டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அதிரடியாய்த் தாக்கு!

வாலிபால் விளையாட்டுக்கேற்ற நெடுநெடு உயரம்... அசாத்திய ஆட்டத்திறன். எதிரணி வீராங்கனைகளின் தாக்குதலைச் சமாளிக்கும் நேர்த்தி. அதிவேக சர்வீஸ் என அனைவரையும் மலைக்க வைக்கிறார் சென்னை எத்திராஜ் கல்லூரியில் ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:17 pm

வா.சங்கர்

வாலிபால் விளையாட்டுக்கேற்ற நெடுநெடு

உயரம்... அசாத்திய ஆட்டத்திறன். எதிரணி வீராங்கனைகளின் தாக்குதலைச் சமாளிக்கும் நேர்த்தி.

அதிவேக சர்வீஸ் என அனைவரையும் மலைக்க வைக்கிறார் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.பி.எம் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஜெயபாரதி. தேனியைச் சேர்ந்தவரான அவர் தற்போது தமிழக அணி, சிவந்தி கிளப், எத்திராஜ் கல்லூரி அணிகளுக்காக விளையாடி வருகிறார்.

அவருடன் பேசினோம்:

வாலிபால் விளையாட ஆர்வம் வந்தது எப்படி?

நான் 7-ம் வகுப்பு படிக்கும்போதே வாலிபால் விளையாடத் தொடங்கி விட்டேன். பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், பெற்றோர் போஸ், தமிழ்மொழி ஆகியோர் தந்த உற்சாகத்தின் பேரில்தான் வாலிபால் பழகினேன்.

வாலிபால் விளையாட்டுக்கு முன்னதாக தட களப் போட்டிகளில் கவனம் செலுத்தினேன். கோ-கோ, 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், தடை ஓட்டம் போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தேன்.

அதன் பின்னர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கொடுத்த உற்சாகத்தின் பேரில் வாலிபால் விளையாட்டில் முழு கவனம் செலுத்தினேன். சுமார் 9 ஆண்டுகளாக வாலிபால் விளையாடி வருகிறேன்.

பயிற்சி நேரம்?

காலையிலும், மாலையிலும் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வேன். சுமார் 5 மணி நேரம் பயிற்சி செய்யும்போது கூடுதல் வலிமை கிடைக்கும். வாலிபால் போட்டிகளின்போது பயிற்சி நேரம் இன்னும் அதிகமாக இருக்கும்.

பயிற்சியாளர்கள் சித்திரைப்பாண்டியன், தங்கநாயகி, கேசவன் ஆகியோரின் அறிவுரைப்படி பயிற்சி முறைகளை மேற்கொள்வேன்.

வாலிபால் தவிர வேறு விளையாட்டுகள் விளையாடுவீர்களா?

எனது உயரம் 5.8 அடி. இதனால் துவக்கத்தில் கூடைப்பந்து விளையாடுமாறு என்னை அறிவுறுத்தி வந்தனர். இதனால் நானும் சிறிது காலம் கூடைப்பந்து விளையாடினேன். ஆனால் பின்னாளில் எனது நாட்டம் வாலிபால் மீது மாறியது. வாலிபாலுக்கு ஏற்ற உயரம் இருப்பதால் என்னால் சிறப்பாக விளையாட முடிகிறது.

பெற்ற வெற்றிகள்?

சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் கடும் போராட்டத்துக்குப் பின்னர் 2-ம் இடம் பிடித்தோம். கேரளத்தில் நடைபெற்ற இளைஞர் தேசிய விளையாட்டுப் போட்டியில் 2-ம் இடம், மகளிர் தேசிய வாலிபால் போட்டியில் 3-ம் இடம், திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டத்தை எங்கள் அணி பெற்றுள்ளது.

படிப்பு?

தற்போது எத்திராஜ் கல்லூரியில் பிபிஎம் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். படிப்பில் சராசரி மாணவிதான். எனது விளையாட்டு ஆர்வத்திற்குப் பேராசிரியர்கள் அதிக உற்சாகம் அளித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டிக்குச் செல்வதற்கு முன்னரும் எனக்கு வாழ்த்து கூறி அனுப்புவார்கள்.

உங்கள் ஆட்ட முறை?

அதிவேக சர்வீஸýம்; அதிரடித் தாக்குதலும்தான் என் ஆட்டமுறை. அதிரடித் தாக்குதலில் எதிரணியைச் சேர்ந்தவர்கள் பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிப் போகிறவரைத் தாக்குவேன். இதுதான் என் ப்ளஸ். குறைகள் இல்லாமல் இல்லை. அதைத் தவிர்க்க முயற்சித்து வருகிறேன்.

உங்கள் பொழுதுபோக்கு?

இசை கேட்பது மிகவும் பிடிக்கும். வாலிபாலுக்காக அதிக நேரம் செலவிடுவதால் பொழுதுபோக்கு என்று பெரிதாக எதுவும் இல்லை.

பயிற்சி முகாம்களில் பங்கேற்கும் அனுபவம்?

முன்பெல்லாம் தனியாக பயிற்சி எடுத்து வாலிபால் பழகி வந்தேன். அதன்பிறகு பயிற்சியாளர்களின் அறிவுறுத்தலின்படி பயிற்சி முகாம்களில் பங்கேற்று வருகிறேன். ஜூனியர் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளேன்.

விரைவில் சீனியர் வாலிபால் வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. அதற்கான தேர்வுப் போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளன. அதில் பங்கேற்று வெற்றி பெற்று பயிற்சி முகாமில் கலந்துகொள்வேன்.

பயிற்சி முகாம்கள் மூலம் ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். வாலிபாலில் பிளாக்கிங், ஸ்டிரைக்கிங் போன்ற ஆட்டங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதுபோன்ற பயிற்சி முறைகளை முகாம்களில் அதிகம் கற்றுக்கொள்ள முடியும்.

எதிர்காலத் திட்டம்?

இந்திய அணியில் இடம்பிடித்து சர்வதேச போட்டிகளில் விளையாடவேண்டும். அந்தப் போட்டிகளில் வெற்றி கண்டு இந்தியாவின் புகழை உயர்த்தவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.