தமிழ் நாடக மேடையில் "சிரத்தா' குழுவினர் "தனுஷ்கோடி' மூலம் புதுமையை என்று அறிமுகப்படுத்தத் தொடங்கினார்களோ, அதை இன்றுவரை தங்கள் நாடகங்களில் தொடர்ந்து கையாண்டு வந்திருப்பதற்கு முதலில் பாராட்டைச் சொல்லியாக வேண்டும். இதுவரை சமூக, அரசியல் நாடகங்களை மட்டுமே கண்டுவிட்டு, மாறுதல் வருமா என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு வாதவூரன் நிச்சயம் ஆறுதல் அளித்திருக்கும். "வாதவூரன்' என்றால் யார் என்று அறியாதவர்கள், அவர்தான் மாணிக்கவாசகர் என்றால், "அடடா, அவரா?' என்று புரிந்துகொள்வார்கள்.
மதுரை மன்னன் வரகுண பாண்டியனின் அமைச்சரவையில் முதலமைச்சராக இருந்த வாதவூரன், போர்க் குதிரைகள் வாங்க மன்னன் கொடுத்த பொற்காசை எடுத்து, பாழடைந்த திருப்பெருந்துறை சிவபெருமான் ஆலயத்தைச் செப்பனிட்டுவிடுகிறார். மன்னன் விடுவானா? சிறைச்சாலையில் அடைத்துக் கசையடி கொடுக்கிறான்.
சிவபிரான் அருளால் குதிரைகள் வந்து சேர்கின்றன. (மாதிரிக்கு ஒரு குதிரை மட்டும் மேக்- அப் எதுவுமின்றி கம்பீரமாக மேடைக்கே வந்துவிடுகிறது) பரிகள் வருவதையும், அவை நரிகளாக மாறிக் கூச்சல் இடுவதையும் கிராபிக்சில் காட்டி, பாராட்டைக் கைத்தட்டலாகப் பெற்றுவிடுகிறார்கள். நாடக மேடைக்கு ஏற்ற உத்தி.
நாடகத்தின் மிகச் சிறந்த அம்சம், ஒளி அமைப்பும், காட்சி வடிவமைப்பும்தான். குறிப்பாக, சிவபிரான் வழிப்போக்கனாக வந்து வாதவூரனின் மனக்குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, கோயிலைச் சீராக்க முடிவு எடுக்க வைக்கிற காட்சியும், செவ்வானப் பின்னணியில் குதிரையோடு அவரே வந்து நின்று வாதவூரனிடம் பேசும் காட்சியும்தான்.
ஆனால் வழிப்போக்கனுக்கும் வாதவூரனுக்கும் இடையிலான உரையாடலை இன்னும் குறைத்து நறுக்கென்று அமைத்திருக்கலாம். அதேபோன்று, சிறைச்சாலையில் மன்னன், வாதவூரனைக் காண வரும்போதும் உரையாடல் தொய்கிறது. உடையலங்காரத்தில் கவனம் செலுத்தியிருக்கும் கலை இயக்குநர், மன்னனின் சிவப்புப் பட்டுடையில், கண்ணை உறுத்துகிற மாதிரி எதற்கு ஓர் அழுகல் நீல மேலங்கியையும் சேர்த்துக் குடுகுடுப்பைக்காரர் மாதிரி ஆக்கவேண்டும்? அவர்தான் பளீரென்று அழகான சிவப்புப் பீதாம்பரத்தை மேலே போட்டுக் கொண்டிருக்கிறாரே!
வாதவூரனாக நடிப்பவரும், சிவபிரானாக நடிப்பவரும் பிற நடிகர்களும் குறைசொல்ல முடியாதவாறு நடித்திருக்கிறார்கள். திருச்சதகப் பாடல்களையும், திருக்கோத்தும்பி பாடல்களையும், அச்சப்பத்து, பிடித்தபத்து பாடல்களையும், கோயில் திருப்பதிகப் பாடல்களையும் நல்ல குரல்வளம் படைத்த இளம் கர்நாடக இசைக்கலைஞரிடம் பாடச் சொல்லியிருக்கக் கூடாதோ?!
முதல் தரத்துக்குக் குறிவைத்தபின், இரண்டாம் தரத்துடன் சமரசம் செய்துகொள்வானேன்? ஆரம்பத்தில் வாதவூரனின் மகள் செல்வி பாடுகிற, "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி' என்ற பாரதியார் பாடலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
வாதவூரர் சிறையில் சித்திரவதைப்படும்போது, "இறக்கினும் இன்றே இறக்க', என்றும் "இருக்கினும் இருக்க, வேந்தன் ஒறுக்கினும் ஒறுக்க, உவகையும் உடனே ஊட்டினும் ஊட்டுக, வானிற் சிறக்கினும் சிறக்க, கொடியதீ நரகம் சேரினும் சேருக, சிவனை மறக்கிலம்' என்று பாடுகிற பாடல் அல்லவா மிக முக்கியமானது? அவர் மன உறுதியை வெளிப்படுத்தும் இந்தப் பாடலைச் சேர்த்துக்கொண்டு வேறு சில பாடல்களை நீக்கியிருக்கலாம்.
இந்திரா பார்த்தசாரதியின் ராமானுஜர் போன்று, புராண நாடகங்களில் வசனம் கூர்மையாக, சிந்தனையைத் தூண்டும் வகையில் இருந்தால் அது நாடகத்தை மேலும் ஒரு படி உயர்த்தும்.
வெகு நாட்களுக்குப் பின்னர் மனோகரை நினைவூட்டும் வகையில் ஒரு புராண நாடகத்தை நயத்தோடும், மெருகுடனும் அரங்கேற்றியிருக்கும் சிரத்தாவுக்குப் பாராட்டு. இயக்குநர் ஜி.கிருஷ்ணமூர்த்திக்கும், வசனமெழுதியிருக்கும் ஆர்யனுக்கும், காட்சியமைப்பாளர் ஜி. ரமேஷுக்கும் தனிப்பாராட்டு.