வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: சங்​கம் முதல் சங்​க​ரய்​யர் வரை!

பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சுயசரிதை எழுதும் அதிகாரிகள் வரிசையில்  டாக்டர் ஜி.சுந்தரம் ஐ.ஏ.எஸ். முன்பே சேர்ந்துவிட்டாலும், அவருடைய "ப்ளைட் ஆஃப் ஆனஸ்ட்டி' இப்போது இரண்டாம் பதிப்பைக் கண்டிருக்கிற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:52 pm

சாருகேசி

தவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சுயசரிதை எழுதும் அதிகாரிகள் வரிசையில்  டாக்டர் ஜி.சுந்தரம் ஐ.ஏ.எஸ். முன்பே சேர்ந்துவிட்டாலும், அவருடைய "ப்ளைட் ஆஃப் ஆனஸ்ட்டி' இப்போது இரண்டாம் பதிப்பைக் கண்டிருக்கிறது.நிகழ்ச்சி நடந்த இடம்: லேண்ட்மார்க் புத்தக விற்பனைக் கூடம்."அரசு அதிகாரி ஒருவரின் சுயசரிதை, இரண்டாம் பதிப்பு வெளிவருவது உங்களுக்கெல்லாம் வியப்பைத் தரலாம்' என்றார் சுந்தரம் அறிமுக உரையில்.

"டாக்டர் ஜி.சுந்தரம் குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்து வந்த காலத்தில், அங்கு அமைச்சர்கள் அதிகாரிகளிடம் நடந்துகொண்ட முறையை உயர்வானதாகக் குறிப்பிட்டார். அதிகாரிகளின் யோசனையையும், கருத்துக்களையும், அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனர்; தேர்தலுக்குப் பின்னர் அமைச்சர்கள் மாறினாலும்கூட, முன் எடுத்த முடிவுகளை மாற்றவில்லை' என்றார்.

டாக்டர் ஜி.சுந்தரம் பின்னர் பிரஸ்ஸல்ஸ் நகரத்தில் அவருடைய சுற்றுலாத்துறை அனுபவம் காரணமாக, ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மதிப்புக்கூட்டு வரி (வாட்)யை அறிமுகப்படுத்தியவர் இவர்.

புத்தகத்தை வெளியிட்ட முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தம் புதுதில்லி அலுவலக வாழ்க்கையில், ஓர் அமைச்சரின் கருத்துக்கு மாறாக வேறொரு கருத்தைக் கோப்பில் எழுதியதையும் அந்த அமைச்சர் அதை ரசிக்காமல் போய், விஷயம் பிரதமர் வரை போனதையும் குறிப்பிட்டார். "என்னுடைய கருத்தைச் சொல்லிவிட்டேன். அப்புறம் நீங்கள் எப்படிச் செயல்பட விரும்புகிறீர்களோ, அதைக் கோப்பில் உங்கள் கைப்பட எழுதிவிடுங்கள்!' என்று கிருஷ்ணமூர்த்தி கூறிவிட்டாராம்.

அரசியல்வாதி - தாதா தொடர்பு எத்தனை ஆபத்தோ அத்தனை ஆபத்து அரசியல்வாதி - அதிகாரி ஒட்டுறவும் என்பது விவாதத்தில் வெளிப்பட்டது. எழுபதுகளுக்குப் பிறகே ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கேற்ப அதிகாரிகள் பணிந்துபோய்ச் செயல்படும் நிலைமை உண்டானதாகக் கருத்துத் தெரிவித்தார். பொதுவாகவே மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அதிகாரிகள் அச்சமின்றிச் செயல்பட்டதாகக் கூறினார்.

பேராசிரியர் எஸ்.கோபாலகிருஷ்ணன், சுந்தரம் அவர்களின் நேர்மையைப் பாராட்டிப் பேசினார். "அயல் நாட்டு அரசாங்கம் சுந்தரத்தைப் பயன்படுத்திக் கொண்டதுபோல், நம் அரசாங்கம் அவர் திறமையையும் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை' என்ற தம் ஆதங்கத்தை வெளியிட்டார்.

""நேர்மையான அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?'' என்று கேட்டார் ஓய்வுபெற்ற ஓர் உயர் அதிகாரி. மிகவும் சிக்கலான கேள்வி. ஆனால் டாக்டர் சுந்தரமும், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும் இருப்பதாகவே கூறியது ஆறுதலான அம்சம்.

உள்நாட்டுப் பாதுகாப்புக்கு விடப்படும் சவால்கள் குறித்து, திருவல்லிக்கேணி கலாசார மையமும், கஸ்தூரி சீனிவாசன் நூலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ஆர்.கே.ராகவன், ""நிலச் சீர்திருத்தம் ஒழுங்காக நடந்தால் மட்டுமே மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதல் முடிவுக்கு வரும். பழங்குடியினரை சுரண்டல்காரர்களிடமிருந்து பாதுகாப்பதும் அவசியம்'' என்றார். ஓர் உயர் காவல்துறை அதிகாரியிடமிருந்து இந்தக் கருத்து வெளிவருவது வியப்பாகத்தான் இருந்தது. (இது நிர்வாகக் குறைபாடு என்றால், ஆயுதப் போராட்டமாக உருவாகும் வரை அலட்சியமாக இருந்தது நிர்வாகத்தின் தவறு எனப் புரிகிறது) ஆனால் பிரச்னை அத்தனை சாதாரணமானதாகத் தெரியவில்லை.

"ஹிந்து' ராம், அரசியல் கருத்து ஒன்றாகவும் ஆட்சியாளர் கருத்து வேறொன்றாகவும் பொதுமக்கள் கருத்து இன்னொன்றாகவும் இருப்பதாகக் கூறினார்.

ஆந்திராவில் நக்ஸலைட்டுகள் பிரச்னை எழுந்தபோது அதைச் சமூக - பொருளாதார பிரச்னையாகப் பார்த்து  என்.டி.ராமாராவ் அரசு தீர்வு கண்டதையும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே அதைப் பார்க்காததையும் குறிப்பிட்டார். (ஆந்திர நக்சலைட் பிரச்னையில் வெங்கல்ராவ் முதலமைச்சராக இருந்தபோது வெற்றிகரமாக கையாண்டதைப் பலர் மறந்திருக்க மாட்டார்கள்.)

முன்பு சில தவறுகள் செய்திருந்தாலும், சில நல்ல முடிவுகளும் நடந்திருப்பதை சுட்டிக் காட்டினார். உதாரணம்: மிஜோராம் பிரச்னை. ராஜீவ் காந்தி, மிஜோ தேசிய முன்னணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு, லால்டெங்கா முதல்வர் ஆனார்.

சவாலை எந்த முறையில் சந்தித்தாலும், மக்கள் காப்பாற்றப்படவேண்டும். அதற்குச் சிறப்புப் பயிற்சி பெற்ற காவல்துறையை, புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார். (அருந்ததிராய் போன்றவர்களின் கருத்தை ஆதரிக்கவில்லை!)

"சங்கம் முதல் சங்கரய்யர் வரை' என்ற இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் பேராசிரியர் வ.வே.சு.சங்கப் பாடலில் இருந்து தொடங்கி திருக்குறள், முத்துத்தாண்டவர், ஆழ்வார்கள், அருணகிரியார் என்று ஒரு சுற்று வந்துவிட்டு, தஞ்சாவூர் சங்கரய்யரின் பாடலோடு  முடித்துக் கொண்டார் பாடகர் சூர்யபிரகாஷ். வ.வே.சு.வின் இணைப்புரை சுவாரசியமான தகவல்களோடு இருந்தது. சூர்யபிரகாஷுக்கு லேசாகப் பெண்குரலின் சாயல் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ, தன் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி குரலை எளிதில் வழிக்குக் கொண்டுவந்து விடுகிறார்!

சாருகேசி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.