மணல் டாலர் சிப்பி

மன்னார் வளைகுடா கடலில் மிக அதிகமாகக் காணப்படும் கடல் வாழ் உயிரினங்களில் மணல் டாலர் சிப்பி இனமும் ஒன்று. இவற்றின் இனப் பெருக்கம், உடலமைப்பு மற்றும் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிர
மணல் டாலர் சிப்பி
Updated on
2 min read

மன்னார் வளைகுடா கடலில் மிக அதிகமாகக் காணப்படும் கடல் வாழ் உயிரினங்களில் மணல் டாலர் சிப்பி இனமும் ஒன்று. இவற்றின் இனப் பெருக்கம், உடலமைப்பு மற்றும் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர. செந்தில்குமார் கூறியது:

 கால்சியம் கார்பனேட்டால் ஆன டாலர் போன்ற வடிவத்தின் மேற்புறத்தில் நட்சத்திர மீன்களைப் போன்ற வடிவில் துளைகளைக் கொண்டிருக்கும் இவ்வினம் மணல் டாலர் சிப்பி எனப்படுகிறது. இதன் மேற்புறம் நுண்ணிய வெல்வெட்டைப் போன்று இருக்கும் பளபளப்பான கால்களால்தான் இவை மணலில் புதையுண்டு நகர்ந்து செல்கின்றன. இந்த நுண்ணிய கால்கள்தாம் பல நிறங்களில் அமைந்து பார்ப்பவர்களுக்கு அழகான தோற்றத்தைத் தருகிறது. பச்சை, ஊதா, வைலெட், கரும்பச்சை உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் தென்படுகின்றன.

 ஒவ்வொரு சிற்றினமும் ஒவ்வொரு நிறமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, கடற்கரையோரங்களில் நாம் பார்க்கும் இதன் உயிரற்ற உடல்கள் சுத்தமான வெண்மையாகவே இருக்கும். ஏனெனில், இறந்தவுடன் இவை வெளிறிப் போய்விடுகின்றன. மேற்புறம் காணப்படுகின்ற துளைகளின் வழியாக இவை வாயுப் பரிமாற்றம் செய்து சுவாசிக்கின்றன. இதன் வாய் உடலில் நடுப்புறத்தின் அடியில் இருப்பதால், கடலுக்கு அடியில் உள்ள இரையைச் சாப்பிட எளிதாகி விடுகிறது. கடலுக்கடியில் வாழும் புழுக்கள், பூச்சிகள், நுண்ணிய மிதவை உயிரினங்கள் மற்றும் அழுகிய உடல்கள் ஆகியன இவற்றின் விருப்ப உணவாகும்.

 கடலுக்கடியில் மென்மையான மணற்பரப்பில் கூட்டம், கூட்டமாக வாழும் இவை, ஆழமற்ற கடல்களின் அடிப்பகுதியில் ஒரு சில செ.மீ. தூர ஆழத்தில் புதைந்து வாழ்கின்றன. இதன் உடலில் கூர்மையாக இருக்கும் பக்கவாட்டுப் பகுதி அதன் உடலானது மணலில் புதைந்து கொள்ள உதவியாக இருக்கிறது. விலங்கியலில் முட்தோலிகள் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் இதனது உடலில் முட்கள் எதுவும் இருப்பதில்லை.

 நட்சத்திர மீன்கள், கடல் வெள்ளரி, கடல் குச்சி உள்ளிட்ட உயிரினங்களின் குணத்தையே இதுவும் ஒத்திருப்பதால் இவ்வினமும் முட்தோலிகள் குடும்பத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

 கிளைபிஸ்டிராய்டியா என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட இவ்வினத்தைக் கடல் பிஸ்கெட் என்றும் சொல்கிறார்கள். ஆண் இனம் விந்துவை வெளியேற்றும் நிலையில் பெண் இனத்தின் முட்டையில் பட்டவுடன், கருவுறுதல் நடந்து லார்வா குஞ்சுகளாகி, தண்ணீரில் சிலமணி நேரங்கள் மட்டும் மிதந்து கொண்டே இருந்துவிட்டு, பின்னர் கடலுக்கடியில் போய் அமர்ந்து விடும்போது டாலர் போன்ற உருவத்துக்கு மாறிவிடுகின்றன. இக் குஞ்சுகள் தனது எச்சிலை தனக்கு அருகிலேயே துப்பி வைத்திருக்கும். அதுவும் பார்ப்பதற்கு அந்த லார்வா குஞ்சுகளைப் போலவே இருப்பதால், பெரிய மீன்கள் இவற்றைத் தின்பதற்காக முயற்சி செய்து ஏமாற்றமடைகின்றன. பெரிய மீன்களிடம் இவ்வாறு லாகவமாகத் தப்பித்துவிடும் இக் குஞ்சுகள் சில சிறிய கடல்வாழ் உயிரினங்களுக்கு எளிதில் இரையாகி விடுகின்றன.

 இந்த உயிரினத்தைக் கடல் தேவதைகள் பயன்படுத்தும் நாணயங்கள் என்றும் அரிஸ்டாட்டில் விளக்கு என்றும் சொல்கிறார்கள். இவற்றைப் பற்றி இன்றும் பல பழமையான கற்பனைக் கதைகள் வழக்கில் இருந்து

 வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com