கடல் வண்ணப் புழு

விநோத உயிரினங்கள் நிரம்பிக் கிடக்கிற மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மெல்லுடலிகள் வகையை சேர்ந்த அரியவகை கடல்வாழ் உயிரினங்களில் ஒன்று தான் கடல் வண்ணப்புழு. பல வண்ணங்களிலும்,பல வடிவங்களிலும் பவளப்பாறைகள்
கடல் வண்ணப் புழு
Updated on
2 min read

வி நோத உயிரினங்கள் நிரம்பிக் கிடக்கிற மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மெல்லுடலிகள் வகையை சேர்ந்த அரியவகை கடல்வாழ் உயிரினங்களில் ஒன்று தான் கடல் வண்ணப்புழு. பல வண்ணங்களிலும்,பல வடிவங்களிலும் பவளப்பாறைகள் நிரம்பியிருக்கிற பகுதியில் அதிகமாக வாழும் இவற்றின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..

""நூடி பிராங்ஸ் என்ற ஆங்கிலப் பெயரும்,நூடி பிராஞ்சியா என்ற விலங்கியல் பெயரும் உடைய அபூர்வ ஜீவன். நூடி என்ற லத்தீன் சொல்லுக்கு நிர்வாணம் என்றும் பிராஞ்சியா என்ற கிரேக்க சொல்லுக்குச் செதில்கள் என்ற பொருளும் உண்டு. உலகம் முழுவதும் 30ஆயிரம் சிற்றினங்கள் கண்களைக் கவரும் வகையில் பல வண்ணங்களில், வடிவங்களில் வாழ்ந்து வருகின்றன.

பவளப்பாறைகளின் முகடுகளில் ஒட்டிக்கொண்டு வாழும் இவ்வுயிரினத்துக்கு அடர்த்தியான இருட்டிலும் நன்கு பார்வை தெரியும் வகையில் இரு கண்கள் இருக்கின்றன. தனது உடலில் டார்ச் லைட் வெளிச்சம் போன்று ஒளி உமிழும் தன்மை இருப்பதால் இரவில் பார்ப்பவர்களுக்கு மின் மினிப்பூச்சியைப் போலத் தெரியும்.

மற்ற மீன்களிடமிருந்தும் எதிரிகளிடமிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இவற்றின் உடலில் இருந்த ஓடுகள் பரிணாம வளர்ச்சியின் காரணமாக இப்போது இல்லாமலே போய் விட்டன. இருப்பினும் எதிரிகளிடமிருந்து தப்பிக்க பல வழிகளைக் கையாளும் புத்திசாலித்தனமான இனமாகவும் இது இருக்கிறது.

சிலவற்றில் மட்டுமே விஷத்தன்மை இருக்கிற இவற்றை பறவைகள் தின்றவுடன் இறந்துவிடும் அளவுக்கு விஷவீரியம் அதிகம். இதுதான் இதன் பாதுகாப்பு ஆயுதம். பறவைகளில் சில மட்டும் விஷமுடைய புழுக்களைக் கண்டறிந்து சாப்பிடாமல் தப்பிவிடுவதும் உண்டு. ஆனால் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி சில விஷமில்லாத புழுக்களும் பறவைகளைப் பார்த்தவுடன் தனது நிறத்தை விஷமுள்ள புழுக்களின் நிறத்தைப் போலவே மாற்றிக் கொள்ளும்.

சில வகை வண்ணப்புழுக்கள் எதிரிகள் தொட்ட மறுநிமிடமே விஷஅமிலத்தை சுரந்து விடும் அதிபுத்திசாலிகள். கடல் தாமரைகளையும்,ஜெல்லி மீன்களையும் சில புழுக்கள் சாப்பிட்டாலும் பசிக்கும் போது உணவு கிடைக்காவிடில் ஒன்றை மற்றொன்று அடித்துக் கொன்று சாப்பிட்டு விடும். அதற்கேற்றவாறு தரமான தாடையும்,கூரிய பற்களும் உள்ளன. தனது வயிறு முழுவதும் காற்றை நிரப்பிக் கொண்டு கடல்நீரில் மிதக்கும் கிளாக்கஸ் அட்லாண்டிகஸ் என்ற புழுவானது அருகில் மிதந்து வருகிற மற்ற உயிரினங்களைப் பிடித்து தின்றுவிடுகின்றன.

கடல் தாவரங்கள், பவளப்பாறைகள் போன்ற தோற்றத்துடன் காணப்படும் இப்புழுக்களின் ஆயுட் காலம் ஒரு வருடத்துக்கும் குறைவு. எலும்புகளே இல்லாத உடலமைப்பைக் கொண்டதாக இருப்பதால் இவை இறந்தவுடன் எந்த அடையாளமும்  இல்லாமல் போய் விடுகின்றன. இதன் சாம்பல் வழுக்கைத் தலைக்கு முடி முளைக்கும் மருந்தாகவும் பயன்பட்டிருக்கிறதாம். இதயம், மூளை மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கும், புற்றுநோயை குணமாக்கவும் இதனைப்  பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கவும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஒரே உயிரினத்தில் ஆண் இனப்பெருக்க உறுப்பும்,பெண் இனப்பெருக்க உறுப்பும் இருக்கும் விந்தை உயிரினம்.

ஆனால் ஒரு நேரத்தில் ஒரு பாலின உறுப்பு மட்டுமே செயல்பட்டு ஒரே நேரத்தில் சுமார் 2 மில்லியன் முட்டைகள் வரை இடும் என்பது இதன் ருசிகர தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com