தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரங்கம்: க்வாக் க்வாக்..

(அங்கே வந்து) என்னம்மா, ஒரு மாதிரி இருக்கீங்க.. ?

News image
Updated On :12 செப்டம்பர் 2020, 12:30 am

DIN

காட்சி : 1
இடம் : ஆகாஷின் வீடு
நேரம் : மாலை 5 மணி
மாந்தர் : அம்மா, அமிர்தா

(அம்மா யோசனையில் அமர்ந்திருக்கிறார்.)

அமிர்தா : (அங்கே வந்து) என்னம்மா, ஒரு மாதிரி இருக்கீங்க.. ?
அம்மா : ( பெருமூச்சுவிட்டு ) இந்த ஆகாஷ் பண்றதே புரியமாட்டேங்குது.. சரியான கோபக்காரனா வேற இருக்கானா, எதாவது கேட்கவே பயமாயிருக்கு..
அமிர்தா : அண்ணன் அப்படியெல்லாம் பண்ணமாட்டானே..
அம்மா : நீதான் சொல்லிக்கணும்.. உங்கப்பா காலையில நாலு மணிக்கே வேலைக்குப் போயிடறார்.. எட்டு மணிக்கு சாப்பிடறமாதிரி டிபன் கொடுத்துவிட்டா, ஆகாஷ் ஒன்பது மணிக்குத்தான் கொண்டுவந்து தர்றானாம்.. தெனமும்..
அமிர்தா : ( ஆச்சர்யமாக ) அப்படியா, குறுக்கு வழியில போறதுக்குப் பத்துப் பதினஞ்சு நிமிஷம்தானே ஆகும் ?
அம்மா : அதேதான் ! எனக்கும் இந்த விஷயம் இடிக்குது..
அமிர்தா : ம்ம்ம்.. கண்டுபுடிக்கிறேன் !

காட்சி : 2
இடம் : குறுக்குப் பாதை
நேரம் : வெவ்வேறு நேரங்கள்
மாந்தர் : ஆகாஷ், அமிர்தா, வாத்து


(மணி 7. 45 ---ஆகாஷ் டிபன் கேரியருடன் புறப்படுகிறான். அமிர்தா அவனைப் பின்தொடர்கிறாள். ----மணி 7. 50 ---ஆகாஷ் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு மெதுவாக அடி எடுத்து வைக்கிறான். ஒரு வாத்து அவனைக் கொத்த ஓடிவருகிறது.---- மணி 7. 51 ---ஆகாஷ் பதறி ஓட்டம் எடுக்கிறான். மரத்திற்குப் பின் நிற்கும் அமிர்தா சிரிக்கிறாள்.)

காட்சி : 3
இடம் : வீடு / ஹால் 1
நேரம் : முற்பகல் 11.25
மாந்தர் : ஆகாஷ், அமிர்தா
(ஆகாஷ் புத்தகத்தை மூடுகிறான்.)

அமிர்தா : (அதைப் பறித்துக்கொண்டு) எனக்கு கோதுமை பிஸ்கட் வேணும்.. உன்னோட பாக்கெட் மணியிலிருந்து வாங்கித் தா..
ஆகாஷ் : ( கோபமாக) ஏய்.. என்ன லொள்ளா ? அடிச்சன்னா பல்லு பிச்சிட்டுப் போயிரும்..
அமிர்தா : (ஏளனமாக) பல்லுப் போனாப் போகுது.. எப்படியாவது கஷ்டப்பட்டு அம்மாட்ட சொல்லிருவேன்..
ஆகாஷ் : சொல்லிட்டுப் போ.. எனக்கென்ன அம்மாவப் பார்த்தா பயமா ?
அமிர்தா : இல்லியே, வாத்தப் பார்த்தாதான் பயம்!
ஆகாஷ் : (அதிர்ந்து) பபப.. தத.. அது.. அது.. என்ன.. என்.. என்ன வாத்து ?
அமிர்தா : ம்ம்ம், தெரியாது? நீ ஏன் தெனமும் சுத்துவழியில சாப்பாடு எடுத்துட்டுப்போறே ?
ஆகாஷ் : (அதிர்ச்சியில்) ஏன்னா.. ஏன்னா.. சாப்பாடு சிந்தாம இருக்கணுமேனுதான்..
அமிர்தா : (முறைத்து) அம்மாட்ட சொல்லட்டுமா?
ஆகாஷ் : ( நாணத்துடன் ) இன்னிக்கு சாயங்காலம் கோதுமை பிஸ்கட் வேணும் அவ்ளொதானே.. வாங்கித்தரேன்..
அமிர்தா : தெனமும் சாயங்காலம் ..
ஆகாஷ் : (பேரதிர்வுடன்) ஏது???

காட்சி : 4
இடம் : வெவ்வேறு இடங்கள்
நேரம் : வெவ்வேறு நேரங்கள்
மாந்தர் : ஆகாஷ், அமிர்தா

(முதல் வாரம் : ஆகாஷ் முகக்கவசத்துடன் வீட்டுக்குள் நுழைகிறான். அவன் கையில் கோதுமை பிஸ்கட் இருக்கிறது---
இரண்டாம் வாரம் : அமிர்தா பிஸ்கட் சாப்பிடுகிறாள். ஆகாஷ் அவளை முறைக்கிறான்----
மூன்றாம் வாரம் : ஆகாஷ் காசை எண்ணிப் பார்க்கிறான். அவன் முகம் கோபத்தில் சிவக்கிறது.)

காட்சி : 5
இடம் : ஆகாஷின் வீடு / ஹால் 2
நேரம் : இரவு 8.35
மாந்தர் : ஆகாஷ், அப்பா
(ஆகாஷ் அனைத்து விஷயங்களையும் சொல்லி முடிக்கிறான்.)

அப்பா : (ஆச்சரியமாக) இதெயெல்லாம் ஏன்டா முன்னாடியே சொல்லல? அம்மாகிட்டயாவது சொல்லிருக்கலாமே!
ஆகாஷ் : (கீழே பார்த்தபடி) அம்மா என்னை எப்போமே கோபக்காரன்னு சொல்றாங்க.. இது
தெரிஞ்சா என் இமேஜ் என்னாவறது ?
அப்பா : இமேஜு ..? சரி என்னமோ.. அந்த வாத்து எப்போ வருது நான் போறப்போ இருக்கறதில்லையே?
ஆகாஷ் : ( புரியாமல்) தெர்லப்பா..
அப்பா : ம்ம்ம்.. உன்னைய ஏன் கொத்த வருது ? என்ன பண்ணின?
ஆகாஷ் : ஒருநாள் சின்னதா ஒரு கல்லை எடுத்துப் பக்கத்துல வீசினேன்.. அவ்ளொதான்.. அதுக்குப் போய் இப்பிடிப் புடிச்சிக்கிச்சு..
அப்பா : ஓ. . அதான் சுத்திவந்து லேட் பண்ணிட்டிருக்கியா.. கவலப்படாத.. ஒருவாரத்துல இதை சால்வ் பண்றேன்..
ஆகாஷ் : (ஆர்வமாக) எப்படிப்பா..?
அப்பா : வெயிட் பண்ணிப் பாரு.. ஒரே வாரம்..
(ஆகாஷ் அமைதியாகப் பார்க்கிறான்.)

காட்சி : 6
இடம் : குறுக்குப் பாதை / வெவ்வேறு இடங்கள்
நேரம் : வெவ்வேறு நேரங்கள்
மாந்தர் : அப்பா, வாத்து

இடம் 1 :
அப்பா கடையிலிருந்து கிளம்பி வருகிறார். வாத்துக்கு அருகிலிருக்கும் மரத்தின்மேல் கல்லை எறிகிறார்.
இடம் 2 :
அப்பா வாத்துக்குப் பக்கத்திலிருக்கும் குளத்திற்குள் மரத்துண்டை எறிகிறார். வாத்து சுற்றும் முற்றும் பார்க்கிறது.
இடம் 3 :
அப்பா வாத்துக்குச் சமீபமாக ஒரு சிரட்டையைப் போடுகிறார். வாத்து கோபமாக இறகைவிரித்துக்கொண்டு கத்துகிறது. அப்பா சிரிக்கிறார்.

காட்சி : 7
இடம் : வீடு / சமையலறை
நேரம் : காலை 7.25
மாந்தர் : ஆகாஷ், அம்மா, அமிர்தா

ஆகாஷ் : ம்மா.. மணி ஏழரையாச்சு.. கடையில அப்பா பசியோட இருப்பார், தெரியாதா..? சீக்கிரம் ரெடி பண்ணுங்க..
அம்மா : பொறுடா.. ஆறு மணிக்கே டிபன் ஆகிட்டாலும் நீ எப்படியோ ஒன்பது மணிக்குத்தான் கொண்டுபோய் சேர்க்கப்போறே.. அதுக்கெதுக்கு அவசரம் ..?
ஆகாஷ் : ( வம்படியாகச் சிரிக்க முயல்கிறான் ) ஹீ.. ஹீ.. ஹி.. ஹி..
அமிர்தா அவனை ஆச்சர்யமாகப் பார்க்கிறாள்.
ஆகாஷ் : ம்மா.. கேரியர்ல மட்டும் போடுங்க.. அடுத்த பத்தாவது நிமிஷம் அப்பா சாப்பிட ஆரம்பிக்கறாரா இல்லையான்னு பாருங்க..
அமிர்தா : ம்மா.. எப்பயிருந்து இவனுக்குக் கழன்டுச்சு நட்டு ?
ஆகாஷ் : அமி.. இனிமே அம்மாவக் கெஞ்சி வாங்கிக்கோ.. ஏன்னா, இன்னியிலிருந்து உனக்குக் கோதும பிஸ்கட் கட்டு!
(துள்ளிக்குதித்து ஓடும் ஆகாஷை வியப்பாகப் பார்க்கிறாள் அமிர்தா)

அம்மா : (புரியாமல்) என்ன கட்டு?

காட்சி : 8
இடம் : ஆகாஷின் வீடு / மொட்டை மாடி
நேரம் : ஒரு வாரம் கழித்து / இரவு 8.55
மாந்தர் : ஆகாஷ், அமிர்தா
(அமிர்தா கோதுமை பிஸ்கட் சாப்பிடபடி அமர்ந்திருக்கிறாள்)

ஆகாஷ் : (ஏளனமாக) ம்ம்ம்ம்.. அம்மாவக் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டு பிஸ்கட் வாங்கி சாப்பிட்ற..? என்னை இனிமே ப்ளாக்மெயில் பண்ணிப் பாரு.. பல்லு பறந்துரும்..
(அமிர்தா அமைதியாக பிஸ்கட் சாப்பிடுகிறாள்.)

ஆகாஷ் : என்ன பேச்சையே காணோம் ? அந்த பயம் இருக்கட்டும்..
அமிர்தா : (நிமிர்ந்து பார்த்து) பிஸ்கட் சாப்பிடறியா..?
ஆகாஷ் : (முறைத்துவிட்டு) அம்மா வாங்கிக் குடுத்த பிஸ்கட் எனக்கெதுக்கு ? நீயே கடி..
அமிர்தா : (பிஸ்கட்டை மென்றபடி) அப்டியே அறிவுக்கொழுந்துதான்! ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் இது அம்மா வாங்கிக்கொடுத்ததே இல்ல..
ஆகாஷ் : ( ஆச்சரியமாக) பின்னே..?
அமிர்தா : ( மென்றபடி) அப்பா வாங்கிக்கொடுத்தது.. டெய்லியும் கிடைக்கும்..
(ஆகாஷ் புரியாமல் தடுமாறுகிறான்.)

ஆகாஷ் : எ. . எ. . எப்டி ?
அமிர்தா : தண்ணி குடிக்க எழுந்தப்போ அவர் மூனு மணிக்குக் கிளம்பறதைப் பார்த்தேன்.. ஏன்னு கேட்டேன்.. பிஸ்கட் வாங்கிட்டுவந்தார்.
(ஆகாஷ் சிறிது நேரம் யோசிக்கிறான்)

ஆகாஷ் : ஓ.. புரிஞ்சிருச்சு.. இப்போ வாத்து அவரப் பிடிச்சிருச்சா !
அமிர்தா : யெஸ் ! டெய்லியும் கேட்டாக் கண்டிப்பாக் கிடைக்கும்..
ஆகாஷ் : எப்படியோப்பா.. சொன்ன மாதிரியே அவர் என்னோட பிரச்னையை சால்வ் பண்ணிட்டார்.. அதுபோதும்.. ஒரு பிஸ்கட் குடு..
அமிர்தா : இந்தா.. க்வாக் க்வாக்..
ஆகாஷ் : க்வாக் க்வாக்..
(இருவரும் சிரித்துக்கொண்டே கோதுமை பிஸ்கட் சாப்பிடுகிறார்கள்)

( திரை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.