வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: இசை தரும் இதமான இன்பம்!

சில நிகழ்ச்சிகளின் ஏற்பாடே நமக்குள் ஏராளமான எதிர்பார்ப்பை உண்டாக்கும். அந்த எதிர்பார்ப்புகள் ஏறக்குறைய நிறைவு செய்யப்பட்டு விட்டால் "ஆகா, பிரமாதம்!' என்று பாராட்டிவிடுகிறோம். "கல்பத்ருமா' இரண்டு நாள்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:52 pm

சாருகேசி

சில நிகழ்ச்சிகளின் ஏற்பாடே நமக்குள் ஏராளமான எதிர்பார்ப்பை உண்டாக்கும். அந்த எதிர்பார்ப்புகள் ஏறக்குறைய நிறைவு செய்யப்பட்டு விட்டால் "ஆகா, பிரமாதம்!' என்று பாராட்டிவிடுகிறோம்.

"கல்பத்ருமா' இரண்டு நாள் கலை விழா மேற்படி வகையைச் சார்ந்தது. முதல் நாள் சுதா ரகுநாதன் இசை, குரல் இனிமை, விறுவிறுப்பு, புன்முறுவலோடு பக்கவாத்தியக் கலைஞர்களை அரவணைத்துக் கொண்டு செல்லும் இயல்பு என சுதாவின் முத்திரைகள் எல்லாமே நிகழ்ச்சியில் வெளிப்படையாகத் தெரிந்த அம்சங்கள். கல்யாணி ராக "வனஜாட்சி' வர்ணத்தில் துவங்கி, ஜகன்மோகினி ராக "சோபில்லு சப்தஸ்வர', கானமூர்த்தி ராக "கானமூர்த்தே', ஹிந்தோள ராக ஆலாபனையைத் தொடர்ந்து "மாமவதுஸ்ரீ சரஸ்வதி', நாட்டக் குறிஞ்சியில் "பால்வடியும் முகம்' பாடி, பளிச்சென்று ஒரு கரஹரப்ரியா ராக ஆலாபனையை முடித்துக் கொண்டு, "ஸ்ரீனிவாச தவசரணம்' பாடலை அதிக வளர்த்தல் இல்லாத நிரவல்-சுவரங்களுடன் கச்சிதமாக முடித்து விட்டு, மன்னார்குடி ஈசுவரன்-மோர்சிங் ராமன் ஜோடிக்குத் தனி ஆவர்த்தன வாசிப்புக்கு விட்டுவிட்டார் சுதா.

மன்னார்குடி ஈசுவரன் தன்னை முன்னிருத்திக் கொள்ளாமல், தன் வாசிப்பை முன்னெடுத்து வைக்கும் அபூர்வ மிருதங்கக் கலைஞர். பாடல்களுக்கு வாசித்த போதும் சரி, தனி ஆவர்த்தனம் வாசித்த போதும் சரி, அவர் எழுப்பிய சுநாதம் சுகமாக இருந்தது. அவர் எப்போதுமே தடாலடி வாசிப்புக்கு இடம் கொடுப்ப வரல்ல. அதனாலேயே அவருடைய வாசிப்பு கேட்க இதமாக இருக்கிறது. மோர்சிங் வாசித்த ராமனை ஊக்கி உற்சாகப்படுத்தியது இன்னும் சிறப்பாக இருந்தது.

சுதா "பாலயாமி கோபால பாலம்' என்ற யமுனா கல்யாணி ராகப் பாடலோடு "தணிக்குப்-பிறகு-பகுதி'யைத் தொடங்கினார். "யமனல்லி காணதெந்து' என்ற சிவரஞ்சனி ராக புரந்தரதாசர் பாடல், "கண்ட நாள் முதல்' என்ற மதுவந்தி ராகப் பாடல், "ஓம் நமோ நாராயணா' எனும் கர்ணரஞ்சனி ராகப் பாடல் என இனிமையைப் பொழிந்த பின், "மன்கி ஆங்கேன் கோல்' என்ற சாயி பஜன் பாடி முடித்துக் கொண்டார்.

அன்று வைணவர்களுக்கு கிருஷ்ணஜெயந்தி என்பதால், கிருஷ்ணரைப் பற்றிய பாடல்களுக்கு அதிக இடம் கொடுத்ததாகவும், அவற்றைக் கேட்க ஒருவேளை கிருஷ்ணரே அங்கு வந்திருக்கக் கூடும் என்றார் சுதா. கூடவே, விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்க மறக்கவில்லை.

இரண்டாம் நாள் சற்று வித்தியாசமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி: "ஆத்ம நிவேதனம்'. ""தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி என்கிற மூவரும், தங்கள் பாடல்களால் இறைவனுக்குச் செய்தது ஆத்ம நிவேதனம். இவற்றைப் பாட, ருத்ரபட்ணம் சகோதரர்கள், பட்டாபிராம் பண்டிட், சாகேதராமன் வந்திருக்கிறார்கள். மைசூர் மஞ்சுநாத் வயலின். நான் மிருதங்கம் வாசிக்கிறேன். ஸ்ரீசுந்தர் குமார் கஞ்சிரா!'' என்று ஓர் அறிமுக உரை செய்தார் உமையாள்புரம் சிவராமன்.

தியாகராஜரின் கீர்த்தனைகளை ருத்ரபட்ணம் சகோதரர்கள் வழங்கினார்கள். சம்போ மகாதேவ (பந்துவராளி), கல்யாணி ராக ஆலாபனைக்குப் பின்னர் "அம்மராவம்மா, நாமகுஸýமா (ஸ்ரீராகம்), உய்யால லோகுவய்யா (நீலாம்பரி), பதிகிஹாரத்தி (சுருட்டி) என்று இரட்டையர் இசை. இடையே ஐந்து நிமிடம் தனி ஆவர்த்தனத்துக்கு எடுத்துக் கொண்டார் உமையாள்புரம். கஞ்சிராவில் உடன் தொடர்ந்தார் சுந்தர் குமார்.

பட்டாபிராம் பண்டிட், பாலக்காடு கே.வி.நாராயண சுவாமியின் சீடர். எனவே, அவர் பாடிய சியாமா சாஸ்திரி கீர்த்தனைகள் அப்பட்டமாக குருவின் பாணியிலேயே அமைந்திருந்தன. "தருணமீதம்மா' (கௌரிபந்து), ஓ ஜகதம்பா (ஆனந்த பைரவி), சங்கரி சங்குரு (சாவேரி), நிர்ணயமான ஒரு தோடி ஆலாபனையைத் தொடர்ந்து "நின்னே நம்           மினானு'வை முடித்து விட்டு, சிவராமனின் "தனி'க்கு விட்டு விட்டார் பண்டிட்.

தியாகராஜர் பாடல்களுக்கு ஆதி தாளத்தில் தனி வாசித்தவர், சியாமா சாஸ்திரிகளுக்கு மிச்ரசாபு தாளத்தை எடுத்துக் கொண்டார்.

"தேவி ப்ரோவ சமயமிதே' என்ற சிந்தாமணி ராகப் பாடலில் ஒரு நிதானம் இருக்கும். ஒரு நெகிழ்ச்சியும் இருக்கும். தன்னுடைய பகுதியை நிறைவு செய்ய இதைவிடச் சிறந்த பாடலை பட்டாபிராம் பண்டிட் தேர்ந்தெடுத்திருக்க முடியாது.

இளைஞர் சாகேதராமன்... முத்துசாமி தீட்சிதரின் பாடல்களைப் பாடினார். முழுமையான உச்சரிப்பு, அழுத்தமான ஆலாபனை, இரண்டும் சாகேதராமனின் உடன் பிறப்புகள். நாட்டை ராகத்தில் "சுவாமிநாத பரிபாலய', கமாஸ் ராகத்தில் "சந்தான கோபால கிருஷ்ணம்' குழைவும் நெளிவுமாக கவர்ச்சிகரமான துவஜாவந்தி ராக ஆலாபனையைத் தொடர்ந்து "அகிலாண்டேசுவரி', வராளி ராகத்தில் "சேஷாசல நாயகம்' பாடி முடித்து, ரூபக தாளத்தில் "தனி' வாசிக்க உமையாள்புரத்தாருக்கு விட்டு விட்டுக் காத்திருந்தார் சாகேதரராமன். அவர் முடித்துக் கொண்டதும் மணிரங்கு ராகத்தில் "மாமவ பட்டாபிராம' பாடலோடு தம் பகுதியை நிறைவு செய்தார்.

ஒரு பாடகருக்குப் பதில் நான்கு பேர். ஒரு "தனி'க்குப் பதிலாக மூன்று சின்னச் சின்ன "தனி'கள். ரசிகர்களைத் திருப்தி செய்ய ஒரு சிறிய மாறுதல் போதும். அரங்கத்துக்கு வெளியே செய்திருந்த அலங்காரம் அற்புதமாக இருந்தது. ஆனால், மேடை அலங்காரம் சற்று அடைசலாக இருந்தது. சற்றுப் பளிச்சென்று இருந்திருக்கலாம். விழா அமைப்பாளரின் வரவேற்புரை சுருக்கமாக இருந்தது, பாராட்டுக்குரிய அம்சம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.