ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கருவேல மரம் "போதி' மரம்!

புத்தருக்கு ஞானம் பிறந்தது போதி மரத்தடியில் என்றால், இவருக்கு ஞானம் பிறந்தது இவர் வீட்டருகே உள்ள கருவேல மரத்தடியில்.  அடிப்படை கல்விஅறிவு,பொதுஅறிவு இல்லாதவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:09 am

வை. இராமச்சந்திரன்

புத்தருக்கு ஞானம் பிறந்தது போதி மரத்தடியில் என்றால், இவருக்கு ஞானம் பிறந்தது இவர் வீட்டருகே உள்ள கருவேல மரத்தடியில். 

அடிப்படை கல்விஅறிவு,பொதுஅறிவு இல்லாதவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில், வாசகசாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் 27 வயது இளைஞர் அவர். ஊரெங்கும் பசுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மரம் நடுவதில் ஆர்வம் கொண்டவர். புத்தருக்கு ஞானம் பிறந்த போதி மரத்தின் பெயரிலேயே, போதி சேவாசங்கம் என்ற ஒன்றை நிறுவி திறம்பட நடத்தி வருபவர். அவர் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பறம்புநகரை சேர்ந்த க.கார்த்திகேயன்.

வாசகசாலை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த அவரை சந்தித்தபோது.

சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?

நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலே சமூக சேவையில் ஈடுபடும் ஆர்வம் வந்தது. எங்கள் வீட்டின் அருகே பரும்பு பகுதியில் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் உள்ளன. அப்பகுதியில் நான் ஓய்வு நேரங்களை செலவிடுவேன். இப்பகுதியில் உள்ள இந்த கருவேல மரங்களால் நிலத்தடிநீர் குறைந்து வருவதாக பெரியவர்கள் கூறுவார்கள்.

அப்போது நான் யோசித்த போதுதான் இந்தப் பகுதியில் உள்ள கருவேல மரங்களை அரசிடம் முறையிட்டு அகற்றிவிட்டு,புங்கைமரங்கள் போன்றவற்றை அமைத்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன்.  தனிமனிதனாக இருப்பதை காட்டிலும் ஓர் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இதை செய்யலாமே எனக் கருதி 2007-ம் ஆண்டு குடியரசு தினத்தில் உருவானதுதான் போதி சேவாசங்கம்.

இந்த சங்கத்தின் மூலம் என்ன சேவை செய்து வருகிறீர்கள்?

சுதந்திரதினம், குடியரசுதினம் போன்ற தேசிய தினங்களில் மரம் நடும் பணிகளை செய்கிறோம். ஆலங்குளம் பேரூராட்சி, குத்தபாஞ்சான் ஊராட்சி பகுதிகளில் மரம் நடும் பணிகளை செய்துள்ளோம். உலக சுகாதாரத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி, போலியோ விழிப்புணர்வு பேரணி, ஆலங்குளம் அரிமாசங்கம் மற்றும் அரசு மருத்துவமனை, திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து பல இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தியுள்ளோம்.

வாசகசாலை அமைத்து வருவது பற்றி..?

எங்களது பரும்புநகர் பகுதி குத்தபாஞ்சான் ஊராட்சி பகுதிக்குள் அமைந்துள்ள இந்த ஊராட்சியின் சார்பில் எங்களுக்கு சுமார் 7 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் சங்கம் சிறப்பாக செயல்பட்டதற்காக, கடந்த ஆண்டு நேரு இளையோர் மையம் சார்பில் மன்ற வளர்ச்சிக்காக ரூ.20 ஆயிரம் நிதியாக அளித்தார்கள். இந்த ஆண்டும் சங்கத்தின் சிறப்பான செயல்பாட்டிற்காக ரூ.5 ஆயிரம் வழங்கினார்கள். அந்தத் தொகையை மூலதனமாக வைத்து, நிலத்தை சீரமைத்து, வாசகசாலை அமைக்கும் பணியைத் தொடங்கினேன். அதோடு எங்கள் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கட்டுமானப் பொருள்களை நன்கொடையாக வழங்கினார்கள்.

மேலும்  என்னுடைய சொந்த பங்களிப்பையும் சேர்த்து  இப்போது இந்தப் பணி முடியும் தருவாய்க்கு வந்துள்ளது. விரைவில் வாசக சாலையை மாவட்ட நேரு இளையோர் மையம் ஒருங்கிணைப்பாளர் முயற்சியில், மாவட்ட ஆட்சியரைக் கொண்டு திறக்க முடிவு செய்துள்ளேன்.

சங்கத்தின் சார்பில் செய்யும் இதர பணிகள் மற்றும்

வருங்காலத்தில் செய்ய நினைப்பது குறித்து..?

எங்கள் பகுதியில் உள்ள கல்விஅறிவு இல்லாதவர்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒழுக்கம் சார்ந்த சமய வகுப்புகளை எடுத்து வருகிறேன். புராண கதைகளைச் சொல்லி நீதி, நேர்மையுடன் நடத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நெட்வொர்க் லிங்கில் இருக்கும் வகையில் ஆலங்குளத்தில் ரத்த வங்கி தொடங்க வேண்டும். பள்ளி,கல்லூரி மாணவர்களிடம் ரத்ததானம், கண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற, அரசிடம் முயற்சித்து, அந்தப் பகுதியில் புங்கைமரங்கள் உள்ளிட்டவற்றை நடவு செய்து பராமரிக்க வேண்டும்.

   -வை.இராமச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.