கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரங்கம்: "புதையல்'

கோபாலன் - கோவிந்தா,  அப்பா மறைவுக்குப் பின் இத்தனை நாள் நாம ஒரே வீட்டில் ஒற்றுமையா வாழ்ந்து வர்றோம்.

News image
Updated On :26 செப்டம்பர் 2020, 12:30 am

என்.எஸ்.வி.குருமூர்த்தி


காட்சி  - 1
இடம் - இல்லம்
மாந்தர் -   அண்ணன் கோபாலன்,  தம்பி கோவிந்தன், கோபாலன் மனைவி பாமா, கோவிந்தன் மனைவி கனகா

கோபாலன் - கோவிந்தா,  அப்பா மறைவுக்குப் பின் இத்தனை நாள் நாம ஒரே வீட்டில் ஒற்றுமையா வாழ்ந்து வர்றோம்.  ஆனா இப்போ அம்மா காலமாயிட்டாங்க. உன் மனைவி கனகாவுக்கும் என் மனைவி பாமாவுக்கும் ஒத்துப் போகலே. நம் இருவர் குழந்தைகளும் படிக்க வேண்டி இருக்கு.
கோவிந்தன் -  அவங்க படிக்கட்டுமே அண்ணா.
கோபாலன் - என் மனைவி அவள் பையன் அமுதனை தலை நகருக்கு அனுப்பி பெரிய படிப்பு படிக்க வைக்க ஆசைப்படறாள், 
அதனாலே நாம சொத்தைப் பிரிச்சுக்கிட்டு தனித்தனியா வாழலாம்.
கோவிந்தன் - நமக்கு இருப்பது ஒரு வீடுதானே அண்ணே. இதில் யார் வசிப்பது?  யார் வெளியே போவது ?
கோபாலன் - வயல் நடுவே திடல் இருக்கு. அதில் புதுசா வீடுகட்டி நீ குடி போயிடு.  இதில் நான் இருக்கேன். வீடு கட்டும் செலவை பாதி நான் தந்திடறேன்.
கோவிந்தன் - இந்த ஓட்டு வீடு ரொம்ப பழசா இருக்கே.  ஓடு மாத்தற செலவே அதிகமாயிடும்.. பராமரிப்பும் கஷ்டமா இருக்கு. தாத்தா காலத்தில் கட்டியது.. நான் இங்கே இருக்கேன்.  நீங்க புது வீடு கட்டி நிம்மதியா இருக்கலாமே
கோபாலன் -  இல்லேப்பா.. பரம்பரை வீட்டில் மூத்தவன் வசிப்பதுதான் நியாயம்.  தவிர இந்த வீட்டில் பராமரிப்பு செலவு 
அதிகமாகிக்கிட்டே போவுது.  உனக்கு 
சிரமம் வைக்க நான் விரும்பவில்லை
கோவிந்தன் -   சரி உங்க இஷ்டப்படியே செய்யலாம்.

காட்சி - 2
இடம் - இல்லம்
மாந்தர் -  கோபாலன் அவர் மனைவி பாமா
பாமா - என்னங்க!.... இப்படி வாங்க.

கோபாலன் - என்ன பாமா,  நான் முக்கிய வேலையா இருக்கேன். தாத்தா எழுதி வச்ச ஓலையை பூதக் கண்ணாடி வச்சு படிச்சுக்கிட்டு இருக்கேன்.. அதில்தானே தாத்தா இந்த வீட்டில் எங்கே புதையல் வச்சிருக்கிறார்ன்னு குறிப்பு இருக்கு.
பாமா - நாலு ஊருக்குக் கேட்கிற மாதிரி சத்தமா பேசாதீங்க!.... நான்தானே இந்த பேப்பரைத் தாத்தா பெட்டியில் மறைவா இருந்த தைக் கண்டு பிடிச்சேன்.  இந்த வீட்டையும் நமக்கே பிரிச்சு வாங்க யோசனை சொன்னேன்
கோபாலன் - அதான் தம்பி ஒத்துக் கிட்டானே!....  நாம் என்ன சொந்தக் காசையா தரப் போறோம்?.... தாத்தா புதைச்ச புதையலை  வித்து பணம் கொடுக்கப் போறோம்.  அவன் போயிடப் போறான்.  கோவிந்தனும் கனகாவும் எங்கே?.... நம்ம பிள்ளைகளையும் காணோம்?.... 
பாமா -  நம்ம பிள்ளைகளையும் அழைச்சுக்கிட்டு, அவங்க எல்லோரும் கோயிலுக்குப் போயிருக்காங்க.
(அப்போது கோவிந்தனும் கனகாவும் குழந்தைகளுடன் வாசலில் வரும் சத்தம் கேட்க)

பாமா -  ம்.... அவங்க எல்லோரும் வந்திட்டாங்க!....
கோவிந்தன் - அண்ணா இந்தாங்க விபூதி குங்குமம்.  நாளை களத்து மேட்டில் செங்கல் அறுத்து சூளை போட ஆட்கள் வரச் சொல்லி இருக்கேன். அதனால் கோவிலுக்குப் போய் பூஜை செய்து வந்தேன்..... 
இந்தாங்க அண்ணி சர்க்கரைப் பொங்கல் சுண்டல்...
(பிரசாதங்களை பாமா பெற்றுக் கொள்கிறாள்)

காட்சி 3
இடம் - அரசமரத்தடி, கிராமப் பஞ்சாயத்து
மாந்தர் - பஞ்சாயத்து தலைவர் ரங்கநாதன், கோவிந்தன், கோபாலன் மற்றும் கிராம வாசிகள்

தலைவர் ரங்கநாதன் -  வாங்க எல்லாரும் வந்தாச்சா. இன்னிக்கு பஞ்சாயத்தில் ஒரே விஷயம் தான்.  அண்ணன் கோபாலனும் தம்பி கோவிந்தனும் சொத்து பிரிக்க முறையிட்டு இருக்காங்க.  வீட்டையும் மூணு ஏக்கர் நிலமும் அண்ணன் கோபாலனுக்கு, வயலில் அஞ்சு ஏக்கர், களத்து மேடு கோவிந்தனுக்கு.  புது வீடு கட்ட ஆகும் செலவில் பாதியை அண்ணன் கோபாலன்   தம்பிக்குத் தந்துவிட வேண்டும். 
என்னப்பா சரியா?...
கோபாலன்  - ஆமாங்க
(கோவிந்தன் தலையாட்டுகிறான்)

தலைவர்  - சரிப்பா இதை எழுதி எடுத்து வாங்க. உங்க கையெழுத்துக்கு கீழ் நாங்க சாட்சி  கையெழுத்து போட்டு ஆளுக்கு ஒரு பிரதி தந்திடறோம்.  அப்புறமா பத்திரப் பதிவு செஞ்சுக்குங்க.
(இருவரும் வணங்கிச் செல்கின்றனர்.)

......  -பத்து நாள் கழித்து- ....


காட்சி 4
இடம் -  கோபாலன் இல்லம்
மாந்தர் -  கோபாலன் அவர் மனைவி பாமா

பாமா - இருந்தாலும் உங்க தம்பிக்கு இத்தனை வீம்பு ஆகாதுங்க.
கோபாலன் - என்ன சொல்றே பாமா
பாமா - பஞ்சாயத்து முடிஞ்ச மறு நாளே அவர் நண்பர் வீட்டு மாடிக்கு வாடகைக்குக் குடி போயிட்டாரே.. களத்து மேட்டில் மண் எடுத்து கல் அறுத்துக் காளவாய் போடப் போறாராம்.... பேசிக்கிட்டாங்க!
கோபாலன் - புதையல் எடுத்தோமே!.... கலயத்தில் முப்பது தங்க காசு இருந்திச்சே!... வித்து  மூணுலட்சம் வச்சிருக்கேன்,  பாதி கொடுத்திடலாம் இல்லே?....
பாமா - அதெல்லாம் வேண்டாம்!... ஒரு லட்சமே அதிகம்!.... குடிசை போட்டுக்கிட்டு இருக்கட்டும்! 
அப்புறம் விவசாய வருமானத்தில் கொஞ்சம் 
கொஞ்சமா கட்டிக்குவாங்க...
கோபாலன் - என்னவோ பாமா மனசு உறுத்துது!.......
பாமா - கை கழுவிட்டு வாங்க சாப்பிட!.... சும்மா பாசம் பீறிடுதோ.
(மூன்று மாதம் கழித்து....)


காட்சி - 5
இடம்  -- கலெக்டர் அலுவலகம்
மாந்தர் - மாவட்ட ஆட்சியர், கோவிந்தன் மற்றும் பஞ்சாயத்து தலைவர் ரங்கநாதன், போலீஸ் அதிகாரி

கலெக்டர் -  வாங்க,  நீங்க யாரு என்ன விஷயம்?....
போலீஸ் அதிகாரி -  (சல்யூட் அடித்து) சார்!.... இவர் தான் பூங்குடி கிராமத்தில்.... செப்புக் குடம் களத்து மேட்டில் கிடைச்சுதே,.... அந்த இடத்தின் உரிமையாளர் கோவிந்தன்!....  இவர் அந்த ஊர் நாட்டாமை 
ரங்கநாதன்....
கலெக்டர் - உட்காருங்க.... கோவிந்தன்,..... நீங்க எங்களிடம் சமர்ப்பித்த செப்புக் குடத்தில் இரண்டாயிரத்து முன்னூறு தங்கக் காசுகள் மொத்த எடை 32 கிலோ இருக்கு..... அதில் உங்களுக்கு வெகுமதியா 100 லட்சம் கொடுக்க  அரசாங்கம் தரச் சொல்லி உத்தரவு வந்திடுச்சி!.....சோழர்காலத்து கடைசி மன்னருக்கும் பாண்டிய மன்னருக்கும் நடந்த போரில் வீர மரணம் எய்திய சோழர் படை உங்க களத்து மேட்டில் புதையுண்டு இருக்குன்னு ஆய்வாளர்கள் கண்டு பிடிச்சிட்டாங்க!... அந்தக்    களத்து மேட்டில் ஆராய்ச்சி செய்ய நீங்க 
அனுமதி தந்ததுக்குத் தனியா ரூ பத்து லட்சம் காசோலை தரவும் உத்தரவு வந்திருக்கு.....  பக்கத்தில் டவுனில் வீடு கட்டிக்குங்க!.....
(கோவிந்தன்  வணங்கி, 100 லட்சத்துக்கான காசோலை மற்றும் 10 லட்சத்துக்கான காசோலை இரண்டையும்  பெற்றுக் கொள்கிறார்)

காட்சி - 6
இடம் - கோபாலன் இல்லம்
மாந்தர் - கோபாலன், கோவிந்தன், பாமா, கனகா

பாமா  - கேட்டீங்களா அநியாயத்தை. களத்து மேட்டில் சோழராஜாவோட புதையலை அரசாங்கத்துக்கிட்டே உங்க தம்பி ஒப்படைச்சு வெகுமதியை வாங்கிட்டாராமே.  களத்து மேட்டையும் அரசாங்கம் வாங்கி தோண்டி ஆராயப் போவுதாம். மொத்தம் ஒரு கோடியே பத்து லட்சம் இப்போ அவர் கையில் இருக்குங்க.
கோபாலன் -  (மனதுக்குள்)  -   -கோவிந்தன் அவன் மனைவி நல்ல மனசுக்கு நல்லா நடந்துடுச்சி -- ( பிறகு மனைவியிடம்) - இருக்கட்டும் போ....  நல்லா இருக்கட்டும்!
(அப்போது வாசலில் ஒரு மோட்டார் சைக்கிள் நிற்க அதில் இருந்து கோவிந்தனும் கனகாவும் கையில் பூ பழக் கூடையுடன் வருகிறார்கள்)
கோபாலன்  - அடடே! வாப்பா தம்பி,.... வாம்மா கனகா!....
(கோவிந்தன் அண்ணன் காலில் விழுந்து வணங்கிவிட்டு கோபாலன் கையில் ஒரு பத்திரத்தைத் தருகிறான்)

கோபாலன்  - என்னப்பா இது?
கோவிந்தன் - அண்ணா!.... இது புதுசா நான் வாங்கிய வீட்டுப் பத்திரம்.  ஆசீர்வாதம் பண்ணித் தாங்க.
கோபாலன் - நல்லா இருப்பா.
கோவிந்தன் - அண்ணா!...... நீங்க பிரிச்சுக் கொடுத்த  களத்து மேட்டால் எனக்குக் கிடைத்த வெகுமதியில் நியாயமா உங்களுக்குப் பாதி தரணும்!.... அதுக்கான காசோலையை உங்களுக்கு எடுத்து வந்திருக்கேன்!....
கனகா, எடு அந்தக் காசோலையை! அண்ணா!.... இதிலே 55 லட்சத்துக்கான காசோலை இருக்கு!... எடுத்துக்குங்க!....
(கனகா எடுத்துத் தர அண்ணன் கையில் தர....)

(கோபாலன் பாமா இருவர் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர்)

கோபாலன் - தம்பி,.... நீ தங்கக் கம்பிடா.. நல்லா இரு.
கோவிந்தன் - அப்போ போய் வரேன்.. ஜாக்கிரதையா வச்சுக்கங்க....வீட்டை நல்லா கட்டுங்க
கனகா - வரட்டுமா அக்கா!....
(கோபாலன் பாமா இருவரும் அதிர்ச்சியுடன் 
என்ன செய்கிறோம் எனத் தெரியாமலே 
கை அசைத்து விடை தருகின்றனர்.)

திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.