நமபிககைத துடுபபு அவசியம்!
படகோட்டும் விளையாட்டில் சர்வதேச அளவில் சாதனை படைத்து வருகிறார் சென்னை வீராங்கனை ஸ்னேகா வெங்கட்ராமன். படகுப் பிரிவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு 61 பதக்கங்களைப் பெற்று வெற்றி வீராங்கனையாக ப


படகோட்டும் விளையாட்டில் சர்வதேச அளவில் சாதனை படைத்து வருகிறார் சென்னை வீராங்கனை ஸ்னேகா வெங்கட்ராமன். படகுப் பிரிவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு 61 பதக்கங்களைப் பெற்று வெற்றி வீராங்கனையாக படகோட்டும் ஸ்னேகாவிடம் படகு விளையாட்டுப் போட்டிகளில் அவர் குவித்த வெற்றிகள் குறித்து உரையாடினோம்.
படகுப் போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வம் வந்தது
எப்படி?
எனது தந்தை வெங்கட்ராமன். தனியாக தொழில் செய்து வருகிறார். அவர் மெட்ராஸ் போட் கிளப் உறுப்பினர். அவருடன் சிறுவயதில் அடிக்கடி போட் கிளப் செல்வேன். அங்கு ஏராளமான வீரர், வீராங்கனைகள் படகுப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்துள்ளேன். அப்போதெல்லாம் படகு பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்ற ஆசை எழும்.
இதை ஒரு நாள் தந்தையிடம் தெரிவித்தேன். அவரும் உடனடியாக ஓகே சொன்னார். அடுத்த நாளே பயிற்சியில் சேர்ந்துவிட்டேன்.
2000-ம் ஆண்டில் படகுப் பயிற்சியைத் துவக்கினேன். தற்போது 11-வது ஆண்டாக படகுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
எத்தனையோ துறைகள் இருக்க படகோட்டும் போட்டி
களில் பங்கேற்க முடிவு செய்தது ஏன்?
எனக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது. உடல் பலம் மட்டுமல்ல, மன பலமும் தேவைப்படும் விளையாட்டு இது. எல்லோராலும் இதைச் செய்ய முடியாது. அந்த உடல் பலமும், மன பலமும் எனக்கு இருந்ததாக உணர்ந்தேன். அதனால் இதைத் தேர்வு செய்தேன்.
என் கணிப்பு சரியாக இருந்தது. முதலில் நான் தேர்ந்தெடுத்த இந்த விளையாட்டைத் தவறு என்று நினைத்தவர்கள் நான் சர்வதேச விருதுகள், பதக்கங்களை வென்றபோது என்னைப் பாராட்டச் செய்தனர். இன்று வரை அந்தப் பாராட்டு தொடர்கிறது. எனது பதக்க வேட்டையும் கூட....
இதுவரை எத்தனை போட்டிகளில் பங்கேற்று
இருப்பீர்கள்?
நூறுக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகள், கிளப் அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். கிளப் அணிக்காகவும், பல்கலைக்கழக அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் படகுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.
மறக்க முடியாத போட்டிகள்..?
பாகிஸ்தானின் கராச்சி, இலங்கையின் கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச போட்டிகள் மறக்க முடியாதவை. 2006-ல் கராச்சியில் நடந்த சர்வதேச போட்டியில் 3 தங்கப்பதக்கங்கள் வென்றேன். கொழும்புவில் 2004-ல் 2 தங்கமும், 2007-ல் 3 தங்கப்பதக்கங்களும் வென்றேன். இந்தப் போட்டிகளை என்னுடைய வாழ்நாளில் மறக்க இயலாது.
பெற்று வரும் பயிற்சிகள்..?
தினந்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் இடைவிடாத பயிற்சி. அதுமட்டுமல்லாமல் கோடைகால பயிற்சி, வெளிநாட்டுப் பயிற்சிகளிலும் பங்கேற்று வருகிறேன். ஆசிய அளவிலான பயிற்சி முகாமிலும் பங்கேற்றுள்ளேன். தற்போது சீனாவில் பிரபலமான "டிராகன் போட்' பயிற்சியில் பங்கேற்று வருகிறேன். இந்த வகை பயிற்சியில் பங்கேற்க நீண்ட நாட்களாக ஆசை. இது இப்போதுதான் நிறைவேறியுள்ளது.
தற்போது என்ன செய்து வருகிறீர்கள்?
தற்போது சென்னை எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரியில் எம்.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.
உங்களுக்கு ஊக்கம் அளித்து வருவது யார்?
என் தந்தை வெங்கட்ராமன், தாய் சுதா, சகோதரன் வினய், கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத், உடற்கல்வி ஆசிரியை கந்தம்மாள், பயிற்சியாளர்கள் ஜேம் ஜோசப், சாக்கோ, இப்ராஹிம் ஆகியோர் எனக்கு தொடர்ச்சியான ஊக்கமளித்து வருகின்றனர். தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டி அடுத்த போட்டிகளில் சரியாக செய்யச் சொல்பவர்கள் எனது பயிற்சியாளர்கள்.
எதிர்கால இலக்கு..?
சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை இந்த விளையாட்டில் குவிக்கவேண்டும் என்பதே இலக்கு. மேலும் இந்த விளையாட்டுப் பிரிவில் அதிகாரியாக வரவேண்டும். இதன்மூலம் நிறையப் பேருக்கு இந்த விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
உங்களைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு சொல்ல விரும்புவது..?
ரோயிங் என்று அழைக்கக்கூடிய படகோட்டும் போட்டி, உடல் சம்பந்தப்பட்டதுதான். இருந்தாலும் மன வலிமையும் வேண்டும். இதை ஒரு "பவர்-ஸ்போர்ட்' என்று சொல்லலாம். கால்கள், முதுகு வலிமையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் படகோட்டும் போட்டிகளில் பங்கேற்பது கடினம். மேலும் சத்தான உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொள்ளவேண்டும். அதிக புரதச் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடவேண்டும். உணவு, உடற்பயிற்சி, மனப் பயிற்சி இவை அனைத்துமே இந்த விளையாட்டுக்கு முக்கியம். நம்பிக்கைத் துடுப்பு இருந்தால் இந்த விளையாட்டில் சர்வதேச சாதனையாளராகலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...