நகர்வலம்: திரைப்படத்திலிருந்தும் பாடம் கற்கலாம்!
ஒரு ஹால் முழுக்க இளசுகளின் கூட்டம். எல்லாம் 30-க்குக் கீழே. சோர்வும் முனகலும் இல்லாத உற்சாகப் பேச்சு மட்டுமே கேட்க முடிகிற கூட்டம். நூற்றுச் சொச்சம் இளையோர் ஒரு திரைப்படத்தை கவனமாகப் பார்க்கிறார்கள்.


ஒரு ஹால் முழுக்க இளசுகளின் கூட்டம். எல்லாம்
30-க்குக் கீழே. சோர்வும் முனகலும் இல்லாத உற்சாகப் பேச்சு மட்டுமே கேட்க முடிகிற கூட்டம். நூற்றுச் சொச்சம் இளையோர் ஒரு திரைப்படத்தை கவனமாகப் பார்க்கிறார்கள்.
படம் முடிந்ததும் அதைப் பாத்திரங்கள், வசனங்கள் என்று அலசோ அலசென்று அலசுகிறார்கள். விமர்சனம் எழுதுவதற்கு என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பின்னே? இந்த இளையோர் முழுக்க மனிதவளம் பற்றிப் படிக்கும், ஆராயும் மாணவர்கள், மாணவிகள். சுருக்கமாக ஹெச்.ஆர்.துறை மாணவர்களும் மாணவிகளும்தான்.
"த மேனேஜ்மென்ட் தியேட்டர்' என்ற அமைப்பில் இவர்கள் கூடி, அக்கு வேறு ஆணி வேறாக பிரச்னைகளை அலசும் பாணி, இப்போதைக்கு வித்தியாசமாகத் தெரிகிறது. ("லகான்' திரைப்படம் வெளியான பிறகு நிர்வாக இயல் கல்லூரிகளில் அதில் பொதிந்துள்ள தலைமைத் தகுதிகள் (லீடர்ஷிப் க்வாலிடீஸ்) பற்றி மணிக்கணக்கில் மாணவர் விவாதித்தனர் அல்லவா?) கிட்டத்தட்ட அது போன்ற நோக்கம் இந்த அமைப்பை நடத்தும் "கெம்பா ஸ்கூல் ஆஃப் ஹெச்.ஆர்.' அமைப்பும் கொண்டிருக்கிறது.
""இதன் இயக்குனர் டாக்டர் ஆர்.கார்த்திகேயன் க்ளினிகல் சைகாலஜி எனும் உளவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். இதுவரை 30000 தொழில்முறை அலுவலர்களைப் பயிற்றுவித்திருக்கிறார்!'' என்று அறிமுகம் செய்தார் ஐஸ்வர்யா முருகன். இவர் எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான இரா.முருகனின் மகள்.
முதலில் இவர்கள் திரையிட்டு விவாதித்த படம் "ட்வெல்வ் ஆங்க்ரிமென்'. குற்றம் சாட்டப்பட்ட ஒருவனைக் குற்றவாளியா, நிரபராதியா என்று விசாரிக்கும் 12 ஜூரிகள் இவர்கள் 12 பேரும். படம் முடிந்ததும் அதைப் பகுதி பகுதியாகப் பிரித்து எடுத்துக் கொண்டு, அதில் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு நிர்வாக இயல் கொள்கையையாவது எடுத்து விளக்குகிறார்கள். விளக்குவதற்கு முன்பு மாணவ, மாணவியரின் கருத்துக்களைக் கேட்கிறார்கள். அவர்கள் என்ன புரிந்து கொண்டார்கள் என்பதை அறிந்த பிறகே விவாதம் தொடங்குகிறது. விவாதம் சீரியஸôக இருந்தாலும், சிரிப்பலைகள் அங்கங்கே எழுந்து இறுக்கத்தைத் தளர்த்துகிறது.
இரண்டாவது நிகழ்ச்சியின்போது கிரேஸி மோகனும், இரா.முருகனும் கலந்து கொண்டார்களாம். அதில் "ஆங்கர் மேனேஜ்மென்ட்' (கோபத்தை கட்டுப்படுத்துவது பற்றி) விவாதித்தார்களாம். கிரேஸியும் இரா.முருகனும் கலந்து கொண்டதால் விவாதம் சிரிக்கச் சிரிக்க அமைந்ததாம்! கோபப்பட்டாலும் உங்கள் கருத்தை வலியுறுத்துவது எப்படி என்பதுதான் விவாதத்தின் கோணம்.
மூன்றாவது நிகழ்ச்சியாக சென்ற வாரம் திரையிடப்பட்ட படம் புகழ்பெற்ற "காட்ஃபாதர்' மரியா பூஸôவின் பிரபலமான நாவலின் திரை வடிவம். இந்தப் படத்தில் என்ன முக்கியக் கருத்து என்று பின்னர் விவாதம் தொடங்குகிறது. "நெகோஷியேஷன்ஸ்' எனப்படும் பேரம் அல்லது பேச்சு வார்த்தைதான் படத்தின் மையக் கருவாக அலசப்படுகிறது. புரியாத வசனங்களை மறுபடி காட்சியைக் காண்பித்துப் புரிந்து கொள்ள வைக்கிறார் ரவி. பின்னர் டாக்டர் கார்த்திகேயன், நெகோஷியேஷன் கலையை எப்படி பாத்திரங்களில் காணமுடியும் என்று விளக்குகிறார்.
இரண்டு தரப்பும் பேசும்போது, தெளிவாக விஷயத்தை எடுத்துச் சொல்லவேண்டும். கம்யூனிகேஷன் மிக முக்கியமானது. (விற்பனையாளர்கள் விதிவிலக்கு. அவர்கள் அதிகம் பேசாவிட்டாலும் விற்பனையை முடித்துக் கொண்டு போய்விடுவார்கள்.)
பேச்சு வார்த்தைகளின்போது கோபப்பட்டுவிடக் கூடாது. அது பலவீனத்தைத்தான் காண்பிக்கும்.
"நோ' என்ற வார்த்தை தீயது. ஆனால் அதையே நளினமாகவும் மரியாதையாகவும் காரணத்துடனும் கூறவேண்டும்.
"நோ' என்ற வார்த்தையைப் பேச்சு வார்த்தைகளின்போது நிறையவே கூற வேண்டியிருக்கும். அப்படிச் சொல்லாமல் இருப்பதும் ஆபத்து. எனவே இந்த எச்சரிக்கை.
சில வேளைகளில் அமைதியாக இருந்துவிடுவது பயன் தரும். இந்திரா காந்தியின் உத்தியாம் இது!
எதிராளியைப் புரிந்து கொள்வது மிகமிக முக்கியமான அம்சம். இப்படி படத்தின் காட்சிகளைப் பிரித்துப் பிரித்து அலசுகிறார்கள்.
படத்தின் கதாபாத்திரமான டானை, ஹேகன் சந்தித்துப்
பேசும்போது என்ன நடக்கிறது? எங்கே தவறு நடந்தது? ஹேகன், டானை மதிக்கவில்லையா? டானின் எதிர் விளைவைக் கவனிக்காமலேயே ஹேகன் பேசிக்கொண்டே போவது சரியா? எதிரணியில் இருப்பவர் என்ன கேட்கிறார் என்பது பேச்சு வார்த்தையில் மிக முக்கியமல்லவா?
அறுபதுகளில் வெளியான நாவல் எழுபதுகளில் படமாக வெளிவந்தது. ஆனால் சுமார் 40 வருடங்களுக்குப் பிறகும் அதன் கருவையும் உரையாடலையும் பாத்திரங்களையும் நிர்வாக இயல் மாணவர்கள் பார்க்கும் கோணம் நம்மை யோசிக்க வைக்கிறது!
திரைப்படம் பொழுதுபோக்குக்கு மட்டுமே என்று எண்ணி ஒதுக்கி வைக்காமல், அதைப் பாடமாக எடுத்துக் கொண்டு அலசும் கெம்பா ஹெச்.ஆர். பள்ளி உறுப்பினர்களுக்கு ஒரு பூங்கொத்து!
வடக்கே மட்டுமல்லாமல் தெற்கேயும் மீராபாயின் பாடல்கள் காற்றினிலே வந்த கீதங்களாகப் புகழ் பெற்றுப் பாடப்பட்டு வருகின்றன. கர்நாடக இசை கச்சேரிகளில் கூட, துக்கடாவாக ஒரு மீரா பஜன் பாடி மனத்தை நெகிழச் செய்துவிடுவார் பாடகர். இங்கே மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டு பக்தியும் உருக்கமும் முன் இடத்தைப்
பெற்றுவிடும்.
ஒரு நிகழ்ச்சி முழுக்க மீரா பாடல்கள் என்றால் எப்படி இருக்கும்! அதிலும் பாடகி, பாம்பே ஜெயஸ்ரீ. இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். நிகழ்ச்சிக்கு முன்பாக ஒத்திகை நடத்த, நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான கெüரிராம் நாராயண் வீட்டில் வழக்கமாக நடக்கும் ஒத்திகையைப் பார்த்தபோதுதான், எப்படி இவர் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நுணுக்கமாகக் கவனித்து அமைக்கிறார் என்று தெரிந்தது. பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அதற்கான இணைப்புரை தயாரித்து, மெட்டமைக்காத பாடல்களுக்கு மெட்டமைத்து, பின்னணி இசை எப்படி அமையவேண்டும் என முடிவு செய்து, ஒளியமைப்பு மேடையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நடனக் கலைஞர் ஷீஜித் கிருஷ்ணாவிடம் திட்டம் தயாரித்துக் கொடுத்து, பாடல் உச்சரிப்பு சரியாக இருக்கிறதா என்று ஒரு ராஜஸ்தானிப் பெண்ணை உன்னிப்பாகக் கவனிக்கச் செய்து, இவர் மெனக்கிடுவது நிகழ்ச்சி உன்னதமான ஒன்றாக அமையவேண்டும் என்பதற்காக.
சாயி தபலாவும், நவீன் புல்லாங்குழலும், எம்பார் கண்ணன் வயலினும், கோரஸ் குரல்களும் ஒலிக்க, பாம்பே ஜெயஸ்ரீ பக்தி சிரத்தையுடன் பாடும்போது நிகழ்ச்சி ஏன் வெற்றி அடையாது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...