வீரர்களின் வீரர்!
இலவசமாகப் பயிற்சி கொடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய வாலிபால் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஒருவர் உருவாக்கியிருக்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்? அதைச் சாதித்தவர் நெல்லை ஃபிரண்ட்ஸ் வாலிபால


இலவசமாகப் பயிற்சி கொடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய வாலிபால் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஒருவர் உருவாக்கியிருக்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்? அதைச் சாதித்தவர் நெல்லை ஃபிரண்ட்ஸ் வாலிபால் விளையாட்டுக் குழு பொறுப்பாளர் சித்திரைப்பாண்டியன்.
1979-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை இந்திய வாலிபால் அணிக்காகப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைத் தேடித் தந்தவர். அதுமட்டுமல்லாமல் 1973-ம் ஆண்டு முதல் நெல்லை ஃபிரண்ட்ஸ் குழு சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் இலவச வாலிபால் பயிற்சி முகாமை வெற்றிகரமாக நடத்தி ஏராளமான தேசிய விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்கி வருகிறார் அவர். அவருடன் பேசிய போது:
""பள்ளியில் படிக்கிற காலத்திலிருந்தே வாலிபால் விளையாட்டில் அப்படி ஓர் ஆர்வம். 1965-ல் தூத்துக்குடி மாவட்டம் முதலூரிலுள்ள பள்ளியில் வாலிபால் விளையாட்டைத் துவங்கினேன். செயின் மேக்கெட் பள்ளியில் துவங்கிய அந்த ஆர்வம் என்னை தேசிய அணி வரை கொண்டு சென்றது.
1971-ல் சென்னைக்கு வந்து நெல்லை பிரண்ட்ஸ் கிளப்பில் சேர்ந்தேன். தமிழக அணியில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் வேலையும் கிடைத்தது. சென்னை மாநகராட்சியில் சிறிது காலம் வேலை செய்தேன். அதைத் தொடர்ந்து பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் சேர்ந்தேன். இதைத் தொடர்ந்து 1979-ல் சென்னை ஐசிஎஃப்-பில் நல்ல வேலை கிடைத்தது. அது முதல் ரயில்வேஸ் அணிக்காக சுமார் 6 ஆண்டுகள் விளை
யாடினேன்.
தமிழக அணிக்காக 7 ஆண்டுகள் வரை விளையாடினேன். இதில் 2 ஆண்டுகள் தமிழக அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளேன். அப்போது 13 தேசிய போட்டிகளில் விளையாடி வெற்றிகளைக் குவித்தோம். முதலாவது ஃபெடரேஷன் கோப்பையை இந்திய ரயில்வே அணிக்காக வென்றதை மறக்க முடியாது. அப்போது 13 அகில இந்திய வாலிபால் போட்டிகளில் பங்கேற்று எங்கள் அணி 12-ல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
1979-ல் தேசிய அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டேன். மாஸ்கோவிலும், கஜகஸ்தானிலும் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடினோம். தேசிய அணிக்காக விளையாடும்போதுதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை கிடைத்தது. தற்போது சென்னை கதீட்ரல் கிளையில் கரன்சி செஸ்ட் மேலாளராக உள்ளேன்.
வாலிபால் விளையாட்டுக்காக தனது கடைசி மூச்சு வரை பாடுபட்ட நெல்லையைச் சேர்ந்த ஜான்தான் எனக்கு ரோல்மாடல். அவரைப் பார்த்துத்தான் இப்போதுள்ள பல வீரர்களும் விளையாடி வருகிறார்கள். 1997-ல் அவர் இறந்தபோது அந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஜான் நினைவு வாலிபால் போட்டியை நெல்லை பிரண்ட்ஸ் நடத்தி வருகிறது.
1973-ம் ஆண்டு முதல் நெல்லை பிரண்ட்ஸ் சார்பில் இலவசப் பயிற்சி முகாமைத் துவக்கினோம். ஜான்தான் இதைத் துவக்கினார். இந்த ஆண்டு வெற்றிகரமாக 28-வது ஆண்டாக வாலிபால் முகாம் நடந்து வருகிறது. முகாமில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்றுச் சென்றுள்ளனர்.
இவர்களில் பலர் இப்போதும் மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள்.
இந்திய அணியில் தினகர், ஜெகதீசன், சுனிதா, கமலா, பேகம், உமா, அன்பழகன் உள்ளிட்ட வீரர்கள் விளையாடியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏராளமானோர் தமிழக அணிக்காக விளையாடியுள்ளனர். இன்றும் விளையாடி வருகின்றனர். அது எங்கள் பயிற்சி முகாமுக்குக் கிடைத்த வெற்றி.
அதோடு எங்களிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று அரசாங்கப் பணியில் சேர்ந்துள்ளனர். கஸ்டம்ஸ், ரயில்வே, வங்கி, அரசு பணிகளில் அவர்கள் அமர்ந்துள்ளனர்.
நெல்லை பிரண்ட்ஸ் கிளப் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. அதேபோல பெண்களுக்காக துவங்கப்பட்ட சிவந்தி கிளப்பும் வெள்ளிவிழாவை நெருங்கி வருகிறது.
நெல்லை பிரண்ட்ஸ் சார்பில் தொடர்ந்து 37 வருடங்களாக மாநில அளவிலான அகில இந்திய வாலிபால் போட்டியை நடத்தி வருகிறோம். இதை இதுவரை இந்தியாவிலுள்ள எந்த கிளப்பும் செய்ததில்லை'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...