கணினிக்குக் கிடைத்த கணியன் விருது!
உலகமே கவனித்த செம்மொழித் தமிழ் மாநாட்டின் நிறைவு விழாவில் முத்தாய்ப்பாய் அமைந்தது, கணினித் தமிழ் வளர்ச்சிக்கு சேவை புரிந்தவருக்குக் கணியன் பூங்குன்றனார் விருது வழங்கும் நிகழ்ச்சி. முதல்வரிடமிருந்து அத


உ லகமே கவனித்த செம்மொழித் தமிழ் மாநாட்டின் நிறைவு விழாவில் முத்தாய்ப்பாய் அமைந்தது, கணினித் தமிழ் வளர்ச்சிக்கு சேவை புரிந்தவருக்குக் கணியன் பூங்குன்றனார் விருது வழங்கும் நிகழ்ச்சி.
முதல்வரிடமிருந்து அதைப் பெற்றவர் சென்னை,
பனேசியா டிரீம் வீவர்ஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தைச் சேர்ந்த விஜயன். 2007-2008-ம் ஆண்டுக்கான அந்த விருதைப் பெற 10-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட, 17 நிறுவனங்கள் போட்டியிட்டன. எனினும், சாமானியனான விஜயன் விருதைத் தட்டிச் சென்றார். கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று, இடஒதுக்கீட்டுச் சலுகையால் பாலிடெக்னிக்கில் இடம் கிடைத்து, கணினித் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பயின்றவர் இவர்.
தொடக்கத்தில் டி.டி.பி. மையம் ஒன்றில் பணிபுரிந்த விஜயன், பின்னர் பிரபல வாரப் பத்திரிகை ஒன்றில் பக்க வடிவமைப்பாளராகப் பணிபுரிந்தார். பணிச்சூழல் நிர்ப்பந்தத்தின் காரணமாக கணினித் தொழில்
நுட்பங்களைத் தனது பணியின் ஊடாகவே கற்றுத் தேர்ந்த விஜயன், இன்று தமிழகத்தின் பிரபலமான
பக்க வடிவமைப்பாளர்களில் ஒருவர். குறிப்பாக
நூல்களுக்கான முகப்பு அட்டை உருவாக்குவதில்
மிகவும் பிரபலமானவர்.
இனி விஜயனுடன் உரையாடியதிலிருந்து...
உங்களுக்கு எதற்காக விருது வழங்கப்பட்டது?
இன்று உலகம் முழுவதும் ஆங்கிலத்துக்கு அடுத்து, கணினியில் அதிகமாகப் பயன்படுத்தும் மொழி தமிழ்தான். ஆனால், கணினியில் தமிழில் ஒருவர் எழுதுவதை, மற்றொரு இடத்தில் உள்ள கணினியில் எடுத்துப் படிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. பொதுவான எழுத்துரு இல்லாதது உள்பட பல தொழில்நுட்ப பிரச்னைகளே இதற்கு காரணம். பத்திரிகைகளில் பணிபுரிவோர், அச்சுத் தொழில் சார்ந்த இடங்களில் பணியாற்றுவோர் இந்தச் சிரமங்களைத் தினமும் எதிர்நோக்கி வருகின்றனர்.
கணினித் தொழில்நுட்பம் உள்பட எல்லா தொழில்நுட்பங்களையும் நாம் பயன்படுத்தும்போது மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது. எந்தத் தொழில்நுட்பத்தையும் நம் மொழியின் மூலம் பயன்படுத்தும் வசதி இருப்பது அவசியம்.
எனவேதான், கணினித் தமிழில் உள்ள இந்தச் சிரமங்களைப் போக்க என்னுடைய குழுவில் 10 பேர் இணைந்து முயற்சி செய்தோம்.
இறுதியில் தமிழ் சாஃப்ட்வேர் ஒன்றை உருவாக்கி, 2006 ஜனவரியில் தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் பேருக்கு இலவசமாக விநியோகம் செய்தோம். இப்போது உலகமெங்கும் பலரும் பயன்படுத்தும் TAM, TAB ஆகிய தமிழ் எழுத்துருக்கள் அந்த சாஃப்ட்வேருடன் சேர்த்து நாங்கள் உருவாக்கியவைதான்.
மேலும், சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்ட விதம் குறித்து விளக்கக் கூடிய மூல நிரலையும் ( Open source ) சேர்த்து வழங்கினோம். இதன் மூலம் யார் வேண்டுமானாலும் தங்கள் தேவைக்கேற்ப சாப்ட்வேரைப் பயன்படுத்துவதுடன், தங்களின் தேவைக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். நாங்கள் தமிழில் உருவாக்கிய இந்தச் சாப்ட்வேரை மற்ற மொழிக்காரர்கள்கூட, தங்கள் மொழிக்கான சாப்ஃட்வேராக மாற்றிப் பயன்படுத்த முடியும்.
மேலும், தமிழ் விசைப்பலகை, தமிழ்- ஆங்கிலம் அகராதி, சுய உதவிக் குழுப் பெண்கள் தங்கள் வரவு-செலவு கணக்குகளைப் பராமரிப்பதற்கான வசதிகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவரிகளைச் சேர்த்து வைத்து, தேவைப்படும் முகவரிகளை மிக விரைவில் தேடிப் பயன்படுத்தும் வசதிகள் முதலானவையும் இந்தச் சாஃப்ட்வேரில் உள்ளன. எங்களது இந்தப் பணிகளுக்காகவே தமிழக அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்றதை எவ்வாறு உணர்கிறீர்கள்?
இலவச தமிழ் சாப்ஃட்வேர் உருவாக்கிய அதே காலகட்டத்தில், தட்டச்சு இயந்திரங்களில் உள்ள எழுத்து வரிசைப்படி விசைப் பலகை, ஆங்கிலத்தில் உள்ளதுபோல, ஒரு தாளில் எழுதப்பட்டவற்றை ஸ்கேன் செய்தால், அவை தானாகவே எழுத்துக்களாக மாறும் வசதி, ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழிலும், தமிழில் டைப் செய்தால் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யும் வசதி முதலானப் பணிகளையும் சேர்த்தே தொடங்கினோம்.
எனினும், பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக அவற்றைத் தொடர முடியவில்லை. இப்போதும் பொருளாதார ரீதியிலான சிரமங்கள் உள்ளன. எனினும் அந்தப் பணிகளை மீண்டும் தொடர வேண்டும் செய்து முடிக்க வேண்டும் என்ற உந்துசக்தி இந்த விருதின் மூலம் கிடைத்துள்ளது.
உங்களின் பிற பணிகள்?
பக்க வடிவமைப்பு, நூல்களுக்கான முகப்பு அட்டை உருவாக்குவதுதான் எங்களின் பிரதான தொழில். இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகப்பு அட்டைகளை உருவாக்கியுள்ளோம். அவற்றில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து ஒரு கண்காட்சியையும் நடத்தியுள்ளோம். மீண்டும் ஒரு கண்காட்சி நடத்தும் திட்டமும் உள்ளது. மேலும், இணையதளத்துக்கான வலைப்பக்கங்களையும் வடிவமைத்து வருகிறோம். அண்ணா
நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு உருவாக்கிய அண்ணா 100 என்ற வலைப்பக்கத்தை நாங்கள்தான் வடிவமைத்தோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...