விழும்போது...., இவ்வளோ வெய்ட்டைத் தூக்கி எப்படி மேலே போவுது?
ப்ரியா - பெட்ரோல் தான் மேலே தூக்குது!....
அப்பா வைத்யநாதன் - ஒரு பொருள் மேலே எழும்பணும் என்றால் ஏதாவது ஒரு சக்தி அதை உயரே தூக்கணுமா இல்லியா..பட்டம் எப்படி பறக்குது ?
ராம் - பட்டம் பறக்கும் போது காத்து பட்டத்தைத் தாங்கி பிடிக்கும்.. நூல் பட்டத்தை நம் கையைவிட்டு ஓடிவிடாமல் இழுத்துப் பிடிக்கும்.
அப்பா - அதே போலத்தான் விமானத்தை காற்று தான் தாங்குது. அதற்கு என்ன செய்யறாங்கன்னா எஞ்சின்கள் வேகமாகச் சுழலும் போது காற்றை உறிஞ்சி முன் பக்கமும் மேலேயும் தள்ளி விட்டு விடும். விமானத்தின் உடல் இறக்கைகள் அடியில் வேக்குவம் எனப்படும் காற்றுச் சூன்யம் உண்டாகும். அப்போது சூழ்ந்துள்ள காற்று அங்கே விரைவாக நிரம்பும்.. அந்த விசை விமானத்தை வானத்தில் தாங்கி தூக்கிப் பிடிக்கும்.
ராம் - அப்பா விமான நிலையத்தில் எதுக்கு இரண்டு மூன்று கிலோ மீட்டர் அளவுக்கு ஓடுபாதை அமைத்திருக்கிறார்கள் ?
அப்பா - விமானம் ஓடி மேலே எழ ஒரு உந்து விசை தேவைப்படும். மிக வேகமாக தன் உடலைத் தூக்கிக் கொண்டு ஓடும் விமானத்தின் எஞ்சின்கள் காற்றை உறிஞ்சி மேலே தள்ள அந்த இட த்தில் காற்று நுழைய விமானம் மேல் எழும்புகிறது
ராம் - இறங்கும்போது ஓடு தளத்தில் விமானம் எப்படி இறங்குகிறது?
அப்பா - விமானம் தான் இறங்க வேண்டிய விமான நிலையத்தை நெருங்கும்போது தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்குத் தொடர்ந்து கட்டளைகள் பிறப்பிப்பார்கள். விமானம் இறங்க வேண்டிய இடத்திற்கு நேராகத் தொலைவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும். பின் தாழ்வாக உயரத்தைக் குறைத்தபடி பறந்து தரையை முதலில் தன் பின் சக்கரங்களால் தொடும். முன் பின் சக்கரங்கள் தரையைத் தொட்டதும் தரையில் ஒரு லாரி போல விமானத்தை ஓட்டி வேகத்தைக் குறைத்துப் பின் பிரேக் போட்டு நிறுத்துவார்கள்!
ராம் - அப்பா, விமானம் இறங்குவது கஷ்டமா? மேலே ஏறிப் பறப்பது கஷ்டமா?
அப்பா - இரண்டுமே மிகச் சாமர்த்தியமாக அனுபவம் மிக்க விமானிகளால் செய்யப் படவேண்டும். இரண்டில் இறங்குவதே மிகக் கடினமாகக் கருதப்படுகிறது. தன் மொத்த எடையையும் தரை மட்டத்தில் இலகுவாக அதிர்ச்சி இல்லாமல் இறக்குவது சவாலானது! இறங்கும் போது வயிற்றில் உள்ளே அடங்கிய சக்கரங்கள் விரிந்து தரையில் ஓட ஏதுவாக செயல்பட வேண்டும்.
ராம் - அப்பா சக்கரங்கள் இறங்காவிட்டால் என்ன ஆகும்?
அப்பா - சிக்கல் தான்!.... அப்போது தான் பிரச்சினை ஆரம்பிக்கும்!..... விமானி பெல்லி லாண்டிங் எனப்படும் வயிற்றை தரையில் மோதி தேய்த்தபடி ஓடவிட்டு நிறுத்த வேண்டும்!.... அப்போது ஏற்படும் உராய்வால் தீப்பிடிக்க வாய்ப்புண்டு!.... அதனால் விமானத்தில் இருப்பு உள்ள பெட்ரோலை வானில் பறந்து காலி செய்து விடுவார் விமானி.
ராம் - அப்பா ஓடு பாதை நீளம் போதுமானதாக இல்லாவிட்டால் என்ன ஆகும்?
அப்பா - ஓடு பாதை நுனி வந்தும் விமானம் தரையில் முழுவதும் இறங்காவிட்டால் அப்போது மறுபடியும் மேலே உயர்த்தி பறந்து இன்னொரு முறை முயற்சிப்பார் விமானி.
ராம் - அப்பா இரவில் எப்படி இறக்குவார்கள்?
அப்பா - ஓடு பாதை விண்ணில் தெளிவாக கோடுமாதிரி தெரிய மிளிரும் விளக்குகளால் பளிச்சிடும். எஞ்சின் பழுதாகி விட்டால் அவசரமாக சில நேரங்களில் நெடுஞ்சாலைகளிலும் இறக்கி இருக்கிறார்கள்!
ராம் - அப்பா கப்பலில் இருந்து போர் விமானங்கள் எப்படி ஓடி மேலெழும்?
அப்பா - குறுகிய ஓடு பாதையில் ஒரு தள்ளு விசையால் விமானத்தை வேகமாகத் தள்ளவும் இறங்கிய விமானத்தை இழுத்துப் பிடிக்கவும் விசேஷ அமைப்புகள் உள்ளன. நாளைக்கு ஹெலிகாப்டர் பற்றி சொல்றேன்.
காட்சி - 2
இடம் - இல்லம்
மாந்தர் - ராம், ப்ரியா, அம்மா பார்வதி
அப்பா வைத்யநாதன்
(வைத்யநாதன் கையில் ஒரு புத்தகம் எடுக்கிறார்)
ராம், ப்ரியா இருவரும் - அப்பா ஹெலிகாப்டர் பற்றி சொல்றேன்னு சொன்னீங்களே....
ராம் - ஹெலிகாப்டருக்கு ஓடு தளம் தேவையா?
அப்பா - தேவையில்லை. அதன் இராட்சத இறக்கைகள் படுக்கை வாட்டில் தலைப் பகுதியில் சுற்றி காற்றை உறிஞ்சி மேலே தள்ள, காற்று அடிப்பகுதியில் தூக்கி விடும். அந்தப் பெரிய காற்றாடி ஹெலிகாப்டருடன் ஒரு பெரிய இரும்புத் தண்டால் இணைந்து, நட்டால் முடுக்கப்பட்டு இருக்கும். அது தான் மிக முக்கிய பாகம். அதை ஜீஸஸ் நட் அல்லது கடவுளின் நட் எனச் சொல்லுவார்கள். ரஷ்யாவில் எம் ஐ 26 எம் என்ற பெயருடைய இராட்சத ஹெலிகாப்டர்கள் வடிவமைத்து இருக்கிறார்கள். அது 25000 கிலோ வரை தூக்கிப் பறக்கும்! அதனுள் ஒரு பீரங்கி, 55 வீரர்கள் அமர வைத்துக் கொண்டு செல்ல முடியும்!
அம்மா பார்வதி - பசங்களா, சாப்பிட வாங்க எல்லோரும்.... அப்புறம் பறக்கிற கதை பேசலாம்.. அடடே ராம் நீ சாப்பிட்டதும் மொட்டை மாடியில் போய் இட்லி துணி காய வச்சேன் கொடியில்.... சித்தே எடுத்து வாயேன். அம்மாவுக்கு கால் முட்டி வலிக்குதுப்பா!
ராம் - தங்கையைப் போகச் சொல்லேன்....
ப்ரியா - ம் நான் போக மாட்டேன் இருட்டா இருக்கு தனியா போக பயமா இருக்கும். நீ போ.
காட்சி 3
இடம் - மொட்டை மாடி
மாந்தர் - ராம், க்யூ
(சாப்பிட்டவுடன் ராம் அங்கே சென்று கொடியில் காயும் துணியை கிளிப்பைத் தளர்த்தி எடுக்கிறான்----அப்போது ஒரு வட்ட வடிவ பறக்கும் தட்டு. வண்ண வண்ண ஒளிக் கற்றைகளைப் பாய்ச்சியபடி மொட்டை மாடியில் வந்து இறங்குகிறது. அதன் சைஸ் மாருதி நானோ கார் அளவு இருக்கும். அதன் பக்க வாட்டில் இருந்து ஒரு ஏணி வர, அதில் ஒரு தலையில் ஆண்டென்னா கொம்பு வைத்த ஓர் உருவம் இறங்கி)
உருவம் - வணக்கம் ராம்.. என் பெயர் க்யூ 347 ஆர் 456 க்யூ 678. என்னை க்யூ என நீங்கள் கூப்பிடலாம்.
ராம் - யார் நீங்க ? பார்க்க பாதி மனித உருவத்துடன் இருக்கீங்க.? எங்கிருந்து வர்றீங்க மிஸ்டர் க்யூ ?
க்யூ - எங்கள் வசிப்பிடம் அண்ட்ராமிடா எம் 31 அண்டவெளியில் உள்ள காலக்ஸியில் ஒரு கிரகம். இங்கு உங்கள் பூமியை ஒத்த ஒன்று. எங்கள் பறக்கும் தட்டுக்கு எரி பொருள் சுத்தமான தண்ணீர். அதைச் சேகரிக்க வந்திருக்கிறேன்.
ராம் - என்ன?.... தண்ணீரில் உங்க பறக்கும் தட்டு பறக்குமா?
க்யூ - ஆம். நீரில் உள்ள ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் அணுக்களை ஓர் இயந்திரத்தில் பிரித்து அணுவைப் பிளப்போம்! அப்போது கிடைக்கும் சக்தியில் அணுக்கள் கீழ்ப்புறம் வேகமாய் தள்ளப்படும். நியூட்டனின் மூன்றாவது விதி என்ன?
ராம் - எந்த வினைக்கும் ஒரு சமமான எதிர்வினை உண்டு...
க்யூ - அதேதான்!..... அணுக்கள் விரைவாய் கீழே தள்ளப்பட எதிர் வினையாக தட்டு பறக்கும்!
ராம் - நீங்கள் ஒளியின் வேகத்தில் பறந்தால் கூட மில்லியன் வருடங்கள் கணக்கில் ஆகுமே இங்கு வந்து சேர!
க்யூ - இல்லை.... நாங்கள் காலம், தூரம் இவைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். பறந்து செல்ல எந்த ஊடகமும் தேவையில்லை. இப்படியே மறைந்து அங்கே எங்கள் ஊருக்கு உங்கள் காலக் கணக்கான நொடி அளவில் நானோ நொடிக்குள் சென்று விடுவோம்!
ராம் - ஓ! அப்படியானால் காலக் கணக்கு பூமியில் மட்டும் தானா?
க்யூ - நீங்கள் ஐன்ஸ்டீன் கோட்பாடு படித்திருப்பீர்களே!
ராம் - ஓ!..... படித்திருக்கிறேனே...... அதில் காலம் என்ற அளவீட்டை அவர், ஒப்புமைக் கொள்கை ...தியரி ஆஃப் ரிலேடிவிடி படி, ஒன்றோடொன்று சார்ந்தே இந்த அனைத்து அண்ட பால் வழி கருந்
துளைகள் இயங்குகின்றன எனச் சொல்கிறார்!
க்யூ - இந்தக் கொள்கையின் படி எங்களுக்கு உங்க பூமியின் நேற்று, இன்று, நாளை என்பதே கிடையாது.. உங்களுக்குத்தான்! பூமி தன்னைச் சுற்றுவது ஒரு நாள், சூரியனை பன்னிரண்டு ராசிகளை பின் புலமாய் வைத்து வலம் வரும் கணக்கு ஒரு வருடம் என்பதெல்லாம். இந்தக் கணக்கு முறை இல்லாத ஒரு காலத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
ராம் - புரியலியே?.......
க்யூ - நான் பறக்கும் தட்டை மாடியில் இறக்கியபோது உங்கள் கணக்குப் படி மணி இரவு எட்டரை அல்லவா?
ராம் - ஆமாம் அன்பரே!....
க்யூ - இன்னும் ஐந்து நிமிட உங்கள் கணக்கில் நான் கிளம்பப் போகிறேன். ஆனால் எங்கள் உலக வழக்குப் படி நேரம் தூரம் இவை இல்லை. ஆகையால் அடுத்த நானோ வினாடி எனும் உங்கள் கணக்கில் நான் எங்கள் ஊரில் இருப்பேன். நானோ வினாடி என்பது ஒரு நொடியை பத்து கோடியால் வகுத்தால் வரும் மிகக் குறுகிய காலம் தானே! ஒரு உதவி செய்ய முடியுமா ராம் ?
ராம் - சொல்லுங்கள் க்யூ
க்யூ - எனக்கு அரை டம்ளர் சுத்தமான தண்ணீர் வேண்டும். குடி நீர் அல்ல.. டிஸ்டில்டு வாட்டர்.. காய்ச்சி ஆவி குளிர வைத்த நீர்.
ராம் - அது எங்கே இருக்கு எங்க வீட்டில் ?
க்யூ - அது உங்கள் அப்பா இன்வெர்டர் பேட்டரியில் ஊற்ற வாங்கி வைத்ததில் மிச்சம் இருக்கு. அதில் கொஞ்சம் போதும் எனக்கு. உங்கள் கணக்குப் படி நூறு வருட காலத்துக்கு எரி பொருளாக வரும்!
ராம் - இதோ எடுத்து வர்றேன். எதுவும் சாப்பிடறீங்களா மிஸ்டர் க்யூ ?
க்யூ - இல்லை எங்களுக்கு ஒளி தான் உணவு.
(ராம் இறங்கிப் போய் டிஸ்டில்டு வாட்டர் பாட்டிலை எடுத்து வருகிறான். க்யூ அதில் ஒரு டம்ளர் அளவுக்கு பறக்கும் தட்டின் பக்க வாட்டில் ஒரு மூடியைத் திறந்து ஊற்றிய போது)
கீழே இருந்து அம்மா குரல் - ராம் மாடியில் என்ன பண்றே ?
ராம் - ஒண்ணுமில்லேம்மா நட்சத்திரங்கள் அழகாக் காட்சி அளிக்குது... எண்ணிக்கிட்டு இருக்கேன்.
அம்மா குரல் - எண்ணினது போதும் வா வந்து படு.. ஒன்பது மணி ஆகப் போவுது.
க்யூ - போய் வருகிறேன் நண்பரே மிக்க நன்றி.. இதோ எனது அன்பளிப்பு..!
( ஒரு பெட்டியைத் தந்து விட்டு சர் என பறக்கும் தட்டு விண்ணில் கிளம்பி மறைகிறது. ராம் பெட்டியை மாடியிலேயே வைத்து விட்டு இறங்கி வந்து படுத்துத் தூங்கி விடுகிறான்)
காட்சி 4
இடம் - ராம் வீடு
காலம் - காலை ஏழு மணி
மாந்தர் - அம்மா, பிரியா, ராம்
அம்மா - என்னப்பா ராம்.. ராத்திரி பூரா என்னவோ க்யூ.. பறக்கும் தட்டுன்னு உளறிக் கிட்டே இருந்தே.. போ,... பிரஷ் பண்ணிட்டு வா,... டீ குடிக்கலாம்.
(ராம் எழு முன் பிரியா பல் துலக்கி டீ குடித்துக் கொண்டு இருக்கிறாள்..அவனிடம் டம்ளரைக் காட்டி வாயைக் கோணி நான் முந்திட்டேனே என பாவனை செய்கிறாள்)
ராம் - அப்படியா அம்மா நான் அப்போ கண்டகாட்சிகள் கனவா? நிஜம் இல்லையா ?
திரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...