நகர்வலம்: அறிவே விளக்கு!
அரியக்குடி மியூசிக் ஃபவுண்டேஷனும் இந்தியன் கவுன்சில் ஃபார் கல்சுரல் ரிலேஷன்ஸ் அமைப்பும் கைகோர்த்து மாதம் தோறும் நடத்திவரும் இசை நிகழ்ச்சிகளில் கச்சிதமான அறிமுக உரையோடு, கச்சேரி தொடங்கிவிடுகிறது.


அரியக்குடி மியூசிக் ஃபவுண்டேஷனும் இந்தியன் கவுன்சில் ஃபார் கல்சுரல் ரிலேஷன்ஸ் அமைப்பும் கைகோர்த்து மாதம் தோறும் நடத்திவரும் இசை நிகழ்ச்சிகளில் கச்சிதமான அறிமுக உரையோடு, கச்சேரி தொடங்கிவிடுகிறது.
சிக்கில் மாலா சந்திரசேகர் வழங்கிய புல்லாங்குழல் கச்சேரியில், சுத்த தன்யாசியில் "சுப்ரமண்யேன', பந்துவராளி ஆலாபனைக்குப் பிறகு "நின்னே நெர நம்மினானு', சியாமா சாஸ்திரியின் "மதி வேறே கதி' என்ற ஆனந்த பைரவி ராக கீர்த்தனை என்று வரிசையாக வந்தபோதும், அரியக்குடியின் கச்சேரியில் வழக்கமாகக் கேட்கும் காம்போதி ராகப்பாடல் "ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே'க்குத்தான் அன்று ராஜமரியாதை வழங்கப்பட்டது. மாலா சந்திரசேகர் வாசிப்பில் ஒரு தொடர்ச்சி இருக்கும். அதாவது துண்டுதுண்டாக வாசித்து நிறுத்தி, பொறுமையைச் சோதிக்க மாட்டார். தாள வாத்தியக்காரர்களை தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கமாட்டார். அன்றைக்கு வயலின் வாசித்த டாக்டர் ஹேமலதா, மாலாவின் இன்னொரு பகுதி போலவே செயல்பட்டார். ஆலாபனைகளில் ஆகட்டும், நிரவல் - சுவரங்களில் ஆகட்டும், அவர் வாசிப்பு உயர்தரமாக இருந்தது. பத்ரி சதீஷ்குமார் மிருதங்கமும், ஈ.எம்.சுப்பிரமணியம் கடமும் குழலோடு இசைந்து வந்தன. அமுக்கிவிடவில்லை.
கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி நினைவாக இரண்டு நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது "கர்னாடிகா' அமைப்பு. முதல் நாள் இரண்டு கச்சேரிகளுக்கு நடுவே சற்று பேசினார் பாடகர் பி.எஸ்.நாராயணசாமி (அதாவது வி.கே.மணிமாறன் கச்சேரி முடிந்து சுகுணா வரதாச்சாரி கச்சேரி தொடங்கும் முன்) தம் ஐம்பதாண்டுக் கால நண்பரை, "மிகத் திறமை வாய்ந்தவர், கச்சேரிகள் இல்லையே என்று குமைந்து கொண்டிருக்காதவர்' என்று பாராட்டினார் பி.எஸ்.என். சிரமமாக இருக்கும் பாடல்களுக்குக் கூட எளிதாக இசையமைத்துவிடுவாராம்.
இரண்டாம் நாள் பேச்சு எதுவும் கிடையாது என்றாலும், சசி கிரண் - கணேஷ் நிகழ்ச்சிக்குப் பிறகு பாட வந்த வேதவல்லி, ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார்.
"பெண் கொடுத்தவர் யாரையா, முருகையா, உமக்கு' என்று நிந்தாஸ்துதி வகையைச் சேர்ந்த குந்தலவராளி ராகப் பாடல் ஒன்றைக் கேட்டுவிட்டு, மிக நன்றாக இருக்கிறதே என்று ஒரு பாடகரிடம் எழுதி வாங்கிக் கொண்டு பாட ஆரம்பித்தாராம் வேதவல்லி. ஆனால் பாடலை எழுதியது யார் என்று தெரியவில்லை. கடைசியில் ஒரு நாள் இவர் அந்தப் பாடலை ஒரு கச்சேரியில் பாடுவதைக் கேட்ட கல்கத்தா கிருஷ்ணமூர்த்தியே, "இதை யார் எழுதியது தெரியுமோ?' என்று கேட்டாராம். "அதுதான் தெரியவில்லை. நானும் பலரிடம் கேட்டுவிட்டேன்' என்றாராம் வேதவல்லி. தாம்தான் அதை எழுதியவர் என்று சற்று சங்கோஜத்துடன் சொன்னாராம் கிருஷ்ணமூர்த்தி. ஆர்ப்பாட்டம் சிறிதும் இல்லாத அபூர்வமான குரு அவர்' என்றார் வேதவல்லி. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பல பாடல்களுக்கு கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி அழகாக மெட்டமைக்க, சஞ்சய், செüமியா எல்லோரும் பாடி சிடிக்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றைக் கேட்பவர்கள் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தியின் ஆற்றலை நிச்சயம் பாராட்டுவார்கள்.
மொழிபெயர்ப்பு என்றே தெரியாத அளவுக்கு தாகூரையும், தாராசங்கர் பானர்ஜியையும், சரத் சந்திரரையும், பங்கிம் சந்திரரையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை த.நா.குமாரசாமிக்கு உண்டு. (பூந்தோட்டம், விடுதலை, ஒட்டுச் செடி, வீட்டுப் புறா, அன்பின் எல்லை, குறுக்குச் சுவர் என்று பல நாவல்கள், "கன்யாகுமரி' என்ற சிறுகதைத் தொகுப்பு என தாமே அசலாகப் படைத்த ஆசிரியர் த.நா.குமாரசாமி!)
சாந்தி நிகேதன் போய் ரவீந்திரநாத் தாகூரிடமே கல்வி கற்றவர். அதனால்தானோ என்னவோ, மூவர், லாவண்யா, சதுரங்கம், வெற்றி, இரு சகோதரிகள், காரும் கதிரும், போஸ்ட் மாஸ்டர் எனப் பல நாவல்களை மொழிபெயர்த்தார். இவை தவிர, ஹரிசாதன முகோபாத்யாய எழுதிய "ரங்க மஹால்', பிரபோத் குமார் சன்யால் எழுதிய "யாத்ரிகன்', சரோஷ்குமார் ராய் செüத்ரியின் "விளக்கும் காட்டிலும்', சந்தோஷ்குமார் போஸின் "சந்துவீடு', தாராசங்கர் பானர்ஜியின் "நீலகண்டன்' என்று எத்தனை எத்தனை வங்காள ஆசிரியர்களை அறிமுகம் செய்திருக்கிறார் த.நா.குமாரசாமி! இத்தனை வகைவகையான எழுத்தாளர்களின் படைப்புகளை, வேறு எந்தத் தமிழ் எழுத்தாளரும் மொழிபெயர்த்திருப்பதாகத் தெரியவில்லை.
சமீபத்தில் அவருடைய நூற்றாண்டு வந்து போனது எப்படி எவருக்கும் தெரியாமல், பெரிய விழா ஏதும் இல்லாமல் போயிற்றோ, அதேபோல அவர் பணிகளும் யார் கவனத்தையும் ஈர்க்காமல் போய்விடக்கூடாது. (பொதுவாகவே எழுத்தாளரோடு அவர் படைப்புகளும் மறக்கப்பட்டுவிடும்!) என்றாலும், அவர் நூற்றாண்டைத் தொடர்ந்து "அல்லயன்ஸ்' வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கும் இத்தனை நூல்களையும் ஒருசேர இந்த வாரம் பார்க்க நேர்ந்த போது, த.நா.குமாரசாமியின் உழைப்பு பிரமிக்க வைத்தது.
ஒரு முறை "அல்லயன்ஸ்' நிறுவனர் குப்புசாமி அய்யர் திருவண்ணாமலை போய் ரமணரையும், அண்ணாமலை தீபத்தையும் தரிசித்துவிட்டு வந்ததும், த.நா.குமாரசாமியிடம் தம் நிறுவனத்துக்குச் சின்னமாக மலையும் தீபமும் இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தாராம். குமாரசாமி அதை "அறிவே விளக்கு' என்று உருவாக்கிக் கொடுத்தாராம். அதற்காக குப்புசாமி அய்யர் அவருக்கு வெகுமதி வழங்கினாராம்.
இப்போதெல்லாம் "சங்கீத வித்வத் சபை' என்ற புராதனப் பெயரையும் மியூசிக் அகடமி என்ற நவீனப் பெயரையும் பெற்றிருக்கும் அமைப்பு, வாக்கேயக்காரர்களின் நினைவு நாட்களை மறக்காமல் கொண்டாடி வருகிறது.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரியின் தினத்தை, சாத்தூர் சகோதரிகள் (லலிதா சந்தானம், புவனா ராஜகோபால்) கச்சேரியோடு கொண்டாடியது அகடமி.
சியாமா சாஸ்திரியின் முத்திரையான "சியாம கிருஷ்ண' அவர் பாடல்களில் வரும். தமிழில் ஒன்றோ இரண்டோ பாடல்கள் அவர் இயற்றியிருக்கிறார்.
சாத்தூர் சகோதரிகள் இசை கேட்கும்படியாக, அமைதியான ஆற்றின் ஓட்டம் போல இருந்தது. கேட்க இதமாக இருந்தது. சாதாரணமாக "இருவர் இசை'யில் சத்தம் அதிகமாக இருக்கும். லலிதா சந்தானம் குரலும் சரி, புவனா ராஜகோபால் குரலும் சரி, பாடல்களின் இனிமையை ரசித்துக் கேட்க வைத்தனர்.
ஹிமாசல தனயே (ஆனந்த பைரவி), மாயம்மா (நாட்டக் குறிஞ்சி), சங்கரி சங்குரு (சாவேரி), ப்ரோவவம்மா (மாஞ்சி), திரிலோகமாதா (பரஸ்), தல்லி நின்னுநெர (கல்யாணி), கனகசைல (புன்னாகவராளி) என்று எல்லாமே சியாமா சாஸ்திரி கீர்த்தனைகள். முத்தாய்ப்பாக ஸ்ரீ ராகத்தில் "கருணஜுட நின்னு' என்ற பாடல். வயலின் வாசித்த பத்மா சங்கர், மிருதங்கம் வாசித்த சியாம் சுந்தர் இருவருமே இரட்டையரின் இசையோடு இணைந்து வாசித்து, நிகழ்ச்சியின் தரத்தைக் காத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...