வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நால்வர்

ஷெனாய் நகர் புல்லா அவென்யூவில் ஓவியர் சிவராமின் ஓவியங்கள் (ஆர்ட்டீரியோஸ்- பார்க்லேன்ட் பிளேஸ்) நேர்க் கோடுகளால் உருவான ஓவியங்கள். வளைவு, குழைவு ஏதும் இல்லாத வகையில் வரையப்பட்டவை. அப்படியும் அவற்றில் ஒ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:24 pm

சாருகேசி

ஷெனாய் நகர் புல்லா அவென்யூவில் ஓவியர் சிவராமின் ஓவியங்கள் (ஆர்ட்டீரியோஸ்- பார்க்லேன்ட் பிளேஸ்) நேர்க் கோடுகளால் உருவான ஓவியங்கள். வளைவு, குழைவு ஏதும் இல்லாத வகையில் வரையப்பட்டவை. அப்படியும் அவற்றில் ஒரு கவர்ச்சி இருக்கத்தான் இருக்கிறது. உதாரணம்: ராதா-கிருஷ்ணா ஓவியம்.

  "சில்பி' பாணியில் கோயில் சிற்பங்களை பத்திரிகைகளுக்காக வரைந்திருக்கிறார். பல நகரங்களில் ஓவியக் காட்சி நடத்தியவர். கம்ப்யூட்டர் கிராஃபிக்ûஸ விட, அக்ரிலிக்கையும், ஆயிலையும்தான் விரும்புகிறார். கையால் பிரஷ்ஷைப் பிடித்துக் கொண்டு வண்ணங்களைக் குழைத்துப் பூசுவதுதான் அவருக்குத் திருப்தி தருகிறதாம்.  (ஜூன் 7 வரை ஓவியங்களைப் பார்க்கலாம்)

  குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணாவின் நாலுமணி நேரக் கச்சேரியில் முக்கியமான பகுதி சண்முகப்ரியா ராகம்-தானம்-பல்லவி. அதற்கு முன்னால் இரண்டொரு தியாகராஜர் கீர்த்தனைகளைப் பாடிவிட்டுத்தான் ரா-தா-ப-வுக்கு வந்தார். அதில் ஒன்று சக்கரவாகம் ராகப் பாடல், "ஸýகுணமுலே செப்பு கொண்டி சுந்தர ரகுராம'.

  சரி, சண்முகப்ரியா ராக ஆலாபனை எப்படி இருந்தது? ஆரஅமர, இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு அந்த ராகத்தின் வடிவழகைத் தம் குரல் வளத்தால் ஓவியமாய் வரைந்தார் பாலமுரளிகிருஷ்ணா.

  வயலின் வாசித்த சஞ்சீவ், சற்றும் சளைக்காதவர். பாலமுரளியின் கற்பனை வளத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு, தம்முடைய சொந்தப் பாணியில் சண்முகப்ரியாவைப் படைத்தார்.

  பாலமுரளியின் குரல் எடுப்பாக இருக்கிறது. பாடுகிற பாணி இயற்கையாக இருக்கிறது. செயற்கையாகவோ, கைதட்டலுக்காகவோ இந்த இளைஞர் எந்த வித்தையும் செய்யாதிருப்பது அவர் மீது நம்பிக்கை வைக்கச் செய்கிறது. ஏற்கனவே ஒரு சீனியர் இவர் பெயரில் சரித்திரம் படைத்தவர். எனவே இந்த ஜூனியர் தம் பெயரை நிலைநாட்டுவதில் குறியாக இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அதற்காக அவசரப்படவில்லை. தன் ஒவ்வோர் அடியையும் நிதானமாகவும் உறுதியாகவும் எடுத்து வைத்து வருகிறார் என்பதையும் உணரமுடிகிறது.

  ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, சாகித்திய அகடமி யோசித்து யோசித்து ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதில் தமிழ் எழுத்தாளர்கள் நான்கு பேரைத் தேர்வும் செய்திருக்கிறது.

  சா.கந்தசாமி, பிரபஞ்சன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோர்தான் இந்த நால்வர். இவர்களுக்கு ஆறுமாத அவகாசம் அளித்து, அவர்களுக்குக் கணிசமான சன்மானமும் அளித்து, அவர்களைப் புதிய படைப்புகள் படைக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

  கந்தசாமி உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார். ""நான் மைசூரில் மூன்று மாதம் தங்கி இருந்து ஒரு நாவல் எழுதவிருக்கிறேன். பிறகு சிம்லா போய் அங்கேயும் ஒரு நாவல் எழுதி முடிப்பேன். அவர்கள் தரும் அரிய வாய்ப்பை வீணாக்குவானேன்? ஏற்கனவே கதைகளுக்கான கருவை யோசித்து வைத்திருக்கிறேன். முன்பு அங்கே தங்கித்தான் "சூரியவம்சம்' நாவலை உருவாக்கினேன். இந்த முறையும் முதலில் அங்கேதான் போகப் போகிறேன். அதை முடித்த பிறகு சிம்லா போவேன்!'' என்கிறார்.

  தமிழன்பன், நயமான கவிஞர் என்று மட்டுமே அறிந்தவர்களுக்கு, அவர் எழுதிய முதல் படைப்பே நாவல்தான் என்று கூறினால் வியப்பாக இருக்கும். சுமார் 44 வருடங்களுக்கு முன், கையெழுத்துப் பிரதியை எடுத்துக் கொண்டு, பாரதிதாசன் துணையோடு, பாரி நிலையம் போனார் தமிழன்பன். உரிமையாளரிடம், ""இதைப் போடு!'' என்றாராம் புரட்சிக் கவிஞர் உரிமையோடு. புத்தகமாகப் போட்டார்களாம் பாரி நிலையத்தார். "ஒரு மழை நாளில்' என்ற சிறுகதைத் தொகுதியும் கவிஞரின் படைப்புதான். நாடகத்தையும் விட்டுவைக்கவில்லை தமிழன்பன். "ஈரநெருப்பு', இவர் நாடகத் தொகுப்பு.

  ""நீங்கள் எந்த ஊர் போகப் போகிறீர்கள்?'' என்ற கேள்விக்கு, ""நான் சென்னையிலேயேதான் செம்மொழி அலுவலகத்துக்குப் போய் எழுத நினைத்திருக்கிருக்கிறேன்!'' என்றார் கவிஞர் தமிழன்பன்.

  பிரபஞ்சன் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் தஞ்சாவூர். எழுதப் போவது நாவல். தஞ்சையில் வாழ்ந்த மராத்தியர் பற்றி இருக்குமாம். தமக்கு சங்கீதத்திலும் நடனத்திலும் ஈடுபாடு இருப்பதால், இந்த இரண்டு அம்சங்களும் நாவலில் இடம்பெறும் என்கிறார் பிரபஞ்சன். சாகித்திய அகடமியின் பரிசுபெற்ற "வானம் வசப்படும்', இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற "மானுடம் வெல்லும்' தவிர, பிரபஞ்சனின் 172 சிறுகதைகள் கொண்ட இரண்டு தொகுதிகள், நேசம் மறப்பதில்லை, சந்தியா, கண்ணீரால் காப்போம், நானும் நானும், நீயும் நீயும், காதல் எனும் ஏணியிலே.. என்று (எல்லாமே கவிதா பதிப்பகம் வெளியீடுகள்) பிரபஞ்சனின் படைப்புலகம் விரிவானது. ஆனந்தரங்கம் பிள்ளை டயரியை வைத்து எழுதிய வாழ்க்கை வரலாறு ஒரு முக்கியமான புத்தகம்.

  ராஜம் கிருஷ்ணன் இப்போது மருத்துவ விடுதியில், பெண்கள் பகுதியில் தங்கி இருக்கிறார். அவருக்கு ஆறுமாத காலம் புதிய படைப்புகளுக்குக் கொடுத்திருந்தாலும், அவர் என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்று தெரியாத சூழ்நிலையில், இப்போதைக்கு எதுவும் குறிப்பிட இயலாது. அவருடைய நூல்கள் அனைத்தும் தேச உடைமை ஆக்கப்பட்டது சமீபத்திய நிகழ்வு. படைப்பாளர் வாழும் காலத்திலேயே அப்படிச் செய்திருப்பதும் இதுவே முதல் முறை எனத் தெரிகிறது. நால்வருமே சாகித்திய அகடமி பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.