அதிதிக்கு முதல் பரிசு!
முதல் முறையாக ஒரு நாவல் எழுதி, அது புத்தகமாக வந்துவிட்டால், நம் தமிழ் எழுத்தாளர்கள் எப்படி (செயற்கைத்தனமாக) நடந்துகொள்ள வேண்டும் என்று ஆங்கில நாவலாசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். "என்


முதல் முறையாக ஒரு நாவல் எழுதி, அது புத்தகமாக வந்துவிட்டால், நம் தமிழ் எழுத்தாளர்கள் எப்படி (செயற்கைத்தனமாக) நடந்துகொள்ள வேண்டும் என்று ஆங்கில நாவலாசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
"என் சிநேகிதி சாஞ்ச்சோ' என்ற தம் முதல் ஆங்கில நாவலை வெளியிட மும்பையிலிருந்து வந்திருந்தார் அமித் வர்மா. அமெரிக்க நாளிதழ்களுக்கு மும்பை நிருபராக இருந்தவர். பதினைந்து வருடங்கள் பணியாற்றிய பிறகு, அது போதும் என்று விலகி வந்து நாவல் எழுதும் தம் ஆர்வத்தைத் தணித்துக் கொள்ள, போட்ட பிள்ளையார் சுழிதான் "என் சிநேகிதி சாஞ்ச்சோ'. பத்திரிகை நிருபராகப் பதினைந்து வருடங்கள் பணியாற்றியவரின் முதல் நாவலில், ஒரு பத்திரிகை நிருபர் அல்லாமல் வேறு யார் கதாநாயகனாக இருக்க முடியும்? "ஆனால் இது சுயசரிதை அல்ல, என்னை நம்புங்கள்!' என்றார் அமித்.
""கதாநாயகன் பெயர் அபீர் கங்கூலி. ஏன் அபீர்? "நானும் என் நண்பன் அபீரும் ஒரு டெஸ்ட் மாட்ச் பார்த்துக் கொண்டிருந்தோம். சச்சின் சதம் அடிப்பார் என்று நான் பந்தயம் கட்டினேன். ஆனால் நண்பன் அபீர் ஜெயித்து விட்டான். சச்சின் என்னைத் தோற்கடித்துவிட்டார். அதனால் கதாநாயகன் பெயரை அபீர் என்று வைத்தேன்!''
""வசதி இருந்தால் தவிர, முழு நேர நாவலாசிரியராக முயலாதீர்கள். இந்தியாவில் அது சாத்தியமில்லை!'' என்றார் அமித். இப்போது இரண்டாவது நாவலை எழுதத் தொடங்கியிருக்கிறாராம். ""அதற்குப் பிறகு?'' என்று கேட்டான் ஒரு குட்டிப் பையன், படு சீரியஸôக.
மூன்றாவது நாவல் எழுதுவேன். அப்புறம் நான்காவது, அதற்கடுத்து ஐந்தாவது...'' என்றார் அமித். சிரித்துக் கொண்டே.
புரந்தரதாசர் பாடல்களை மட்டுமே வைத்து ஒரு முழு கச்சேரி செய்தார் பெங்களூர் சங்கர், மியூசிக் அகடமியில். நல்ல வளமான குரல். கம்பீரமும் இனிமையும் சேர்ந்த குரல்.
வந்தே சுகதாயி (நாட்டை), நம்பிக் கெட்டவர் இல்லவோ? (தமிழ் மாதிரி இருந்தாலும், கன்னடம்தான்! கல்யாணி ராகம்) மனவனே சுதின (நாட்டக்குறிஞ்சி), ஏமி தன்யவோ (தோடி), எந்த புண்யமே கோபி (சஹானா), ஸ்ரீஹரி நீனே கதி (கரஹரப்ரியா) என்று பெரும்பாலும் கர்நாடக இசைக் கச்சேரி மேடைகளில் அதிகமாகக் கேட்காத பாடல்களைப் பாடினார். கல்யாணி ஆலாபனையிலும், தோடி ஆலாபனையிலும் தம் கற்பனை வளத்தை முழுதும் வாரி வழங்கினார். கச்சேரியின் முன்னால், பப்பு வேணுகோபால் ராவ் புரந்தரதாசர் பற்றிய அறிமுக உரையில், அன்னமாசார்யாவும் புரந்தரதாசரும் ஒரு தடவை சந்தித்துக் கொண்டதாகவும், அப்போது புரந்தரதாசருக்கு 19 வயது என்றும் குறிப்பிட்டார். (சங்கருக்கு வயலின் வாசித்தவர், மைசூர் ஸ்ரீகாந்த். பாடகருக்குக் கிடைத்த அத்தனை கைதட்டல்களையும் அவரும் பெற்றுக்கொண்டார். அத்தனை அபாரமான வாசிப்பு.)
""சபா மேடை நாடகங்களின் தரம் முன்னைவிட இப்போது இன்னும் நன்றாக இருக்கிறது'' என்று கூறினார் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ராமானுஜம். டம்மீஸ் டிராமா குழுவின் புதிய நாடகம் "அதிதி'. உண்மைதான்' என்று சொல்ல வைத்தது.
நறுக் நறுக்கென்று வசனம். ஒரு பாத்திரம் இன்னொரு பாத்திரத்தின் கேள்விக்குப் பதில் சொன்னால், அந்தப் பதிலில் இருந்தே இன்னொரு கேள்விக்கு கொக்கியைக் போட்டுப் பதிலைப் பறிப்பது நாடகாசிரியர் ஸ்ரீவத்சனின் பாணி.
ஜனங்கள் ஒரேயடியாகக் காலி செய்துவிட்டுப் போன ஒரு பொட்டல் வெளி கிராமத்தில் ஒரே ஒரு பழைய கட்டடம். அதில் தன்னந்தனியே வசிக்கிற சங்கரன். தற்கொலை செய்துகொள்ள வருகிற இளைஞன், மனம் மாறி, ஊருக்கே திரும்பி விடுகிறான். இங்கே வந்துவிட்டுப் போன நேரம், அவனுக்கு அடிக்கிறது யோகம். அந்த ஊரில் மகன் பெயரில் இஞ்சினியரிங் கல்லூரி கட்ட, இப்போது வேலை ஏதும் இல்லாத பழைய ஆர்க்கிடெக்ட் நண்பனுடன் வந்து, சங்கரனை இடத்தைக் காலி பண்ணச் சொல்கிறார் ராம். ஆஸ்திரேலியாவில் மகன் ஆக்ஸிடென்ட்டில் மரணமடைகிறான். முழு கதையையும் சொல்லிவிட்டால், இனி பார்க்கப் போகிறவர்களின் சுவாரசியத்தைக் கெடுத்த பாவம் என்னைச் சேரும்.
எப்போதும் கேலியும் கிண்டலும் பேசிச் சிரிக்க வைக்கும் பாத்திரங்களையே டம்மீஸ் நாடகங்களில் ஏற்று வந்த ஸ்ரீதர் இதில் சங்கரனாக வருகிறார். எப்போதும் சீரியஸ் பாத்திரங்களில் வரும் கிரிதரன், இதில் அரசியல்வாதி நண்பனாக வந்து சிரிக்க வைக்க முயல்கிறார்.
நாடகத்தில் வசனமும், சங்கரன் பாத்திரமும்தான் அழுத்தமானவை. குறிப்பாக, வசனத்தில் வரும் தத்துவார்த்தமான வாக்கியங்களுக்கு, சங்கரன் கிட்டத்தட்ட உயிர் கொடுக்கிறார். வசனங்கள் சில யோசிக்க வைக்கின்றன. சங்கரன் வசிக்கும் இடம் என்னவாக இருந்தது? அந்த இடத்துக்கு ஏன் அத்தனை மகத்துவம்? சங்கரன் யார்? இவை எல்லாம் தெரிய வேண்டும் என்றால், நாடகத்தைக் கடைசி வரை பார்க்க வேண்டும். கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவில் இதற்குத்தான் "மிகச் சிறந்த நாடகம்' என்ற பரிசு அறிவிக்கப்பட்டிக்கிறது. பாராட்டுகள்.
விரிபோணி வர்ணம் முதல், சூர்தாஸ் பஜன் வரை விறுவிறுப்பு குறையாமல் பாடினார் ஸ்ரீரஞ்சனி சந்தான கோபாலன். குரலில் இனிமை. வார்த்தைகளில் தெளிவு. நிரவலிலும், ஆலாபனையிலும் இயல்பாகத் தெரியும் கற்பனை. எல்லாவற்றுக்கும் மேலாக, நூறு சதவிகித சுய நம்பிக்கை. ஏதோ தினசரி மேடைக் கச்சேரியே செய்து வந்துகொண்டிருக்கிற மாதிரி ஓர் அனாயாசம்.
சஹானா ராகத்தில், முத்தையா பாகவதர் பாடல், "மானமு காவலனு' ஸ்ரீரஞ்சனி ராகத்தில், தியாகராஜரின் "மாரு பல்க'. யதுகுலகாம்போதி ராகத்தில், சுப்பராய சாஸ்திரியின் "நின்னு சேவிஞ்ச', ஹம்சநாதம் ராகத்தில் தியாகராஜரின் "பண்ட்டுரீதி'. பிலஹரி ராகத்தில், மைசூர் வாசுதேவாச்சார் கீர்த்தனை "ஸ்ரீசாமுண்டேசுவரி', காபியில் தியாகராஜரின் ராமபாஹி. இறுதியாக சூர்தாஸ்பஜன். இதுதான் பட்டியல்.
பாடகர் சந்தான கோபாலனின் மகள் ஸ்ரீரஞ்சனி. ஆனால் அவருக்கு அப்பாவே குருவாக இருந்தபோதும், அவருடைய பாணியைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. அதுதான் சிறப்பான அம்சம்.
கச்சேரியில் குறை சொல்ல வேண்டிய பகுதி கணபதிராமனின் மிருதங்க வாசிப்பு. இப்படி அடிஅடியென்று அடித்தால் மிருதங்கத்தாலும் தாங்க முடியாது. நம்மாலும் தாங்க முடியாது. அதிலும் முத்தாய்ப்பு வருகிறபோது, இப்படி ஆவேசமாக மிருதங்கத்தை அடிக்கிற வித்துவான், ரசிகர்கள் மீது கொஞ்சம் கருணை காட்ட வேண்டும். இனி கணபதிராமன் மிருதங்கம் என்றால், ஒன்று காதில் பஞ்சோடு போக வேண்டும். இல்லை என்றால் அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கக் கூடாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...