நேரு பாதுகாத்த பொன் நகை!
புதுதில்லியின் முக்கியச் சாலைகளில் ஒன்றான தீன் மூர்த்தி மார்க்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்புகள் நிறைந்த தெற்கு அவென்யூ சாலையும் சந்திக்கும் அடர்ந்த பசுமையுடன் கூடிய பரந்த புல்வெளியின் பி


புதுதில்லியின் முக்கியச் சாலைகளில் ஒன்றான தீன் மூர்த்தி மார்க்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்புகள் நிறைந்த தெற்கு அவென்யூ சாலையும் சந்திக்கும் அடர்ந்த பசுமையுடன் கூடிய பரந்த புல்வெளியின் பின்னணியில் வீற்றிருக்கிறது அந்த வெள்ளை நிற மாளிகை.
ஜவஹர்லால் நேரு வாழ்ந்த "தீன் மூர்த்தி பவன்' என்ற இல்லம்தான் அது.
அவர் பிரதமராக இருந்தபோது வாழ்ந்த இல்லம் அவரது மறைவுக்குப் பிறகு நேரு நினைவு அருங்காட்சியகமாகவும், நூலகமாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
பாரதத்தின் விடுதலைப் போராட்ட வேள்வியில் தன்னை மெழுகாக உருக்கிக் கொண்ட தலைவர்கள், நாட்டின் வளர்ச்சியில் பண்டித நேருவின் பங்களிப்பு ஆகியவற்றை அறிந்துகொள்ளும் பல தகவல்கள் அடங்கிய பெட்டகமாக இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது.
நாட்டின் முதல் பிரதமராகப் பதவியேற்றது முதல் உயிர் நீத்த 24.05.1964 வரை நேரு வாழ்ந்த இடம்தான் இந்த தீன்மூர்த்தி பவன்.
இந்த மாளிகையின் கீழ்தளத்தில் நுழைவோருக்கு கன்
னத்தில் கையை வைத்து ஒரு புறமாகப் பார்வையைச் செலுத்தும் பண்டித நேருவின் திருவுருவப் படம் காட்சி தருகிறது.
பின்புறம் சென்றால் தோட்டத்தின் இடப்புறத்தில் உள்ள ஒரு சிறிய இடத்தில் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரின் பெயர் தாங்கிய அமர் ஜோதி ஒளிர்கிறது.
கீழ்தளத்தின் இடப்புறம் வழியாகச் சென்றால் எதிரே உள்ள அறையின் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் பாலகன் நேருவின் படம் பார்வையாளரை வரவேற்கிறது.
குழந்தைப் பருவத்தில் நேரு வாழ்ந்த அலகாபாத் ஆனந்தபவன் வீடு, லண்டனில் நேரு பயின்ற ஹாரோ பள்ளி, கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்தும் படங்கள் என நேருவின் இளமைக் காலப் படங்கள் பலவும் இடம்பெற்றுள்ளன.
மாதிரி ரயில்: நேரு இறந்த பிறகு அவரது அஸ்தியை அலகாபாத்துக்கு எடுத்துச் சென்ற ரயிலின் மாதிரி வராந்தாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள்: மகாத்மா காந்தி குறித்த முக்கியக் குறிப்புகள், புகைப்படங்கள், ஹோம் ரூல் இயக்கத்தை தோற்றுவித்த லோக்மான்ய திலகர், அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோரது படங்கள், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்கப் பாடுபட்ட ராஜாராம் மோகன்ராய், லார்டு வில்லியம் பெண்டிங்க் பிரபு ஆகியோரின் படங்கள், முதல் சுதந்திரப் போர் பற்றிய படங்கள், ராணி லட்சுமி பாய் குதிரையில் போரிடும் காட்சி, சுவாமி தயானந்த சரஸ்வதி, சமூக சீர்திருத்தவாதிகளான கேசப் சந்திர சென், தேவேந்திரநாத் தாகூர், பண்டிட் ராமாபாய், பாபா ராம்சிங், சையது அகமதுகான், மகாதேவ் கோவிந்த ரானடே, ஜோதி ராவ் கோவிந்தராவ் பூலே என சுதந்திர போராட்ட காலத்தை கண் முன் நிறுத்தும் பல தலைவர்களின் படங்கள் அறைகளை அலங்கரிக்கின்றன. இந்திய தேசியக் காங்கிரûஸ தோற்றுவித்த சென்னை மாகாணத்தின் முக்கியத் தலைவர்களான ஜி.சுப்பிரமணிய ஐயர், சி.விஜயராகவாச்சாரியார், எஸ்.ஆர்.முதலியார், காங்கிரஸ் தலைவர் டபிள்யூ. சி.பானர்ஜி உள்ளிட்டோரின் புகைப்படங்களும், மும்பையில் நடைபெற்ற முதல் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் புகைப்படமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
முஸ்லிம் தலைவர்கள்: சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற மெüலானா முகமது அலி, ஹக்கீம் அஜ்மல்கான், டாக்டர் எம்.ஏ. அன்சாரி, எம்.ஏ.ஜின்னா, அமீர் அலி, சையது அலி ஆகிய பல்வேறு முஸ்லிம் தலைவர்களின் திருவுருவப்படங்களும் உள்ளன.
இல்லத்தின் மாடியில் நேரு பயன்படுத்திய வாசிப்பு அறை, குடும்பத்தினர் அமரும் அறை, அலுவலக அறை, படுக்கை அறை ஆகியவை உள்ளன.
அமைதி விரும்பி: அகிம்சை, அமைதியை போதித்த புத்த பெருமானை மிகவும் நேசித்தவர் நேரு. தனது அலுவலக அறை, வாசிப்பு அறை, படுக்கை அறை ஆகிய இடங்களில் எல்லாம் பல்வேறு வடிவிலான புத்தரின் சிலைகளை வைத்து அழகு பார்த்துள்ளார். அறைகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகையான புத்தர் சிலைகள் பார்வையாளர்களின் மனதைக் கவர்கின்றன.
புத்தகப் பிரியர்: புத்தக வாசிப்பில் மிகவும் விரும்பம் கொண்டவர் நேரு. இதற்கு சாட்சியாக அவரது நூலக அறை காணப்படுகிறது. பல்வேறு நாட்டு அறிஞர்களின் நூல்கள், பல்துறை நூல்கள், நூலக அறைக் கண்ணாடி அலமாரியில் பொக்கிஷம் போல் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
நள்ளிரவு வரை புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட நேரு புத்தகங்களை வாசிப்பதுடன், அதைப் பொன் நகை போல் பாதுகாக்கவும் செய்தார் என்பதை நினைவுபடுத்துவதாக உள்ளது அந்த நூலக அறை.
இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்ற நிகழ்ச்சியின் புகைப்படங்கள், கலை, இலக்கியம், நாட்டுக்கான நலத்திட்டங்கள், தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் ஆகியவை தொடர்பான புகைப்படங்கள் முதல் மாடியின் வராந்தாவை அலங்கரிக்கின்றன.
மாடியின் இடப்புற ஓரத்தில் உள்ள நேருவின் அறையின் கதவில்,"நேருவின் உயிர் பிரிந்த இடம் இதுதான்' என்று எழுதப்பட்டுள்ள வாசகம் பார்வையாளர்களின் சோகத்தை அவர்களே அறியாமல் அப்பிக்கொண்டுவிடுகிறது.
பிரம்மாண்ட நூலகம்: நினைவில்லம் அருகே உள்ள கட்டடத்தில் பிரம்மாண்ட நூலகம் இயங்குகிறது. சுதந்திர போராட்டக் காலம் தொடர்பான அரிய பல புகைப்படங்கள், செய்தித்தாள்கள், நவீன இந்தியா தொடர்பான தகவல்கள் இந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
சுமார் 5 லட்சம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன. தவிர, அருங்காட்சியகத்தின் ஒருபுறம் நேரு கோளரங்கமும் உள்ளது.
தமிழகத் தலைவர்கள் படங்கள் இடம் பெறுமா?
நேரு அருங்காட்சியகத்தில் சுதந்திரப் போராட்டக் காலத் தொடர்புடைய மறைந்த தமிழகத் தலைவர்களான பாரதியார், காமராஜர், கக்கன், வ.உ.சிதம்பரம்,பூலித்தேவன், நாமக்கல் கவிஞர் போன்ற பல்வேறு தலைவர்களின் புகைப்படங்கள் இல்லாதது தென்னக சுற்றுலாப் பயணிகளுக்கு மனக்குறை ஏற்படுத்துவதாக உள்ளது.
காமராஜர், ராஜாஜி, சுப்பிரமணிய பாரதி ஆகியோருக்கு சிலையும், அவர்களது பெயரில் சாலையும் உள்ள நிலையில், அருங்காட்சியகத்தில் இத்தகைய தலைவர்களின் திருவுருவப் படங்களும் இடம் பெற்றால் அவர்களைப் பெருமைப்படுத்தியதாக இருக்கும்.
இந்த அருங்காட்சியகத்தின் தலைவராக பிரதமர் மன்மோகன் சிங் உள்ளார். இதில் சோனியா காந்தி உள்பட 17 பேர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...