கமகமக்கும் காஃபி ஓவியங்கள்!
மனதின் நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புத சக்தி ஓவியங்களுக்கு உண்டு. பழங்கால பாறை ஓவியங்கள் தொடங்கி நவீனகால ஓவியங்கள் வரை ஓவியக் கலையின் பரிணாமம் நீண்டுகொண்டே செல்கிறது. படித்தவர் மட்டுமின்றி கல


ம னதின் நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புத சக்தி ஓவியங்களுக்கு உண்டு. பழங்கால பாறை ஓவியங்கள் தொடங்கி நவீனகால ஓவியங்கள் வரை ஓவியக் கலையின் பரிணாமம் நீண்டுகொண்டே செல்கிறது.
படித்தவர் மட்டுமின்றி கல்வியறிவில்லாத மாந்தரையும் தன்வயம் ஈர்க்கும் திறன் கொண்ட ஓவியங்களை, வண்ணங்களைக் குழைத்து, குழைத்து தூரிகை கொண்டுதான் வடித்தெடுக்க வேண்டும் என்பதில்லை... காஃபி தூளிலும் அழகழகான ஆயிரம் ஓவியங்களைப் படைக்கலாம்'' என்கிறார் மதுரை நியூ பங்கஜம் காலனியைச் சேர்ந்த ஓவியர் செல்வராணி. ஒரு மதிய வேளையில் காஃபி தூளில் கலக்கலான ஓவியங்களை வரைந்து தள்ளிக் கொண்டிருந்த செல்வராணியிடம் பேசினோம்.
""எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி. குடும்பத்தில் என்னுடன் சேர்த்து ஐந்து சகோதரிகள். பெண் பிள்ளைகள் என்பதால் எங்கள் திருமணத்தை விரைவிலேயே முடித்துவிட்டார் அப்பா.
இதனால், 10-ம் வகுப்புக்கு மேல் எனது படிப்பைத் தொடர முடியவில்லை. சிறுவயதில் தந்தையின் மிக்ஸர் கடையில் இருக்கும்போது சிறிய ஓவியங்களைத் தீட்டும் பழக்கம் ஏற்பட்டது. 2000-ம் ஆண்டில் எனக்கு திருமணம் நடைபெற்றது. எனது குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் சும்மா இருந்தபோது, "ஏதாவது ஒரு சுயதொழிலைக் கற்றுக்கொள் அல்லது உனக்குப் பிடித்தமான ஓவியத்தையாவது வரையக் கற்றுக்கொள்' என்று எனது கணவர் சக்கரவர்த்தி ஊக்குவித்தார்.
கடந்த 2005-ம் ஆண்டில் கண்ணகி என்பவரிடம் தஞ்சை ஓவியக் கலையைப் பயின்றேன். பின்னர், தொடர்ந்து நிறைமதி என்பவரிடம் ஓவியங்களின் நுணுக்கங்கள் குறித்து மேலும் கற்றுக்கொண்டேன். இரு ஆண்டுகளில் தஞ்சாவூர் பெயிண்டிங், ஆயில் பெயிண்டிங், நவீன ஓவியம், ஃபேப்ரிக் பெயிண்டிங் எனப் பல்வேறு ஓவியங்களையும் வரையக் கற்றுக்கொண்டேன்.
கோலத்திலும் ஓவியம் வரையத் தெரிந்துகொண்டேன்.
இந்நிலையில்தான், காஃபி தூளிலும் ஓவியம் வரையலாம் என்ற செய்தியைப் பார்த்தேன். வெளிநாட்டில் உள்ள ஓர் அமைப்பு இந்தப் பயிற்சியை அளிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த அமைப்பை இ-மெயில் மூலம் தொடர்புகொண்டு விவரம் கேட்டோம். அவர்களும் எனது ஆர்வத்தைப் புரிந்துகொண்டு சில டிப்ஸ்களை அளித்தனர். இதன்பிறகுதான் காஃபி தூளைப் பயன்படுத்தி கேன்வாஸ் துணியில் அழகான ஓவியங்களைப் படைத்து வருகிறேன். வெறும் 10 ரூபாய் இருந்தால் போதும் காஃபி தூளில் மணக்கமணக்க அழகான ஓவியத்தை சில மணி நேரங்களில் படைத்துவிடலாம்.
தொடக்கத்தில் சில ஓவியக் கண்காட்சிகளில் நான் வரைந்த காஃபி தூள் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. பெருந்தலைவர் காமராஜர், இசை அமைப்பாளர் இளையராஜா போன்ற பலரது ஓவியங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததால், இதுபோன்று நிறைய வரைந்து தரும்படி ஆர்டர் வந்தது. தமிழகத்தில் காஃபி தூளில் ஓவியம் வரைவது எனக்குத் தெரிந்தவரை நான் மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன்.
குழந்தையின் மனத்தைக்கூட கவர்ந்துவிடும் சக்தி படைத்த, நல்லதொரு ஓவியத்துக்கு விலை இதுதான் என்பதை நிர்ணயிக்க முடியாது. இதனால், விரும்பிக் கேட்பவர்களுக்கு மட்டுமே ஓவியங்களை வரைந்து தருகிறேன். மற்றபடி கலை என்பது விற்பதற்கு அல்ல என்பதுதான் என் கருத்து.
ஓவியம் வரைவது தவிர, ஆரி- ஜர்தோஷி போன்ற ஆடைகளில் பூ வேலைப்பாடு நுணுக்கத்தையும் கற்றுக்கொண்டுள்ளதால், ரவிக்கை, சேலைகளில் பல்வேறு டிûஸன்கள் வரைந்து கொடுப்பதன் மூலம் மாதம்தோறும் சுமார் 15 ஆயிரம் வருவாய் கிடைக்கிறது. மேலும், ஓவியப் பயிற்சியும், எம்ப்ராய்டரி பயிற்சியும் அளித்து வருகிறேன்.
இதன் மூலமும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. என்னிடம் காஃபி தூள் ஓவியப் பயிற்சி பெற வருவோர் அவர்களுக்குப் பிடித்தமானவர்களின் உருவத்தை ஓவியமாக வரைவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், காஃபி தூள் ஓவியத்திற்கும் மவுசு அதிகரித்து வருகிறது.
எனது லட்சியமெல்லாம் தொடர்ந்து நிறைய புதுமையான ஓவியங்களை வரைந்து பெரிய அளவில் ஓவியக் கண்காட்சியை நடத்த வேண்டும் என்பதுதான். மேலும், காஃபி தூளில் இசை அமைப்பாளர் இளையராஜாவை நான் ஓவியமாக வரைந்ததை அவரிடம் அன்பளிப்பாக அளிக்க வேண்டும் என்பதும் எனது விருப்பம். அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக ஓவியப் பயிற்சியை அளிக்கவும் விரும்புகிறேன். '' என்கிறார் தன்னம்பிக்கையுடன் செல்வராணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...