உடலையும் மனத்தையும் இணைப்பது யோகா!
உலகில் சுமார் 70 சதவீதம் நோய்களுக்கு மன அழுத்தம், மன இறுக்கம் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இன்றைய நவீனச் சூழல், கலாசாரச் சீரழிவு ஆகியவற்றால் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும


உலகில் சுமார் 70 சதவீதம் நோய்களுக்கு மன அழுத்தம், மன இறுக்கம் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இன்றைய நவீனச் சூழல், கலாசாரச் சீரழிவு ஆகியவற்றால் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் கூட மன இறுக்கத்தின் பாதிப்பில் இருந்து தப்பமுடியவில்லை என்று சொல்லலாம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள் நமது முன்னோர்கள். இன்றையக் காலத்தில் ஆரோக்கிய மனிதர்களே எங்கும் இல்லை' என்று நினைக்கும் நிலைக்கு மானுட சமூகம் தள்ளப்பட்டுவிட்டது. நோய் வந்தபிறகு மேற்கொள்ளும் சிகிச்சை முறைகளைவிட நோயே வராமல் காக்கும் பாரம்பரிய உடல், மனப் பயிற்சி முறைகளை நாம் புறக்கணித்ததால் வந்த விளைவுதான் இதுபோன்ற நிலைக்குக் காரணம் என்கிறார் விவேகானந்த கேந்திரத்தின் கேரள மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரான
ஜி.கிருஷ்ணசுவாமி.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், அரசு, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் பல ஆண்டுகளாக யோகாசனப் பயிற்சியை அளித்து வருகிறார் இவர். இவரது மனைவி ரேகா கிருஷ்ணசுவாமியும் மதுரைக் கிளை மூலம் பெண்களுக்கு யோகாசனப் பயிற்சியை அளிக்கிறார். யோகா பயிற்சி வகுப்பை நடத்திவரும் கிருஷ்ணசுவாமியிடம் யோகாவின் தற்போதைய அவசியம் குறித்து உரையாடினோம்.
""தற்போதைய உலகமயச் சூழல் மனிதனின் செயல்பாட்டை இயந்திரம் போல மாற்றி வருகிறது. இதனால், மனித மனம் பல்வேறு காரணிகளால் மீண்டும், மீண்டும் இறுக்கத்திற்கு உள்ளாக நேரிடுகிறது. இந்த இறுக்கம் உடலுக்குள் பரவுகிறது. நீண்டகாலமாக இறுக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு தொடக்கத்தில் மூட்டுவலி, செரிமானக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படுகிறது. பின்னர், நீரிழிவு நோய், வயிற்றுப்புண் என்று தொடர்ந்து புற்றுநோய் வரை செல்கிறது.
மனக் குழப்பத்தால் உடல் உறுப்புகளும் இயங்குவதில் குழப்பம் ஏற்படுகிறது. இதனால், சுரப்பிகளின் செயல்பாட்டில் மாறுதல் ஏற்பட்டு தேவையற்ற நோய்கள் உருவாகின்றன. பணம், பட்டம், பதவி, மேலைநாட்டு வாழ்க்கை முறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நமது கலாசார வாழ்வை பிற்போக்கானது என்று ஒதுக்குவதே இந்த நிலைக்குக் காரணம். இப்பிரச்னைகளுக்குத் தீர்வாக யோகாசனம் உள்ளது.
யோகாசனப் பயிற்சியில் ஈடுபட விரும்பும் பலரும் அது ஏதோ உடற்பயிற்சி போன்ற ஒன்று என்ற அளவில்தான் பார்க்கின்றனர். சிலரோ, இப்பயிற்சியை முனிவர்களும், யோகிகளும், சாமியார்களும் மட்டுமே மேற்கொள்ள உகந்ததாக கருதுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். வெறும் உடற்பயிற்சி என்பது உடலுக்கான பயிற்சியாகும். ஆனால், யோகாசனப் பயிற்சியானது உடலையும், மனத்தையும் ஒருமுகப்படுத்தும் பயிற்சி. இதை பலரும் சரியாக புரிந்துகொள்வதில்லை.
உடலின் எடையைக் குறைப்பதற்கும், மன இறுக்கத்தைப் போக்குவதற்கும் உண்டான பயிற்சியாக நினைத்து, சில நாள்களிலேயே சில ஆயிரங்கள் ரூபாய் செலவழித்தாவது யோகாசனத்தை ஒரு "பாஸ்ட் ஃபுட்' போல கற்க நினைக்கின்றனர். இப் பயிற்சியை நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் ஒரு பயிற்சியாக பலரும் பார்க்கின்றனர். இது அப்படிப்பட்ட ஒரு கலையல்ல.
மேலை நாடுகளில் யோகாசனத்தைப் பயில்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அதற்குக் காரணம், இப்பயிற்சியானது நோய் வராமல் தடுப்பதுடன் ஆழ்ந்த மன அமைதி, உடல் வலிமை, மன வலிமையைத் தருகிறது. மனம் சரியான பாதையில் செல்லும். உடலையும் மனத்தையும் இணைத்து மனிதனை முழுமைப்படுத்துவது யோகாசனம்தான்!
தமிழகத்தில் யோகாசனக் கலைக்கு அடிப்படையாக திருமூலர், அகஸ்தியர், திருவள்ளுவர் போன்ற பலர் உள்ளனர். பதஞ்சலி மகரிஷி, வசிஷ்டர் ஆகியோரது யோக சூத்திரங்கள் மூலம் யோகாசனப் பயிற்சி கற்றுத்
தரப்படுகிறது.
உடலில் பிராணன் (உயிர்ச்சத்து) இருப்பது அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. யோகா செய்வதன் மூலம் உயிர்ச் சக்தி சுத்தப்படுத்தப்பட்டு உடல் முழுவதும் பிராணன் சீராகப் பரவும். இதனால், உடலில் நோய் வராமல் தடுக்கப்படுவதுடன், வந்த நோயும் குணமடைகிறது. தினசரி வாழ்வில் உலகத்தை நாம் பார்க்கும் கண்ணோட்டம் மாறி மனம் மகிழ்ச்சியால் பூரிக்கும்.
உடல், மனம், புத்தி, உணர்ச்சிகள், இறைநிலை ஆகிய ஐந்தும் நல்ல வளர்ச்சியைப் பெறும். இன்றையசூழலில், மனித சமுதாயத்தில் எதிர்மறை உணர்வுகளை சமாளிப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. சாதாரண கல்வியில் இதற்கு ஒரு தெளிவு இல்லை. யோகாசனப் பயிற்சியின் மூலமாக உணர்ச்சிகளை மேலாண்மை செய்வதற்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மனத்தை சமநிலையில்
வைத்திருக்க யோகாசனம் உதவுகிறது.
யோகாசனப் பயிற்சியில் குறைந்தபட்சம் தளர்வுப் பயிற்சிகள், சில ஆசனங்கள், பிராணாயாமம் உள்ளிட்ட அடிப்படைப் பயிற்சிகள் அவசியமாகும். இப்பயிற்சியின் மூலம் மனத்தை உள்முகமாகத் திரும்பிப் பார்க்க முடிகிறது.
குறைந்தபட்சம் 10 முதல் 15 நாள்கள் இந்த அடிப்படைப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு தினமும் ஒரு மணிநேரம் பயிற்சி செய்யலாம். யோகாசனத்தின் அடிப்படைக் கருத்துகள் ரிஷிகள் மூலமாகவும், முனிவர்கள் மூலமாகவும் கொடுக்கப்பட்டிருப்பதால் இதை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானது என்று எண்ணக் கூடாது. இது அனைத்து மதத்திற்கும் பொதுவானது. அனைத்து மதத்தினரும் இப்பயிற்சியை மேற்கொண்டு பலன் பெறலாம். விவேகானந்த கேந்திரம் நடத்தும் யோகாசன வகுப்புகளில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர்.
மேலை நாடுகளில் நடை, உடை, பாவனையை வைத்து மட்டுமே மனிதனின் தகுதி நிலை பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அதுபோன்று இருப்பதில்லை. அரையாடை அணிந்த காந்தியை நாம் மகாத்மாவாகப் போற்றுகிறோம். அவரது உடையைப் பார்க்கவில்லை. ஒழுக்க நெறியை வைத்தே மதிப்பீடு செய்கிறோம். ஆகவேதான், 1977-ம் ஆண்டில் கன்னியாகுமரியில் ஆரம்பிக்கப்பட்ட விவேகானந்த கேந்திரம் பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகளுக்கு பண்பாட்டுக் கல்வியை தொடர்ந்து அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக யோகாசன முகாம் மூலம் ஆசனம், பிராணாயாமம், தியானம் மூலமாக மனிதனை இயல்பான நிலைக்குக் கொண்டு செல்லும் பணியை மேற்கொள்கிறோம். இதற்காகவே, ஒருநாள் முகாம், குடும்ப சங்கம முகாம் நடத்துகிறோம். பெரியவர்களுக்குத் தனியாகவும், குழந்தைகளுக்கு விளையாட்டுகள் மூலமாகவும் யோகாப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கேந்திரம் மூலம் "கல்வித்துறையில் யோகாப் பயிற்சி' என்ற நூலை வெளியிட்டுள்ளோம். அரசு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு யோகாசனப் பயிற்சிகளை அளித்துள்ளோம். மதிப்பெண்களை அதிகரிப்பதற்கு உதவும் ஒரு பயிற்சியாக இதைப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க நினைக்கின்றனர். இப்பயிற்சியை தினமும் சுமார் ஒரு மணிநேரம் செய்வதற்கு மாணவர்களைப் பழக்கினால், அது அவர்களை ஒழுக்கம் சார்ந்தவர்களாக மாற்றுவதுடன் அவர்களின் ஆளுமைத் தன்மையை
அதிகரிக்கும்.
விவேகானந்த கேந்திரம் நடத்தும் யோகாசனப் பயிற்சிகளுக்கு பொதுவாக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. குறைந்தஅளவு பதிவுக் கட்டணம் மட்டும் பெறப்படுகிறது. கல்லூரி, பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் "ஒருங்கிணைந்த சூர்ய நமஸ்காரம் பயிற்சியை அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
1997-ம் ஆண்டில் இருந்து இதுபோன்ற யோகாசன வகுப்புகளை கேந்திரம் மூலம் நடத்தி வருகிறோம்.
ராஜஸ்தான், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸôம் போன்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் யோகாப் பயிற்சியை அளித்துள்ளோம். வெளிநாட்டினரும் பயிற்சி பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பயிற்சியால் ஈர்க்கப்படும் சிலர் தங்களது நாட்டுக்கு வந்து பயிற்சி அளிக்கும்படி கேட்கின்றனர். தாயகத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் யோகாசனப் பயிற்சியைப் பெறச் செய்ய வேண்டும் என்பதே எமது விருப்பம். பள்ளி, கல்லூரிகள் கேந்திரத்தை அணுகினால் (தொலைபேசி: 9487752163) யோகாசன வகுப்புகளை நடத்த தயாராக இருக்கிறோம்'' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...