கார்ட்டூனிருந்து செஸ்ஸூக்கு மாறினேன்!
வயது 11 தான். ஆனால் செஸ் விளையாட்டில் இவர் சாதனைகள் கணக்கில் அடங்காதவை. தேசிய போட்டிகளில் சாதித்துக் கொண்டிருந்தவர் இன்று ஆசிய செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.


வயது 11 தான். ஆனால் செஸ் விளையாட்டில் இவர் சாதனைகள் கணக்கில் அடங்காதவை. தேசிய போட்டிகளில் சாதித்துக் கொண்டிருந்தவர் இன்று ஆசிய செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். சென்னை பாடியைச் சேர்ந்த ஆசிய சாம்பியன் வைஷாலிதான் அவர்.
சமீபத்தில் இலங்கையில் நடந்த 12 வயதுக்குள்பட்டோர் ஆசிய செஸ் போட்டியில் பட்டம் வென்று திரும்பியுள்ளார். 19 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் அனைத்து சுற்றுகளிலும் ஒரு தோல்வி கூட பெறாமல் பட்டம் வென்று திரும்பியுள்ளார் வைஷாலி.
ஸ்லோவேனியாவில் நடைபெறவுள்ள உலக செஸ் போட்டிக்காக தயாராகிக் கொண்டிருந்த அவரைச் சந்தித்தபோது....
செஸ்ஸில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
எனக்கு 5 வயதாக இருக்கும்போதே அதிகமாக டி.வி. பார்ப்பேனாம். ஒரு கார்ட்டூன் சேனல் விடாமல் பார்த்துக் கொண்டிருப்பேனாம். டி.வி.யிலிருந்து என்னை அகற்றினால் சத்தம் போடுவேனோம். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனது பெற்றோர் என்னை செஸ் விளையாட்டில் சேர்த்து விட்டனர். டி.வி.யிலிருந்த எனது கவனம் செஸ்ஸில் திரும்பிவிட்டது. ஆறே மாதத்தில் போட்டியில்
கலந்துகொண்டு கோப்பையை வெல்லும் அளவுக்கு முன்னேறிவிட்டேன்.
எந்த வயதில் செஸ் விளையாடத் துவங்கினீர்கள்?
5 வயதில். அதாவது யுகேஜி படித்துக் கொண்டிருந்தபோது. அம்பத்தூர் புதூரிலுள்ள ப்ளூம் செஸ் அகாதெமியில் எனது பெற்றோர் என்னைச் சேர்த்துவிட்டனர். செஸ் பயிற்சியாளர் தியாகராஜன்தான் எனக்கு செஸ் குரு. இன்று வரை அவரிடமே பயின்று வருகிறேன். இப்போதுதான் செஸ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது போல் தெரிகிறது. 7 வருடம் ஓடிவிட்டது. இப்போது வேலம்மாள் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். நூற்றுக்கணக்கான போட்டிகளில் பங்கேற்றுவிட்டேன்.
பங்கேற்ற போட்டிகள்...
ஏராளமான மாவட்ட, பள்ளிகளிடையிலான போட்டிகளில் போட்டியிட்டு வென்றுள்ளேன். 20-க்கும் மேற்பட்ட மாநில அளவிலான போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன்.
2009-ல் காரைக்குடியில் நடந்த மாநில அளவிலான போட்டி, 2010-ல் காரைக்குடியில் நடந்த மாநில அளவிலான போட்டி, மதுரையில் 2011-ல் நடைபெற்ற வேலம்மாள் 24-வது மாநில அளவிலான போட்டி, மன்னார்குடியில் 2012-ல் நடைபெற்ற 25-வது மாநில அளவிலான போட்டிகளில் சாம்பியன் பட்டத்தைத் தட்டி வந்துள்ளேன்.
5 தேசிய போட்டிகளிலலும், 5 சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றுள்ளேன். 12 வயதுக்குள்பட்டோர் தேசிய போட்டியில் ஒரே ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளேன்.
சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற ஆசிய இளையோர் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதை மறக்கவே முடியாது...
ஆசிய இளையோர் பட்டம் பெற்றது தொடர்பாக...
இந்த போட்டி மிகவும் கடுமையானதாக இருந்தது. 19 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர், வீராங்கனைகள் வந்திருந்தனர். புதிய நாடு, அறிமுகம் இல்லாத வீரர், வீராங்கனைகள் என முற்றிலும் புதிய சூழல் இருந்தது.
இருந்தபோதும் சிறப்பாக விளையாடினேன். அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றேன். ஒரு சுற்றிலும் தோல்வி அடையவில்லை.
நான் வென்ற போட்டிகளிலேயே இதுதான் எனக்கு மிகவும் பிடித்தது. மிகவும் கடுமையாகப் போராடி வெற்றி கண்டேன்.
சிறிய வயதிலேயே கடுமையாக போராடி வெற்றி பெறுவது எனக்குப் பிடிக்கும். போராடும் குணம் எனக்கு அதிகம். அமைதியாக இருப்பது போன்று தோன்றினாலும் போட்டி என்று வந்துவிட்டால் முழு மூச்சாக இறங்கிவிடுவேன்.
பெற்ற விருதுகள்...
ஏராளமான ரொக்கப் பரிசுகள், விளையாட்டுப் பொருள்களை பரிசாக பெற்றுள்ளேன். 5 முறை சைக்கிள்களை பரிசாக வென்றுள்ளேன். சென்னையில் இந்த ஆண்டு நடைபெற்ற எஸ்டிஏடி-ஆர்எம்கே 4-வது ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்ட்ர் செஸ் போட்டியில் சிறந்த தமிழக வீராங்கனை விருது வாங்கினேன்.
உங்களுக்கு உறுதுணையாக இருப்பது...
எனது தந்தை ரமேஷ்பாபு, தாயார் நாகலஷ்மி இருவரும் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள். வெற்றி பெறும்போது தந்தை ஊக்கமளிப்பார். முதலிடம் பெற முடியாமல் நான் சோர்ந்துபோகும் அடுத்த போட்டியில் வெல்லலாம் என்று எனக்கு ஆறுதல் அளிப்பார்.
தாயார் நாகலஷ்மி நான் விளையாடச் செல்லும் இடங்களுக்கு கூடவே வருவார். வெளிமாநிலமாக இருந்தாலும் சரி.வெளிநாடாக இருந்தாலும் சரி. எனக்கு உற்ற துணை அவர்தான். என்னுடைய வெற்றியில் முழு பங்கு அவருக்குண்டு.
அதைப் போலவே நான் வெற்றி பெறும்போது ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் அனைவரும் பாராட்டுவர். பள்ளித் தலைவர் வேல்முருகன் அதிக உற்சாகமளிப்பார். ஊக்கத் தொகை கொடுத்து பாராட்டுவார். செஸ் போட்டியில் நான் செய்த சாதனைகளைக் கண்டு எனக்கு இலவசக் கல்வி அளிக்கின்றனர்.
உங்களுக்குப் பிடித்த செஸ் வீரர்...
சந்தேகமேயில்லை, நமது உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தான். அவர் செஸ் விளையாடும்போது அவர் செய்யும் நகர்த்தல்களை உற்று கவனிப்பேன். அதிலிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வேன்.
உங்களை மெருகேற்றிக் கொள்ள நீங்கள் செய்யும் முயற்சிகள்...
செஸ் சம்பந்தமான புத்தகங்களைப் படித்து அதிலிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வேன். அதேபோல செஸ் போட்டிகள் நடக்கும் இடங்களுக்குச் சென்று பார்த்து கற்றுக் கொள்வேன்.
அடுத்து பங்கேற்கவிருக்கும் போட்டிகள்...
ஸ்லோவேனியாவில் நவம்பரில் நடைபெறவுள்ள உலக செஸ் போட்டி, மும்பையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய செஸ் போட்டிக்காக தயாராகி வருகிறேன்.
எதிர்காலத் திட்டம்....
செஸ் போட்டிகளில் உலக சாம்பியனாக வேண்டும். இதுவே எனது லட்சியக் கனவு. இளம் வயதிலேயே கிராண்ட் மாஸ்டராக வேண்டும். இந்த இலக்குகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன். இதில் நிச்சயம் வெற்றி பெறுவேன்.
படங்கள்: கி. அண்ணாமலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...