இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சாதனையாளர்களை மதிக்கும் "பவித்ரம்'!

நிறுவனங்களுக்கும் சமூகக் கடமை இருக்கிறது என்ற சொற்றொடர் இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது. ஆனால், தங்களை முன்னிருத்திக் கொள்ளாமல், தங்கள் நிறுவனங்களின் வாயிலாக, சமூகத்தில் அமைதியாகத் தொண்டு புரிபவர்கள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:02 am

சாருகேசி

நிறுவனங்களுக்கும் சமூகக் கடமை இருக்கிறது என்ற சொற்றொடர் இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது. ஆனால், தங்களை முன்னிருத்திக் கொள்ளாமல், தங்கள் நிறுவனங்களின் வாயிலாக, சமூகத்தில் அமைதியாகத் தொண்டு புரிபவர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தேடிப்பிடித்து கௌரவம் செய்தது, பவித்ரம் அறக்கட்டளை.

 சென்ட்ரல் சயன்டிபிக் சப்ளைஸ் அதிபர் எஸ்.எஸ்.ஆர். ராஜ்குமார், டெல்பை டிவிஎஸ் மனிதவளத்துறையின் டாக்டர் எஸ். வெங்கட்ராமன், இந்தியா சிமென்ட்ஸ் ஆர். ஹரிஹரசுப்பிரமணியன், வான்டேஜ் அட்வர்டைசிங் பிர்தோஸ் ஜில்லா ஆகிய நால்வருக்கும் இந்த சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. "கலைமகள்' ஆசிரியர் கீழாம்பூர், கல்வியாளர் டாக்டர் கே. வேங்கடசுப்பிரமணியன் நினைவுச் சொற்பொழிவை வழங்கினார்.

 ஒரு முறை திருநெல்வேலி போகிற வழியில் ரயில்வே கேட் சாத்தியிருந்ததால், முதலமைச்சராக இருந்த காமராஜ் அவர்களின் கார், சேரன்மாதேவியில் நின்றுவிட்டது. கீழே இறங்கிக் காற்று வாங்க நின்றுகொண்டிருந்தார் காமராஜ். இரண்டு சிறுவர்கள், தூக்குப் பாத்திரத்தில் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு மாடு மேய்க்கப் போய்க்கொண்டிருந்தார்கள். படிக்கிற வயதில் மாடு மேய்க்கிறார்களே என்று அவர்களை அழைத்தார். சிறுவர்கள் இருவரும் மாடு மேய்க்கப் போவதாகவும், தூக்குச் சட்டியில் சாப்பாடும், நாலணா கூலியும் அவர்களுக்குக் கிடைக்கும் என்றும் பதில் சொன்னார்கள். மாவட்டக் கல்வித் துறை அதிகாரியாக இருந்த கே. வேங்கடசுப்பிரமணியனிடம், மதிய உணவு கொடுத்தால் அதிகப் பிள்ளைகளைப் பள்ளிக்கு வரச் செய்யலாம் என்ற யோசனை தமக்குத் தோன்றியதை, பரிசீலிக்கும்படி கேட்டுக்கொண்டார். மாநில கல்வித்துறை உயர் அதிகாரி நெ.து. சுந்தரவடிவேலுவிடம் இது குறித்துப் பேசி, ஆரம்பகட்டத்தில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் கே.வி. அவர்களுக்கு இருந்த பங்கை டாக்டர் கே. வேங்கடசுப்பிரமணியம் நினைவுச் சொற்பொழிவில் முதலில் குறிப்பிட்டார் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்.

 அதன் பிறகு வந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அதை இன்னும் விரிவுபடுத்தி சத்துணவுத் திட்டமாக்கியபோதும், மாநிலக் கல்வி அதிகாரியாக அப்போதிருந்த கே.வி. அவர்களுக்கு முக்கியப்பங்கு இருந்தது என்றார். தமிழகத்தில் இந்த முறையை அமல்படுத்த அன்றைய தினமணி ஆசியர் ஏ.ஏன்.எஸ். அவர்களின் நான்கு கட்டுரைகளே காரணமாக இருந்ததையும், அதை கே.வி. அவர்கள் ஒரு ரயில் பயணத்தின்போது ஏ.என்.எஸ். அவர்களிடம் கலந்து பேசி, முறைப்படுத்தியதையும் கீழாம்பூர் குறிப்பிட்டார். வாஜ்பாயி அவர்கள் பிரதமராக இருந்த போது, கீழாம்பூர் தில்லியில் கே.வி. அவர்களைச் சந்தித்ததையும் அவர் மறு நாளே பிரதமர் வாஜ்பாயியை தாம் சந்திக்க ஏற்பாடு செய்ததையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கீழாம்பூர். கே.வேங்கடசுப்பிரமணியன் வாஜ்பாயியின் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்திருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டினார். பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம் துவங்கப்பட்ட போது, முதலில் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுக்கொண்ட கே.வி., ஏ.என். சிவராமனைச் சந்தித்து, தாம் புதிதாக எந்தத் துறையை அங்கே துவங்கலாம் என்று ஆலோசனை கேட்டார். ஏ.என்.எஸ். நாடகத்துறையைப் பரிந்துரை செய்ய, உடனே தில்லியிலிருந்த தமிழ் எழுத்தாளரும் நாடகாசிரியருமான இந்திரா பார்த்தசாரதியை அந்தத் துறைக்குப் பொறுப்பு ஏற்க வருமாறு கே.வி. அழைப்பு விடுத்து, அவரையே துறைத்தலைவராக நியமிக்கவும் செய்தார்.

 சங்கரன்கோயில் பள்ளியில் வேங்கட சுப்பிரமணியம் படித்துக்கொண்டிருந்த போது அவருக்கு ஆசியராக இருந்த பிள்ளையவர்கள், ஒரு கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை என்பதற்காக, பிரம்பால் விளாசிவிட்டார். வீட்டில் இரவு படுக்கும்போது, அவர் முதுகில் பிரம்புக் காயம் இருப்பதைப் பார்த்த அம்மா கேட்கும்போதுதான் கே.வி. நடந்ததைச் சொன்னார். ஆனால் வருடங்கள் பல சென்றபின் அதே பள்ளிக்குக் கல்வி அதிகாரியாகச் சென்றார் கே.வி. முதியஆசிரியரான பிள்ளையவர்கள், பழைய சம்பவம் காரணமாக, தம்மால் பள்ளிக்கு அவப் பெயர் எதுவும் குறிப்பில் வந்துவிடக்கூடாது என்று, தலைமை ஆசிரியரிடம் விடுப்பு கேட்டார். அவர் விடுப்பு தர மறுத்துவிட்டார். பட்டங்கள் பல பெற்று, உயர் அதிகாரியாகப் பள்ளிக்கு வந்தார் கே.வி. அவர் பள்ளிக்கு வந்ததும் செய்த முதல் காரியம், தமக்கு அன்று ஆசிரியராக இருந்த பிள்ளையவர்களின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியதுதான்! இதை அவரே தமது நூலில் குறிப்பிட்டிருக்கிறார் என்று சொன்னார் கீழாம்பூர்.

 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், ஐ.நா. ஆலோசகரும், ஜார்கண்ட் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான, சிந்தனையாளர் பி.எஸ். ராகவன் பேசுகையில், இன்று விதர்ப்பாவில் பத்தாயிரம், இருபதாயிரம் ரூபாய்க் கடனைக்கூடத் திருப்பித் தர முடியாமல் விவசாயிகள் மானத்துக்கு அஞ்சி தற்கொலை செய்துகொள்வதையும், இன்று பத்தாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு, மடிப்பு கலையாத வேட்டியுடன், வெற்றிச் சின்னமாக இரண்டு விரல்களைக் காட்டிக்கொண்டு வெளியே வரும் அரசியல்வாதிகளையும் ஒப்பிட்டார் ராகவன்.

 ""நாம் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகளுக்கு யார் பொறுப்பு என்று தேட வேண்டாம். நாமே கண்ணாடியில் பார்த்துக்கொண்டால் போதும். சாதனையாளர்களைப் பாராட்டாத நாடு உருப்படாது'' என்றார் ராகவன்.

 லண்டனில் பிரிட்டிஷ் பிரதமர் இல்லமான 10, டௌனிங் தெருவுக்கு ஒரு முறை செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வோர் அறையிலும், விஞ்ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள் படங்களாக இருந்தன. அவர்கள் செழிக்கவும் கொழிக்கவும் அப்படிப்பட்ட உயர்ந்த சாதனையாளர்களை அவர்கள் கௌரவிப்பதுதான் காரணம் என்றார் ராகவன்.

 சென்ட்ரல் சயன்டிபிக் சப்ளைஸ் நிறுவனத் தலைவர் எஸ்.எஸ்.ஆர். ராஜ்குமார், தானம் கொடுப்பதில் உள்ள இன்பம் தணியாது என்றார்.

 பாதையை மைல்களால் அளக்கிறோம் என்றால், வாழ்க்கையை "ஸ்மைல்'களால் அளக்கிறோம் என்றார். தன் நண்பர் ராமமூர்த்தி நினைவு அறக்கட்டளையை நடத்தி, அதன் மூலம் ஆண்டு தோறும் ஒரு சிறந்த தமிழ் நூலுக்குப் பரிசு கொடுத்து வருவதாகக் கூறிய இந்தியா சிமென்ட்ஸ் ஆர். ஹரிஹரசுப்பிரமணியன், தாங்கள் கொடுத்த எம்.எஸ். சுவாமிநாதன் நூலுக்கே, இரண்டு மாதங்கள் கழித்து தமிழக அரசும் பரிசு கொடுத்ததைக் குறிப்பிட்டுப் பெருமிதம் அடைந்தார்.

 பவித்ரம் கடந்த எட்டாண்டுகளாக எவ்வாறு செயல்பட்டு வந்திருக்கிறது என்று சுருக்கமாக விளக்கினார் செயலர் பாபுசேனன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.