வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: ஓவியர் சந்தானராஜ் நினைவாக...

அமெரிக்க பிலடெல்ஃபியா நகரைச் சேர்ந்த இந்திய நடனக்குழு "த்ரீ அக்ஷா', இந்திய கலாசாரத்தை பரதநாட்டிய வடிவில், அமெரிக்க-கனடா நகரங்களில் தொடர்ந்து பரப்பி வரும் அமைப்பு இது. இந்திய கலாசாரத் தொடர்பு கவுன்சில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:59 am

சாருகேசி

அமெரிக்க பிலடெல்ஃபியா நகரைச் சேர்ந்த இந்திய நடனக்குழு "த்ரீ அக்ஷா', இந்திய கலாசாரத்தை பரதநாட்டிய வடிவில், அமெரிக்க-கனடா நகரங்களில் தொடர்ந்து பரப்பி வரும் அமைப்பு இது.

இந்திய கலாசாரத் தொடர்பு கவுன்சில் சார்பில், இந்தியாவின் பிற தலைநகரங்களில் நிகழ்ச்சி வழங்கிவிட்டு, சென்ற வாரம் கிருஷ்ண கான சபாவில் தங்கள் நிகழ்ச்சியை வழங்கினார்கள். அடவுகள், அரைமண்டி என்று பரதநாட்டியத்தின் அடிப்படை அம்சங்களை வைத்துக்கொண்டு, சற்று வித்தியாசமான முறையில் சக்ரா (வட்டம்), த்ரிகோணம் (முக்கோணம்), சமரேகா (நேர்கோடு), நட்சத்திரம் என்று பல வடிவங்களில் மேடையை முழுவதும் ஆக்ரமித்தார்கள். பாடல் என்று ஒரு வரி கூடக் கிடையாது. சொற்கட்டுகளும், அத்தோடு ஒட்டிய வீணை-மிருதங்க வாத்திய ஒலிகளே இசை. இறுதியாக தில்லானா. அதிலும் பாடல் ஏதும் இல்லை. ஆனால் சுமார் ஒரு மணிநேர நிகழ்ச்சியையும் பார்க்க வைத்த சாமர்த்தியம் ஒளி அமைப்பாளர் சாய் வெங்கடேஷினுடையது. ஒளி வடிவமைப்பாளராக சுமார் 2000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவராம் இந்த பெங்களூர்க்காரர்.

"நடனத்துக்கும் கணிதத்துக்கும் இடையே ஓர் உரையாடல்' என்று நிகழ்ச்சியை வர்ணித்தார்கள். பேராசிரியர் சி.வி.சந்திரசேகர், பிரகா பெஸ்ஸல், நவ்தேஜ் சிங் ஜோஹர் போன்ற பிரபல பரதநடனக் கலைஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று நடன அமைப்புகளைச் செய்திருந்தார் விஜி ராவ். எனவே கற்பனை புதிதாக இருந்தாலும், பாரம்பரிய வடிவ மீறல்கள் ஏதும் இவர்கள் நடனத்தில் இருக்கவில்லை.

அமீதா பழனிவேல், நடாஷா வதேரா, நேஹா நடராஜ், ஸ்ருதி அய்யர் மற்றும் விஜி ராவ் பங்கு கொண்ட இந்த "பிரயோக்' நடன நிகழ்ச்சி, சம்பிரதாயமான அலாரிப்பு-டு-தில்லானா வடிவத்தில் அமையாவிட்டாலும், கற்பனைகளைப் புதிய வார்ப்புகளில் வழங்கியதில் மாறுபட்ட படைப்பாக இருந்தது. பிரவீண் ஏர்வின் இசை குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாக சார்ஸþர் ஃபவுண்டேஷன் மேடைக்குக் கொண்டு வரும் இளம் இசைக் கலைஞர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாமல் போனதில்லை. பெங்களூரிலிருந்து வந்திருந்த இளைஞர் ஜி.ரவிகிரணின் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருந்ததே தவிர, சற்று ஏமாற்றமே தந்தது. இத்தனைக்கும் பெரியவர் ஆர்.கே.ஸ்ரீகண்டனிடம் தம் இசையை மெருகேற்றிக் கொண்டவர். சமீப காலமாக டி.எம். கிருஷ்ணாவிடம் வந்து கற்றுக் கொள்கிறாராம். வேர்ல்ட் மியூசிக் சானலில், கர்நாடக இசை நிகழ்ச்சிகளுக்கு வெகு நேர்த்தியாக அறிமுகம் செய்பவர் இவர்தான் என்று தெரிந்ததும், இவரைக் கேட்கத் தூண்டியது.

ஆனால் கச்சேரியில் முக்கிய இடம் பெற்ற காம்போதி ராகத்தை இத்தனை வளர்த்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது. பிறகு நிரவலின் போதும் அதிகப்படியாக நீளும்போது, ஒரே சங்கதியையே மீண்டும் மீண்டும் பாடவேண்டிய நிலை உண்டாகிவிடுகிறது. ஆலாபனை கச்சிதமாக இருந்துவிட்டால், நிரவலின் போதும், சுவரம் பாடும்போதும் மேலும் கற்பனை வளத்தைக் காண்பிக்க வாய்ப்பு கிடைக்கும். அதிலும் உரத்த குரலில் அதிக நேரம் பாடும்போது, கேட்க அலுப்புத் தட்டிவிடுகிறது.

இளைஞர் ரவிகிரண், தன் வளர்ச்சி கருதி, இவற்றை மனதில் கொள்வது நல்லது.

"மணிக்கொடி' கால "சிட்டி'யின் நூற்றாண்டு விழாவை, அவர் குடும்பத்தினர் கொண்டாடிய எளிமை மனத்தைத் தொட்டது. சாஸ்திரி நகரின் சிறு மன்றத்தில், ஓர் அமைதியான மாலை நேரத்தில் கூட்டம் நடந்தது. சிட்டியை அறிந்தவர்களே அங்கே இருந்தனர்.

தன் தாயார் கிருத்திகாவும், சிட்டியும் வைத்திருந்த கடிதப் போக்குவரத்தைப் பற்றிக் குறிப்பிட்ட மீனா சுவாமிநாதன், அவற்றைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட விருப்பம் தெரிவித்தார். தகுந்த பதிப்பாளர் முன்வருவாரானால் அந்தப் புத்தகம் வெளிவரும் என்றார். (ஒரு சில கடிதங்கள் 40-பக்க நோட்டுப் புத்தக அளவிலும் கூட எழுதப்பட்டிருக்கின்றனவாம்!)

சிறப்புப் பேச்சாளர், "அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், "சிட்டி'யின் நகைச்சுவையையும், நினைவாற்றலையும் குறிப்பிட்டுப் பேசினார். சிட்டியைக் கைப்பிடித்த ஜானகி அம்மையாரின் பண்பும், உபசரிப்பும் வெகு உயர்வானவை என்று பல நிகழ்ச்சிகளைக் கூறினார். வெங்கட லஷ்மி, சாந்தா சுப்பிரமணியம் என்று எல்லோருமே ஸ்ரீமதி சிட்டியை நினைவு கூர்ந்தார்கள். சிட்டியின் உறவினரும், எழுத்தாளருமான நரசய்யா சிட்டியைப் பற்றிய "ஸ்லைடு ஷோ' வழங்கினார். ("எங்கள் ஜானகியின் கரத்தைப் பற்றியதால் அல்லவோ ராமா, உனக்குப் புகழ் கிடைத்தது!' என்ற தியாகராஜரின் "மா ஜானகி' பாடலை மதுரை மணியின் பாணியில் பாட, எல்லோர் பேச்சுக்கும் பொருத்தமாகவே அமைந்திருந்தது அந்தப் பாடல்!)

மறைந்த ஓவியர் சந்தானராஜின் நினைவாக ஸ்ரீபார்வதி, காலரியில் சுமார் 25 ஓவியர்களின் ஓவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன. குத்து விளக்கேற்றும்போது ஓவியர்-நடிகர் சிவகுமார், ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி என்று ஓவியர்களின் சிறு கூட்டம்.

மருது, மனோகர், கிருஷ்ணமூர்த்தி, தோட்டா தரணி, வீரசந்தனம் என்று பல ஓவியர்களின் பங்களிப்பு பளிச்செனத் தெரிந்தது. ஆதிமூலத்தின் ஒரே ஓர் ஓவியமும் இடம் பெற்றிருந்தது.

மனோகரின் "மரத்தின் கீழ் பெண்கள்' கறுப்பு வரைகோட்டுப் பேனா ஓவியம், கவனத்தை ஈர்த்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.