
சாலையோரம் கவனிப்பாரற்று அலைந்துத் திரிகின்றவர்களை முடித் திருத்தம் செய்து, குளிக்கவைத்து, புத்தாடைகளை அணிவித்து உணவு கொடுத்து பராமரித்து வருகிறார் மாணவி ராகவி.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட வள்ளியூர் காமராஜர் நகரைச் சேர்ந்த முருகன்}மந்திரகனி தம்பதியின் மூத்த மகள் ராகவி. இருபத்தொன்று வயதான இவர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் பி.காம். படித்து வருகிறார்.
இவர் வெளியில் செல்லும்போது, சாலையோரம் கவனிப்பாரற்று அலைந்து திரிகின்றவர்களை அணுகிப் பேசுகிறார். அவர்களது முடியைத் திருத்தமும் முகச் சவரமும் செய்து குளிக்கவைக்கிறார். பின்னர், அவர்களுக்குப் புத்தாடைகளை அணிவித்து உணவு கொடுத்தும் பராமரித்து வருகிறார்.
இதுதொடர்பாக ராகவியிடம் பேசியபோது:
""நான் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவள். எனது அப்பா கொத்தனார் வேலை செய்து வருகிறார். அம்மா வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார். எனது தம்பி ராகவகண்ணன், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். யாரும் கவனிப்பாரற்று அலையும் பிச்சைக்காரர்களையும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் பார்க்கும் போது எனக்குள் ஓர் உந்துதல். இவர்களை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம். அதற்கு எனது தம்பி உதவியாக இருக்கிறார்.
ஆரம்பத்தில் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று, அங்கு நலிவடைந்தவர்களுக்கு பினாயில் தயாரிக்கும் பயிற்சி, சோப்பு ஆயில், ஊறுகாய் தயாரிப்பது உள்ளிட்ட குடிசைத் தொழில் பயிற்சியை இலவசமாக கற்றுக் கொடுத்து தொழில் செய்ய வழிகாட்டினேன். தற்போது கவனிப்பாரற்றோரையும் பராமரித்து வருகிறேன்.
எனக்கு உதவியாக தோழி பாத்திமா அலிஷா வருகிறார். நாங்கள் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான நபர்களைத்தான் பராமரித்து வருகிறோம். இதற்கு ஆகும் செலவுகளை எனது குடும்பத்தினர் உதவியுடனும் எனது தோழியின் உதவியுடனும் சமாளித்து வருகிறோம்.
நாங்கள் பராமரிக்கும் கவனிப்பாரற்றோரை தங்க வைக்க இடமில்லை. மீண்டும் அவர்கள் சாலையோரம் அல்லது கோயில் மண்டபத்தில்தான் தங்கிவருகிறார்கள். அவர்களை தங்கவைக்க அரசு ஓர் இடத்தை அமைத்து தந்தால் உதவியாக இருக்கும். மனிதன் என்றால் மனிதநேயம் தானே. அதைத்தான் செய்து வருகிறோம்'' என்றார்.
-எஸ்.டேவிட் பிரபாகர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.