/

அரங்கம்: மழை!

என்னங்க இப்படி இருட்டி கிட்டு வருது..மழை பெய்யும் போலிருக்கே

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:37 pm

தினமணி


காட்சி - 1
இடம் - இல்லம், மாந்தர் - அப்பா வைத்யநாதன், அம்மா கமலா, பாட்டி லோகாம்பாள் தாத்தா
சீனுவாசன், குழந்தைகள் ராம், ப்ரியா

அம்மா கமலா - என்னங்க இப்படி இருட்டி கிட்டு வருது..மழை பெய்யும் போலிருக்கே
அப்பா வைத்யநாதன் - இரு செல்லில் இன்சாட் இமேஜ் பார்த்து சொல்றேன்.
தாத்தா - இருப்பா ..வடக்கே மப்பிருந்தா
கண்டிப்பா மழை வரும்..தெற்கே இருந்தா வராது.
பாட்டி - இரண்டு நாளா எறும்புகள் நிலை அடியில் சுவர் இடுக்குகளில் மண்ணைத் தோண்டி குமிச்சு வைக்குதுங்க... அது கன மழைக்கான அறிகுறி
வைத்யநாதன் - கூகுளில் இன்சாட் இமேஜ் டைப் பண்ணிட்டேன்..இதோ இந்திய வானிலை ஆய்வு மையம் விண்ணில் இருந்து செயற்கைக் கோள் வழியே மேகக் கூட்டங்களின் மேலே பறந்த படி படம் எடுத்து அனுப்பிக்கிட்டே இருக்கும். அதை வானிலை மையம் இணையத்தில் போடுவாங்க. இதோ பதிவிறக்கம் ஆயிட்டுது.
இந்திய மேப்வரைஞ்சு மேகக் கூட்டங்களை படம் பிடிச்சு அனுப்பி இருக்காங்க. சென்னைக்கு மேலே மேகக் கூட்டம் அடர்ந்து காணப்படுது. கடலூர்
மற்றும் கரையோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.
தாத்தா - சில வானிலை தன்னார்வ ஆய்வாளர்கள் திரு பிரதீப்ஜான், சிவகுமார் போன்றவர்கள் மிகத் துல்லியமாக புயல் மற்றும் கன மழை வருவதை தங்கள் இணைய சமூக பக்கங்களில் போடுகிறார்கள். மிகச் சரியா இருக்கு.
அம்மா கமலா - மழை தூறுதே.. ராம் பிரியா
சீக்கிரம் மொட்டை மாடிக்கு ஓடுங்க. துணியெல்லாம் காயப் போட்டேன் எடுத்து வரலாம்..
(குழந்தைகள் படிகளில் ஏறி ஓடுகிறார்கள்)

காட்சி 2
இடம் - வைத்யநாதன் குடும்பம் வசிக்கும் விவேகான்ந்தர் நகர், மாந்தர் - வைத்யநாதன் பக்கத்து வீட்டு கோபாலன், விவேகானந்தர் நகர் குடியிருப்போர் சங்கத் தலைவைர் பாலு

(மழை விடாது ஒரு வாரம் பெய்கிறது. - தெரு வீட்டைச் சுற்றி வெள்ளக் காடாக தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கிறது - மின்சாரம் துண்டிக்கப் பட்டு விட்டதால் மக்கள் மிகவும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.)
கோபாலன் (காம்பவுண்டு சுவர் ஓரமாக நின்றபடி) - வைத்யநாதன் சார்.. கரண்ட் இன்னும் இரண்டு நாள்
வராதாம்!...
( குடியிருப்போர் சங்கத் தலைவர் பாலுஅப்போது ஒரு மூன்று சக்கர வண்டியில் வருகிறார்..
வண்டியை மோட்டார் மூலம் ரங்கன் இயக்க)

வைத்யநாதன் - என்ன இது மீன் பாடி வண்டியில் வர்றீங்க. என்ன எடுத்து வர்றீங்க ?
பாலு - சார் நான் ஜெனெரேட்டர் வாடகைக்கு விடும் கடையில் இருந்து எடுத்து வந்திருக்கேன்.. இதை வச்சு ஒவ்வொரு வீடாக மேல் மாடி வாட்டர் டேங்குக்கு தண்ணீர் மற்றும் செல் போன் சார்ஜ் ஒரு மணி நேரம் போட மின்சார ஸப்ளை தந்து இயக்கிக் கிட்டு வர்றேன்.
வைத்யநாதன், கோபாலன் இருவரும் - ஆஹா கண் கண்ட தெய்வமா தெரியறீங்க..தண்ணீரை விட செல்ஃபோன் சார்ஜ் போட வச்சிட்டா நீங்க தான் மின்சார அம்மன்! பாட்டரி பகவான்!
(ஜெனெரேட்டரை இயக்கி மின் மோட்டார் ஸ்விட்ச் போடுகிறார். தண்ணீர் நிரம்புகிறது மேல் நிலைத் தண்ணீர் தொட்டியில்---வீட்டில் உள்ள பெண்கள் ஓடிப் போய் செல்ஃபோனை சார்ஜர் மூலம் பிளக்கில் செருகுகிறார்கள்)

வைத்யநாதன் - (ஜெனெரேட்டரை பாலு நிறுத்தியதும்) சார், சமயத்தில் செஞ்ச உதவிக்கு என்ன நாங்க தந்தாலும் தகும்.. வந்து இதுக்கு பெட்ரோல் செலவு வாடகை செலவாகுமே?...சொல்லுங்க தர்றோம்...
பாலு சிரிக்கிறார் - அது தான் மாசா மாசம் சங்க நிர்வாகச் செலவுக்கு வீட்டுக்கு வீடு நூறு ரூபா தர்றீங்களே.. அதில் தான் எல்லா செலவும் செய்யறோம்.. நான் ஒரு தெரு சங்கச் செயலாளர், கோவிந்தன்
இன்னொரு தெரு பொருளாளர், பக்கிரிசாமி
இன்னொரு தெரு என வந்துகிட்டிருக்கோம்.
மீன் பாடி வண்டி ரங்கன் சம்பளம் உட்பட செலவு செய்கிறோம்.
(அப்போது சங்க உறுப்பினர் ஒருவர் ஒரு தள்ளு வண்டியில் நீலநிற பிளாஸ்டிக் பெட்டியில்
முழுவதும் பால் பாக்கெட்டுகளுடன் வருகிறார்.....
- வீட்டுக்கு ஒரு லிட்டர் பால் தருகிறார் இலவசமாக...-ஒவ்வொரு வீடாகச் சென்று இப்பணி தொடர்கிறது....அவர்கள் அப்பால் சென்றதும்)

கோபாலன் - நான் கூட மாத சந்தா பணம் தரும் போது சலிப்பா இருக்க்கும்.. வசூல் பண்ணி
சாப்பிடறாங்களேன்னு ஆனால் இந்த சேவைக்கு என்ன கொடுத்தாலும் தகும்.
(மழை மறுபடி பிடிக்கிறது--ஜெனரேட்டரை ஒரு தார் பாயால் மூடியபடி ரெயின் கோட் அணிந்து பாலு ஒவ்வொருவீடாகச் செல்கிறார்.)

காட்சி 3
மாந்தர் - வைத்யநாதன், குடும்பத்தினர் மற்றும் கோபாலன் குடும்பத்தினர்
(நேரம் இரவு எட்டு மணி மழை தொடர்வதால் சாலைகளில் நீர் முழங்கால் அளவு குறையவில்லை.....அப்போது மறுபடியும் சங்கத் தலைவர் பாலு மற்றவர்கள் ஒரு வேனில் வீட்டுக்கு வீடு வாசலில் நிறுத்தி...)

பாலு - வைத்யநாதன், கோபாலன் வாங்க இரவு சூடா உப்புமா கிண்டி எடுத்து வந்திருக்கோம்!... வாங்க வீட்டுக்கு ஒரு நபருக்கு ஒரு பொட்டலம் வீதம் வாங்கிப் போங்க...
கோபாலன் - எங்கே சார் டிபன் தயார் பண்றீங்க?
பாலு - ஏரிக்கரையில் குடிசை வாழ் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு உணவு ரொட்டி பால் வழங்க நம் வார்டு கவுன்சிலர் எங்களை அணுகி பணம் தந்து உணவுக்கும் தண்ணீர் பாக்கெட் தரவும் ஏற்பாடு பண்ணச் சொன்னார். ஒரு கல்யாண மண்டபத்தில் சமையல் காரர்கள் வைத்து பொட்டலம் போட்டு வருது. நாங்க வினியோகம் பண்றோம். காலையில் இட்லி சட்னி சாம்பார் வரும்!....
(வேகமாகச் சொல்லிக் கொண்டே வேனை வீடு வீடாக நிறுத்தி பொட்டலம் வழங்குகிறார்.)

பாட்டி லோகாம்பாள் - உப்புமா வாசனை மூக்கைத் துளைக்குது! அடுப்படியில் இந்த ஈரத்தில் கமலா நின்னு டிபன் பண்ணனுமேன்னு கவலைப் பட்டேன்.
தாத்தா சீனுவாசன் - ஹூம்... நல்லவங்க சில பேராவது இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்யுது!....
ப்ரியா - ரொம்ப நல்லவங்க அதிகமாயிட்டாங்க தாத்தா....அதான் மழை நிக்க மாட்டேங்குது.
(அப்போது கவுன்சிலர் ஒரு ஆட்டோவில்
மைக்கில் சொல்லியபடி வருகிறார்)

குரல் - நமது நகருக்குப் பின்னால் உள்ள ஏரி நிரம்பி விட்டது. எந்த சமயத்திலும் கரை உடைந்து நீர் அதிகம் வெளியேறும் அபாயம் இருக்கு. எல்லோரும் மொட்டை மாடிக்குப் போய் நின்றுகொள்ளுங்கள்.
கோபாலன் - சார் வெள்ளம் வரப் போவுது! வாங்க மாடிக்குப் போயிடலாம்...

காட்சி - 4
இடம் - ஏரிக்கரையோரம். மாந்தர் - ஏரிக்கரை
அருகில் வாழும் குடிசை வாசிகள், கவுன்சிலர்
மற்றும் சங்க தலைவர், நிர்வாகிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகள்

(ஏரிக்கரையைப் பலப் படுத்தும் விதமாக மணல் மூட்டைகள் கரையில் அடுக்கப் படுகின்றன)

கவுன்சிலர் - எல்லோரும் கல்யாண மண்டபத்துக்குப் போயிடுங்க.... சாப்பாடு ரெடியா இருக்கு!...
(அப்போது பாலு புது போர்வைகள் டவல்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குகிறார்.)
பொதுப்பணித் துறை அதிகாரி - இன்னும் ஒரு நாள் மழைக்கு இந்த மூட்டைகள் முட்டுக் கொடுத்து தாங்கும். தொடர்ந்து மழை பெய்தால் எந்த பக்கம் உடைச்சுக்கும் எனச் சொல்ல முடியாது.
(அதிகாரிகளும் ஊழியர்களும் சங்கத்தினரும் கரையைச் சுற்றி சுற்றி கண் காணிக்கின்றனர்-பொழுது விடிகிறது. மழை நிற்க சூரியன் உதிக்கிறான்...எங்கும் சூரிய ஒளி தண்ணீர் மெல்ல தெருக்களில் வடிந்து பாதை தெரிகிறது....
மக்கள் நடமாட்டம் தொடங்க வாகனங்கள்
ஓடுகின்றன.....மதியம் மின்சார சப்ளை வர, எல்லா வீடுகளிலும் ஒரே குதூகல ஒலி.. ஹை..
கரண்ட் வந்துடுச்சி. )
காட்சி - 5
இடம் - வைத்யநாதன் இல்லம், மாந்தர் - வைத்யனாதன் மற்றும் பக்கத்து வீட்டு கோபாலன்
கோபாலன் - சார் விஷயம் தெரியுமா..? முதல் தெருவில் ஸ்ரீதரன் மனைவி கோமளா வைத் தெரியுமா?
வைத்யநாதன் - ஓ நல்லா தெரியுமே! கோமளாவுக்குக் கூட இந்த மாசம் குழந்தை பிறக்க பேறு காலம் நெருங்கிட்டதா என் மனைவியிடம் கோமளா அம்மா போன வாரம் சொன்னாங்களே
கோபாலன் - என்ன ஆச்சு தெரியுமா.. நேற்று இரவு ஏரிக்கரை பாதுகாப்பு மும்முரத்தில் ஏல்லோரும் இருந்தாங்க. அவங்களுக்கு பெண்குழந்தை பிறந்துடுச்சி. ஆம்புலன்ஸ் ஏரிக்கரை ரோடில் தயாரா இருந்துதா அதில் தாயும் குழந்தையும் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டாங்க...
வைத்யநாதன் - பலே.. ஆண் குழந்தையா இருந்தா இந்த மழை ஞாபகமா வருண் அல்லது வருணன்னு பெயர் வைக்கலாம்.பெண் குழந்தையா இருக்கே...
கோபாலன் - வருணின்னு பெயர் வச்சிருக்காங்களாம்
வைத்யநாதன் - நம்ம நகரின் சங்கச் செயலாளரின் சேவையைப் பாராட்டி அவருக்கு மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பி இருக்காராம்.
கோபாலன் - ஊக்கப் படுத்துவது தானே நம்ம கடமை.. நானும் கிளம்பறேன் அவரைப் பார்க்க.
வைத்யநாதன் - எதுக்கு எதுவும் சால்வை போர்த்தப் போறிங்களா
கோபாலன் - இல்லே போன மாசம் குடியிருப்போர் சங்க சந்தா பணம் ரூ 100 தர மறந்திட்டேன் அதையும் இந்த மாச சந்தாவும் சேர்த்து தந்திட்டு வரப் போறேன்
(அவர் போனதும்)
கமலா - என்னங்க உங்க பக்கத்து வீட்டுக்காரர் என்ன சொல்றார்?
வைத்யனாதன் - சந்தா தர மூக்கால் அழுவார். நேத்து ஜெனெரேட்டர் வச்சு தண்ணீர் ஏற்றியதும் பால் பாக்கெட் உப்புமா தந்ததும் மனசு மாறிட்டார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.