வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: கி.ரா. கொழம்பு!

சுவாமி ஹரிதாஸ் கிரி இசைப் பள்ளியைச் சரியாக ஓர் ஆண்டுக்கு முன்னால் தொடங்கியபோது, கர்நாடக இசையில் ஆர்வமுள்ள இளம் தலைமுறைக்கு மேலும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:50 pm

சாருகேசி

சுவாமி ஹரிதாஸ் கிரி இசைப் பள்ளியைச் சரியாக ஓர் ஆண்டுக்கு முன்னால் தொடங்கியபோது, கர்நாடக இசையில் ஆர்வமுள்ள இளம் தலைமுறைக்கு மேலும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. அதை அவர்கள் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் இசைத் திறமையில் முன்னேற்றம் காண்பார்கள் என்றுதான் நாரத கான சபா செயலர் கிருஷ்ணசாமியும் இசைப் பள்ளியின் கெüரவ இயக்குனர் வித்துவான் பி.எஸ்.நாராயணசுவாமியும் மனப்பூர்வமாகக் கருத்தை வெளியிட்டார்கள்.

ஏப்ரல் 15 காலை, இசைப் பள்ளியின் ஓராண்டு நிறைவு விழாவில் மாணவர்கள் ஒரு குழுவாகவும், மாணவிகள் ஒரு குழுவாகவும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் இசை வழங்கியபோது, "உங்கள் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்!' என்று வாயாரப் பாராட்டத் தோன்றியது.

""ராகம் பாடவும், ஸ்வரம் பாடவும் இயற்கையாக எப்படி வருகிறதோ அப்படியே பாடச் சொன்னோம். நெட்டுருப் போட்டு ஒப்பித்தால் ஒருவேளை தவறுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது குழந்தைகளுக்கு எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அதனால்தான் தவறு வந்தாலும், ஸ்வரம் பாடும்போது தடைப்பட்டாலும், நீங்களே சமாளித்துப் பாடுங்கள் என்று கூறினேன். தவறைத் திருத்திக் கொண்டு முன்னேற முடியும். நெட்டுருப் பண்ணிப் பாடினால், கற்பனை முயற்சி ஏதும் செய்யமுடியாது!'' என்றார் பி.எஸ்.நாராயணசுவாமி.

இசைப் பள்ளியின் ஆசிரியர்கள் சி.ஆர்.வைத்தியநாதனும் ஆர்.எஸ்.ஜெயலஷ்மியும் மாணவ, மாணவியரை இந்த ஒரு வருடத்தில் எப்படி தயார் செய்திருக்கிறார்கள் என்பதை அன்றைய நிகழ்ச்சி எடுத்துக் காட்டியது. மேடைக் கூச்சம் அல்லது பயம் இல்லாமல், வாய்விட்டுப் பாடிய மாணவர் குழுவுக்கும், மாணவியர் குழுவுக்கும் மனம் திறந்து பாராட்டுத் தெரிவித்தார் மூத்த கர்நாடக இசைப் பாடகி சுகுணா புருஷோத்தமன்.

""உங்களுக்குச் சிறந்த ஆசிரியர்கள் கிடைத்திருக்கிறார்கள். வகுப்புகளைத் தவறவிடாமல், உற்சாகத்தோடு கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது!'' என்று அவர்களுக்கு வாழ்த்துக் கூறினார்.

ஸ்போர்ட்ஸ், எக்ஸ்ட்ரா கிளாஸ், தனி ட்யூஷன் என்று பல நிர்ப்பந்தங்களுக்கு இடையே இசையும் எங்கள் இளமை வாழ்க்கையின் அம்சங்களில் முக்கியமானதுதான்'' என்று துணிந்து நேரத்தை ஒதுக்கி எப்படியாவது இசை வகுப்புகளுக்கு வந்து சேர்ந்துவிடும் சுவாமி ஹரிதாஸ் கிரி இசைப் பள்ளி மாணவ, மாணவியருக்குப் பாராட்டுகள்!

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழா நாடகங்கள் என்றால் அத்தனையும் புத்தம் புதிய நாடகங்கள் என்ற முத்திரை அவற்றுக்கு உண்டு. எல்லா நாடகங்களுக்கும் அனுமதி இலவசம். இது ரசிர்களுக்குக் கிடைக்கிற பரிசுகள் என்றால், சிறந்த நாடகம், சிறந்த நடிகர் நடிகை, சிறந்த நாடகாசிரியர், என்று நாடகக் குழுக்களைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டும் பரிசுகளும் கேடயங்களும் சுழற் கோப்பையும் கொடுப்பது நாடக உலகைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைக்கிற தூண்டுதல்கள். சபா நாடக மேடைக்குக் குறைந்த பட்சம் நாலைந்து நல்ல புதிய நாடகங்கள் கிடைப்பது, மற்ற சபா ரசிகர்களுக்குக் கிடைக்கிற வாய்ப்பு.

துவக்க நாள் சத்ய சாய் கிரியேஷன்ஸின் "மாமா மாப்ளே'யில் நகைச்சுவை வசனங்கள் சிரிப்பலையைக் கிளப்பின என்பது உண்மைதான். வசன நகைச்சுவையோடு சிச்சுவேஷன் காமெடி சற்று சவாலானதுதான் என்றாலும், நாடகாசிரியர் எழிச்சூர் அரவிந்தன் சாமார்த்தியமாகக் கையாண்டிருக்கிறார். ஆனால் வேலைக்காரியிடம் ஜொள்ளு விடும் மாமனாராகப் பாத்திரத்தை அமைத்தது ஒரு சறுக்கல் என்றால், முடிவையும் நம்புகிற மாதிரியாக அமைக்காமல் போனது ஏமாற்றம்தான்.

கோவை அனுராதா இயற்கையான நகைச்சுவைக்கு ஒரு காலத்தில் மன்னனாக இருந்தார். கோவை பத்துவின் குட்வில் ஸ்டேஜுக்காக இவர் எழுதிக் கொடுத்திருக்கும் "பவித்ரா'வில் அங்கங்கே சிரிப்புத் தூறல்தான். காரணம் மகாதேவ கனபாடிகள் என்ற கனமான பாத்திரத்தை உருவாக்கி விட்டு, மகளின் கல்யாணம் அதில் ஏற்படும் சிக்கல் என்று உருப்படியாகக் கதையைப் படைத்துவிட்டு, உணர்ச்சிகரமான வசனங்கள் இடம் பெறாவிட்டால் எப்படி?

ஆனால் நாடக ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு கைதட்டி வரவேற்கிற அளவுக்குச் சில வசனங்கள் அமைகிற போது, நாடகாசிரியர் உண்மையிலேயே பெருமிதம் கொள்வார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதினாலும் கோவை அனுராதாவிடம் சரக்கு இருக்கிறது என்பதைப் பாராட்ட வேண்டும். பிராமணக் குடும்பக் கதை என்பதால் அந்தச் சமூகத்துக்கே உரிய வார்த்தைப் பிரயோகங்கள் சில இருக்கும். மகாதேவ கனபாடிகளாக வரும் ரவிக்குமாரின் நடிப்பில் குறை காணமுடியவில்லை. உணர்ச்சிவசப்படும் சவாலான சந்தர்ப்பங்களிலும் கெüரவமாகவே செய்திருக்கிறார்.

ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமாநுஜம் நாயக்கர் என்று நீட்டி முழக்கிச் சொன்னால், "யார் அது?' என்று முடியைப் பிய்த்துக் கொள்வீர்கள். கி.ரா. அல்லது கி.ராஜநாராயணன் என்றால், "ஓ அவரா!' என்று புன்னகை புரிவீர்கள். இவருடைய "கி.ரா. கொழம்பு' கதை சொல்லல் நிகழ்ச்சி ஞாயிறு மே 2 ஆம் தேதி மாலை ஏழரை மணிக்கு, "ஸ்கில்ஸ்' எண், 1, எலியட்ஸ் பீச் சாலையில், பெசன்ட் நகரில் நடைபெறுகிறது. தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் மூன்றிலும் இந்த நாட்டுப்புறக் கதைகள் சொல்லப்படுமாம். "பெர்ச்' நாடகக் குழுவின் இயக்குனர் ராஜீவ் கிருஷ்ணன்தான் இதன் இயக்குனர் என்பதால், இது வெறும் கதை சொல்லல் நிகழ்ச்சியாக இருக்காது எனத் தெரிகிறது.

ராஜீவ் கிருஷ்ணன் லேசுப்பட்டவர் அல்ல. இரண்டு வருடங்கள் முன்னால் வைக்கம் முகமது பஷீரின் நூற்றாண்டு விழாவின்போது அவருடைய படைப்புகள் சிலவற்றிலிருந்து பல பாத்திரங்களைத் தொகுத்து ஒரே நாடகமாக வழங்கிய கில்லாடி மனிதர் இவர்! ஈசுவர் ஸ்ரீ குமார், மாளவிகா, ஆனந்த் சாமி எல்லோரும் இருப்பதால், நிகழ்ச்சி நிச்சயம் சுவாரசியமாக இருக்கும்.

கி.ரா.வின் நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் சுமார் தொள்ளாயிரத்து சொச்சம் பக்கங்கள். எவற்றை எடுத்து எவற்றை விடுத்து, தொகுத்து வழங்கப் போகிறார் என்பது நமக்கு வேண்டுமானால் சவாலான விஷயமாக இருக்கலாம். ராஜீவ் கிருஷ்ணனுக்கு அல்ல!

இவர் போன்றவர்கள் தமிழ் நாடக மேடைக்கு வந்தால் நிச்சயம் புதிய சிந்தனையும் புதிய வடிவங்களும் புதிய உத்திகளும் கிடைக்கும். இந்த நிகழ்ச்சிக்கு எல்லா வயதினரையும் வரவேற்றாலும் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் வரவேற்பாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.