சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: மௌனமும் ஒரு மொழி!

டாக்டர் கே.பி.மிஸ்ரா சென்னையின் பிரபல மருத்துவமனை ஒன்றில் இதயநோய் சிகிச்சைப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிவிட்டு, இரண்டு வருடங்கள் முன்பு தம் சொந்த ஊரான புவனேசுவருக்குப் போய் விட்டவர். அவர் சென்னைக்கு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:43 am

சாருகேசி

டாக்டர் கே.பி.மிஸ்ரா சென்னையின் பிரபல மருத்துவமனை ஒன்றில் இதயநோய் சிகிச்சைப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிவிட்டு, இரண்டு வருடங்கள் முன்பு தம் சொந்த ஊரான புவனேசுவருக்குப் போய் விட்டவர். அவர் சென்னைக்கு எப்போதாவது வந்தாலும், ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்ற மட்டுமே வருகிறார்.

சென்ற வாரம், அவர் பகவான் ரமணர் பற்றி உரையாற்றினார். அர்த்தம் புரியாத வார்த்தை ஜாலம் ஏதும் அவர் பேச்சில் இடம் பெறுவது இல்லை. அவர் பேச்சில் உள்ள எளிமைதான் நாம் அவரைக் கேட்க வைக்கிறது.

ரமணரைப் பற்றி ஒரிய மொழியில் ஒரே ஒரு நூல்தான் இருக்கிறது என்றும், பிறகு தாமே ஒரு நூல் எழுதியதாகவும் குறிப்பிட்டார்.

எல்லோரும் ரமணரை அவர் பரமேசுவரனின் மறு அவதாரம், முருகனின் மறு அவதாரம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கையில், "அவர் தட்சிணாமூர்த்தியின் மறுஅவதாரம்' என்று விளக்கினார் மிஸ்ரா.

ரமணரின் மொழி மௌனம். அவரிடம் வருகிறவர்கள் அவர் உரையாடி அதிகம் தெரிந்து கொண்டதில்லை. அவருடைய கருணை பொழியும் விழிகளையே மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, மனத் திருப்தியுடன் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு போனவர்கள்தாம் அதிகம். ஏன், பால் பிரன்ட்டன் கூட இந்திய சாமியார்களின் ஜால வித்தைகளையும், வெளி வேஷத்தையும் கண்டு வெறுத்துப் போய் நாடு திரும்பு முன், காஞ்சி பெரியவரிடம் போனபோது, "திருவண்ணாமலை போய் ரமணரைப் பார்!' என்றாராம். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை நேரத்தில் பால் பிரன்ட்டன் கனவில் பெரியவர் தோன்றி ரமணரைப் பார்க்கச் சொன்னதாக அவரே தம் நூலில் எழுதியிருக்கிறார்.

ஒரு முஸ்லிம் நெசவாளர் ரமணரைப் பார்க்க வந்துவிட்டு, எட்டு மணி நேரம் இடத்தை விட்டு நகராமல் அவர் எதிரே நின்று பார்த்து, ரமணரின் பாதங்களைத் தம் கண்ணீரால் நனைத்துவிட்டுச் சென்றாராம்.

இந்த உண்மை நிகழ்ச்சிகளை எல்லாம் தாம் சமீபத்தில் படித்த "ஃபேஸ் டூ ஃபேஸ் வித் பகவான்' என்ற நூலில் இருந்து எடுத்துக் காட்டினார். நம்பிக்கை இல்லாதவர்கள் அமெரிக்க, பிரெஞ்சு, பிரிட்டிஷ் பத்திரிகையாளர்கள், பால் பிரன்ட்டன் உட்பட, 165 பேர் எழுதிய சொந்த அனுபவங்களின் கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இருப்பதாகக் கூறினார் டாக்டர் மிஸ்ரா.

ரமணரைப் பார்க்க வந்த இன்னொரு பிரெஞ்சுப் பெண்மணி, "என்ன கோவணான்டி வேஷம் இது!' என்று முதலில் நினைத்தாராம். பின்னர் பல ஆண்டுகள் அங்கேயே தங்கி, தம் அனுபவங்களை எழுதியிருக்கிறார்.

ரமணர் வளர்த்த பசு லஷ்மி. கன்று போட்டவுடன் நேராக அவரிடம் வந்து தன் கழுத்தை அவர் தோளில் சாய்த்துக் கொண்டு அப்படியே நிற்கும். அவர் அதை வாஞ்சையுடன் தடவிக் கொடுப்பார். இரண்டு தடவைகள் அந்தப் பசு கன்று போட்ட தினம் ரமணரின் பிறந்த நாளாம். "உங்கள் பிறந்த தினத்தன்று லஷ்மி கன்று போட்டிருக்கிறது' என்று ஓர் ஊழியர் கூறிய போது, "அப்படி அல்ல. லஷ்மி கன்று போட்ட தினத்தன்று நான் பிறந்தேன்!' என்றார் ரமணர்.

அவர் வளர்த்த பசு, மயில், நாய் என்று அத்தனை பிராணிகளுக்கும் அவருடைய தாயார் சமாதிக்கு அருகிலேயே சின்னச் சின்ன சமாதி கட்டியிருப்பதை டாக்டர் மிஸ்ரா சுட்டிக் காட்டினார்.

""ரமணருடைய கருணை பொழியும் விழிகளைப் படத்தில் பாருங்கள். உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் கிடைத்துவிடும்!'' என்றார் டாக்டர் மிஸ்ரா.

"தம்முடைய மஹதி வீணையை மீட்டிக் கொண்டு பாடியபடி மூன்று உலகங்களிலும் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார் நாரதர். ஹனுமான் இசையில் வல்லவர். அவர் "குண்டக்ரியா' ராகத்தை மெய்மறந்து பாடிய போது, பாறைகள் எல்லாம் உருகின. நாரதர் அவரைப் பார்க்க வந்த போது, ஹனுமான் பாட்டை நிறுத்தி விட்டார். பாறைகள் உடனே உறைந்து கெட்டியாகப் போக, நாரதரின் மஹதி வீணை அதில் சிக்கிக் கொண்டு விட்டது. நாரதர் அதே ராகத்தைப் பாடினார். ஊஹும். பாறைகள் உருகவில்லை. ஏனென்றால் அவருடைய இசையில் அகங்காரம் இருந்தது. இசையை ஒரு பூசையாகச் செய்யும் போதுதான் அது அதிக சக்தி பெறுகிறது.''

"ம்யூசிக் ஃபன்' என்ற இசை அறிமுக நூலில் லலிதா ராமகிருஷ்ணா எழுதிய புராண நிகழ்ச்சி இது.

கர்நாடக இசையைப் பற்றிய அறிமுகமாக இந்தக் குட்டிப் புத்தகம் எழுதியிருக்கிறார் லலிதா ராமகிருஷ்ணா. "இவர் எழுதும் கர்நாடக இசை பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் "ஸ்ருதி', "ஹிந்து'விலும் நிறைய வெளியாகி வருகின்றன.) சிறுவர் சிறுமிகளுக்கும் சுவாரசியமாக இந்த நூல் இருக்க வேண்டும் என்ற அக்கறையோடு அங்கங்கே புதிர்கள் (க்விஸ்), தகவல்கள் என்று ராகங்கள் பற்றியும், தாளங்கள் பற்றியும் வெகு எளிமையாகத் தொகுத்திருக்கிறார்.

தமிழ்ப் பாடல்களின் முதல் அடியைக் கொடுத்துவிட்டு, கீழேயே பாடல்களை எழுதியவர்களின் பெயர்களைக் கொடுத்து, இயற்றியவர் யார் என்று இணைக்கச் சொல்லும் புதிர்.

பண்டைய பாலைகளுடன் இன்றைய ராகங்களை இணைக்கச் சொல்கிறார். எல்லாவற்றுக்கும் எளிமையான வழி (க்ளு)யும் கொடுத்திருக்கிறார்.

காலப்ரமாணம், ஜாரு, கண்டம், திஸ்ரம் எல்லாம் கர்நாடக இசையில் வரும் வார்த்தைகள். இவற்றுக்கு என்ன பொருள் என்று தனியே தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.

பாபநாசம் சிவன் உட்பட பல பாடலாசிரியர்கள் குறிப்புகள். பாரம்பரிய மரபு வழியாக வந்திருக்கும் நூல்கள் எழுதப்பட்ட காலம், சில தியாகராஜர்-தீட்சிதர் பாடல்களுக்கு உரை என்று அதிகம் சிரமப்பட வைக்காமல் விஷயத்தைச் சொல்லி இருக்கிறார் லலிதா ராமகிருஷ்ணா.

சித்திரங்கள் நூலுக்கு அழுகு சேர்க்கின்றன. குறிப்பாக, எஸ்.ராஜம் வரைந்திருக்கும் சித்திரங்கள். (அட்டையிலேயே, பாறையில் மாட்டிக் கொண்ட வீணையை மீட்க நாரதர் முயற்சி செய்ய, அனுமன் பணிந்து அவர் முன் நிற்கிற காட்சி ஓவியர் எஸ்.ராஜத்தின் கைவண்ணம்தான்.)

இசை பயிலச் சேரும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நம் கர்நாடக இசையில் ஆர்வம் காட்டும் அயல்நாட்டினர் நம் இசை பற்றி ஏதும் கேட்டால், விழித்துக் கொண்டு நிற்காமல் இந்த நூலை அவர்களிடம் கொடுத்தால் போதும்!

யார் பாடுகிறார், என்ன பாடுகிறார், அவர் பாட்டைக் கேட்க எப்படி இவ்வளவு கூட்டம் வருகிறது? நாமும் இந்த இசையை ரசிப்பது எப்படி?' என்றெல்லாம் யோசிப்பவர்களுக்கு இந்தச் சிறு நூல் பதில் தருகிறது.

இதை வெளிக் கொண்டு வந்ததற்காக "தத்வாலோகா' அமைப்பைப் பாராட்ட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.