நகர்வலம்: இரு நட்சத்திரங்கள்!
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி மாணவர்களுக்காக வெளிவந்த இரண்டு பிரபல இதழ்கள் "கல்கண்டு', "கண்ணன்'. முன்னதற்கு ஆசிரியர் தமிழ்வாணன். பின்னதற்கு ஆசிரியர் "ஆர்வி'. "ஆர்வி' மறைந்து சரியாக ஒரு வர


சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி மாணவர்களுக்காக வெளிவந்த இரண்டு பிரபல இதழ்கள் "கல்கண்டு', "கண்ணன்'. முன்னதற்கு ஆசிரியர் தமிழ்வாணன். பின்னதற்கு ஆசிரியர் "ஆர்வி'.
"ஆர்வி' மறைந்து சரியாக ஒரு வருடம் ஆன தினத்தன்று (ஆகஸ்ட் 29), அவர் குடும்பத்தார் இரண்டு எழுத்தாளர்களுக்குப் பொற்கிழி அளித்துப் பாராட்டுத் தெரிவித்தார்கள். அந்த இரு எழுத்தாளர்களும் இரண்டு நட்சத்திரங்களின் பெயரை தங்களின் புனைப் பெயராகக் கொண்டு எழுதியது விநோத ஒற்றுமை!
ஒருவர் "பூரம்' என்ற பெயரில் எழுதிய சத்தியமூர்த்தி. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பணியாற்றியவர். கணித மேதை ராமானுஜன் பணிபுரிந்த நாற்காலியில் அமர வாய்ப்புக் கிடைத்ததாலோ என்னவோ,"பூரமு'ம் கணிதத்தில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார்.
அறை எண் 12, 302 திருவல்லிக்கேணி ஹை ரோடு முகவரி கொண்ட சீசன் லாட்ஜ்தான் "பூரம்' அப்போது தங்கியிருந்த இடம். அந்த அறையில் இருந்தபடி அவர் எழுதிய பல சிறுகதைகள் கண்ணன் இதழில் வெளியாகியிருந்தன. ஒரு சிறுவர் நாவலுக்குப் பரிசும் பெற்றார். இதற்குப் பிறகு "பூரம்', சுதேசமித்திரன் வார இதழ், கல்கி, கலைமகள் என்று பெரியவர்கள் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். கலைமகள் வர்ணக் கதைப் போட்டி நடத்தியபோது, இவரது "கருவளை' என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.
"கண்ணன்' இதழ் மூலம் ஏராளமான இளம் எழுத்தாளர்களை உருவாக்கினார் ஆர்வி. கண்ணன் இதழ் ரொம்பவும் குழந்தைத்தனமாக இல்லாமல், பள்ளிக்கூட மாணவ-மாணவியரின் தரத்துக்கும் வயதுக்கும் ஏற்றதாக இருந்தது. சிறுகதைகளும், நாவல்களும் அந்த வயதுச் சிறுவர் - சிறுமியரின் வாழ்க்கையை ஒட்டி அமைந்திருந்தன.
இலக்கியவீதி இனியவன், ஜே.எம்.சாலி, ஜோதிர்லதா கிரிஜா, வாதூலன், தே.பார்த்தசாரதி, "சுறாமீன்', இரா.முகி,மண.ரங்கசாமி, ரமணீயன், மாயூரன், ரேவதி என்று ஆர்வி பட்டறையில் தயாரான "கண்ணன்' எழுத்தாளர்கள் பலர் இருக் கிறார்கள்.
பூரம் எழுதிய "கண்ணன்' சிறுகதைகள் ஒரு தொகுப்பாக வெளியாகி இருக்கிறது. சிறுகதைகள் மீது அவருக்கு அளவு கடந்த ஆர்வம் இருந்த காரணத்தாலேயே "பூரம் சிறுகதை ரசிகர்கள் மன்றம்' தொடங்கி, பல எழுத்தாளர்களை அதில் கலந்து கொள்ளச் செய்தார்.
சமீபத்தில் சில ஆண்டுகளாக அவர் பார்வை இழப்பு ஏற்பட்டு, புதிதாக எதுவும் எழுத இயலவில்லை என்பதற்காகவே ரசிகர் மன்றம் அமைத்து, அவற்றைப் படிக்கக் கேட்டு மகிழ்ந்தார் என்றும் கூறலாம். வேதங்களில் அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக, பலருக்கு அவற்றை இலவசமாகக் கற்பித்தார். இதற்காக அவரை காஞ்சி மடத்தில் கவுரவித்தார்கள்.
பாராட்டுப் பெற்ற இன்னொருவர், "ரேவதி' என்ற பெயரில் சிறுவருக்காக எழுதி வந்த ஈ.எஸ்.ஹரிஹரன். அழ.வள்ளியப்பாவுக்குப் பின்னர் இவர் கோகுலம் மாத இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். தினமணியின் "சிறுவர் மணி'க்கும் ஆலோசகராக இருந்து சிறுவர் இலக்கியத்தை வளர்த்திருக்கிறார்.
இவர்ஆர்வியின் சிறுவர் இலக்கியத்தை ஆய்ந்து உருவாக்கிய"சிறுவர் இலக்கியத்தில் ஆர்வி படைத்த கண்ணன் நாவல்கள்' என்ற நூல் இவரது மிக முக்கியப் பணி. இதை உருவாக்க ரேவதிக்கு மூன்று ஆண்டுகளாயினவாம்.
ஆர்வி "கண்ணன்' இதழில் சமூகக் கதைகள் எழுதியது தவிர, "ஜனா' என்ற புனைபெயரில் சரித்திரக் கதைகளும் எழுதியிருக்கிறார். (சந்திரகிரி கோட்டை, காளிகோட்டை ரகசியம்).
அசட்டுப் பிச்சு,நகைச்சுவை கலந்த துப்பறியும் கதை. சைனா - சூசூ, ஜக்கு , ஜக்கு துப்பறி கிறான், ஜம்பு, புதியமுகம், காலக் கப்பல் (விஞ்ஞானக் கதை), ஒருநாள் போதுமா,லீடர் மணி என்று மொத்தம் 11 நாவல்களை அவற்றின் கதையம்சம், நடைச் சிறப்பு, பாத்திரப் படைப்பு, என்று பலகோணங்களில் அலசியிருக்கிறார் ரேவதி. ஆர்வியின் படைப்புகளில் இயல்பான வர்ணணை இழையோடும்.
அதிலும் கிராமப்புறத்தை வர்ணிக்கும்போது நேரே பார்ப்பதுபோல் இருக்கும். சிறுவர் இலக்கியத்தில் "ஆர்வி படைத்த கண்ணன் நாவல்கள்' வெறும் விமர்சனப் படைப்பு அல்ல. நாவலில் அத்தனை அம்சங்களையும் வாசகனுக்கு விளக்கிச் சொல்லும் முழுமையான படைப்பு. ரேவதியின் உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படும் நூல்.
ஆர்வி மறைந்த முதலாண்டு நிகழ்வில், அவர் உருவாக்கிய இரண்டு எழுத்தாளர்கள் பாராட்டுப் பெற்றது மகிழ்ச்சி தருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...