டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிரிக்கெட் காமினி!

இந்திய கிரிக்கெட் அணியில் திறமையான இடதுகை துவக்க ஆட்டக்காரராகவும் லெக் ஸ்பின்னராகவும் முத்திரை பதித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை திருஷ் காமினி. தற்போது சென்னை எம்ஓபி வைஷ்ணவ கல்லூரியில் எம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:19 pm

வா.சங்கர்

இந்திய கிரிக்கெட் அணியில் திறமையான இடதுகை துவக்க ஆட்டக்காரராகவும் லெக் ஸ்பின்னராகவும் முத்திரை பதித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை திருஷ் காமினி. தற்போது சென்னை எம்ஓபி வைஷ்ணவ கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரிடம் பேசினோம்.

கிரிக்கெட்டில் ஆர்வம் வந்தது எப்படி?

சிறுவயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் வந்துவிட்டது. 9 வயதாக இருக்கும்போது கிரிக்கெட் விளையாடத் துவங்கிவிட்டேன். அதன் பிறகு பள்ளி அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன். பின்னர் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று இந்திய அணியில் இடம்பிடித்தேன். தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவுக்கு முன்னேறியுள்ளேன்.

கிரிக்கெட்டில் உங்களது நிலை என்ன?

நான் எப்போதுமே துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவேன். அதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். இடதுகை துவக்க வீராங்கனைதான் எனது பொசிஷன். சுழற்பந்துவீச்சிலும் லெக் ஸ்பின்னராக பல போட்டிகளில் பரிமளித்துள்ளேன். இடது கை ஆட்டக்காரரான நான், பந்துவீசும்போது வலதுகையில்தான் வீசுவேன்.

பங்கேற்ற போட்டிகள்..?

தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தமிழக அணிக்காக வெற்றி தேடித் தந்துள்ளேன். மண்டலங்களுக்கு இடையிலான போட்டிகள், டிவிஷன்களுக்கு இடையிலான ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிக்காக "பக்', "பட்' கல்லூரிகளிடை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். 2000-ம் ஆண்டு முதல் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் காலடி எடுத்து வைத்தேன். சில வருடங்களிலேயே இந்திய அணியில் இடம்பிடித்தேன்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன்முதலில் இந்தியாவுக்காக விளையாடினேன். இந்தப் போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 135 ரன்களும் குவித்தேன். 2007-ம் ஆண்டில் நடைபெற்ற 4 நாடுகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியா 3-வது இடம் பிடித்தது. இந்த அணியிலிருந்து நான் இடம்பிடித்திருந்தேன்.

2008-ம் ஆண்டு நடந்த ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா கோப்பையை வென்றது. இதே ஆண்டில் ஆஸ்திரேலியத் தொடரிலும் விளையாடினேன்.

2010-ல் இங்கிலாந்துடனான ஒரு நாள் தொடரில் இந்தியாவுக்காக விளையாடினேன். காயம் காரணமாக ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே பங்கேற்க நேர்ந்தது.

கிடைத்த விருதுகள், பாராட்டுக்கள்..?

ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதற்காக தொடர்நாயகி விருது, 2009-ம் ஆண்டு நடந்த போட்டியின்போது சிறப்பாக விளையாடியதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறந்த ஜூனியர் கிரிக்கெட் வீராங்கனை விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளேன்.

பயிற்சி முறை..?

தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் நீண்ட நேரம் பயிற்சி செய்வேன். கடந்த ஆண்டு இந்திய வீராங்கனைகள் இருவரைத் தேர்வு செய்து பிரிஸ்பேனில் நடந்த சிறப்புப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டனர். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதற்கான செலவுகளை ஏற்றது. அந்த 2 இந்திய வீராங்கனைகளில் நானும் ஒருத்தி. பல்வேறு நாட்டு பயிற்சியாளர்கள் இந்த சிறப்புப் பயிற்சியை அளித்தனர். இந்தப் பயிற்சி, எனது ஆட்டத்திறனை மேலும் ஊக்குவிப்பதாகவும் தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள உதவுவதாகவும் அமைந்தது.

பங்கேற்ற ஆட்டங்களில் சிறந்ததாக கருதுவது..?

2006-ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் தமிழக அணியின் சார்பில் கலந்துகொண்டேன். இந்தப் போட்டியில் மொத்தம் 281 ரன்கள் குவித்தேன். 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தினேன். 2 கேட்ச்சுகளைப் பிடித்தேன். மேலும் விக்கெட் கீப்பர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டபோது அவருக்குப் பதிலாக ஓர் ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக நின்று 2 கேட்ச்களைப் பிடித்தேன். இந்தத் தொடரில் எனக்கு சிறந்த வீராங்கனை விருது கிடைத்தது.

உங்களுக்குக் கிடைக்கும் பாராட்டுகள் எங்கிருந்து..?

முதலில் தந்தை திகேஷ் வசந்திடமிருந்துதான். அதன் பின்னர் கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத், உடற்கல்வி ஆசிரியை கந்தம்மாள், பயிற்சியாளர் ரமேஷ் என அனைவரும் பாராட்டினர்.

இப்போது விளையாடி வரும் அணிகள்..?

எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி, தமிழக அணி, இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன்.

எதிர்காலத் திட்டம்?

இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் குவிக்கவேண்டும். அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றவேண்டும். உலகக் கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுத் தரவேண்டும். இதுதான் எனது கனவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.