கால் சட்டை எது, மேல் சட்டை எது என்று தெரியாது!
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்ற அவ்வையார், அதைவிட அரிது எந்தவிதக் குறைபாடுகளும் இல்லாமல் பிறப்பது என்றார். அப்படி ஏதேனும் குறைபாட்டுடன் ஒரு குழந்தை பிறந்துவிட்டால், அக்குழந்தையின் பெற்றோர


அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்ற அவ்வையார், அதைவிட அரிது எந்தவிதக் குறைபாடுகளும் இல்லாமல் பிறப்பது என்றார்.
அப்படி ஏதேனும் குறைபாட்டுடன் ஒரு குழந்தை பிறந்துவிட்டால், அக்குழந்தையின் பெற்றோர் படும்பாட்டை விவரிக்க சொற்களில்லை. குழந்தையின் எதிர்காலமும், தங்களுடைய எதிர்காலமும் இருண்டு போனதாகவே அவர்கள் உணர்கிறார்கள். அதிலும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறந்துவிட்டால்?...
பிறரைச் சார்ந்திராமல் தங்களுடைய தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ளக் கூடியவர்களாக மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை உருவாக்குவது... மிக மிகக் கடினமான செயல். அப்படிப்பட்ட கடினமான செயலைச் செய்து வருகிறது, சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் இயங்கிவரும் "அன்னை சிறப்புப் பள்ளி'. அதில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளில் பெரும்பாலோர் குடிசைப் பகுதியில் வாழும் குழந்தைகள். இந்தப் பள்ளியை நடத்தி வரும் நம்புராஜனையும், ராதாகிருஷ்ணனையும் அன்னை சிறப்புப் பள்ளியில் சந்தித்துப் பேசினோம்.
""கண், காது போன்ற உறுப்புகளில் குறைபாடு உள்ள குழந்தைகளை பிற குழந்தைகளைப் போல நடக்க வைக்க முடியும். பேச வைக்க முடியும். பிற குழந்தைகளைப் போல புலன்களைப் பயன்படுத்தி செயல்படுவதற்கு அவர்களைப் பழக்குவது எளிது. ஆனால் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை அப்படிச் செயல்பட வைப்பது இயலாத
காரியம்.
கழிவறையைப் பயன்படுத்த அவர்களுக்குத் தெரியாது. உடை உடுத்தத் தெரியாது. நடக்கும்போது எதிரில் உள்ளவற்றின் மேல் மோதாமல் இருக்கத் தெரியாது. பிறர் பேசுவதைக் கேட்டு அதற்கேற்ப நடந்து கொள்ளத் தெரியாது. அவர்களால் எழுதப் படிக்க முடியாது. சுருக்கமாகச் சொன்னால் புலன்களைப் பயன்படுத்தி மற்றவர்களைப் போல அவர்களால் எந்தச் செயலையும் செய்ய முடியாது.
எனவே அக்குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினம். அப்படியே வளர்த்தாலும் பெற்றோரின் காலம் வரைக்கும்தான் அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள். கூடப் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்களுடைய சூழ்நிலை எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.
எனவே மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குச் சுயமாக வாழ்வதற்கு பயிற்சி தர வேண்டும். அதற்காக உருவானதுதான் இந்தச் சிறப்பு பள்ளி'' என்கிறார் நம்புராஜன்.
இந்தச் சிறப்புப் பள்ளியை 1996 இல் 35 குழந்தைகளுடன் ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவரை 150 குழந்தைகளுக்கு இந்தப் பள்ளியின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
""நான் பி.ஏ. சைக்காலஜி படித்தேன். அதற்குப் பிறகு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வியில் பட்டயப் படிப்பு முடித்தேன். நம்புராஜனும் அப்படித்தான். எங்களுடைய படிப்புக்கு ஏதேனும் கம்பெனியில் மனித வளப் பிரிவில் வேலை செய்திருக்கலாம். அல்லது மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு உதவியாக வேலை செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் அப்படி இருக்க விரும்பவில்லை. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தோம்'' என்கிறார் ராதா
கிருஷ்ணன்.
""நாங்கள் இந்தப் பள்ளியை ஆரம்பிப்பதற்கு முன்பு சைதாப்பேட்டை பகுதியில் உள்ள குடிசைகளை ஆய்வு செய்தோம். கிட்டத்தட்ட 250 மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இந்தப் பகுதியில் இருந்தார்கள். ஆனால் ஆரம்பத்தில் வெறும் 35 பேர்தான் சேர்ந்தார்கள் '' என்ற நம்புராஜனிடம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட பயிற்சிகளை அளிக்கிறீர்கள்? என்று
கேட்டோம்.
"" கழிவறைப் பயிற்சி முக்கியமானது. மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிறுநீர், மலம் கழிக்கத் தெரியாது. அவர்கள் தண்ணீர் குடித்து எவ்வளவு நேரம் கழித்து சிறுநீர் போகிறார்கள். சாப்பிட்ட பின்பு எவ்வளவு நேரம் கழித்து மலம் கழிக்கப் போகிறார்கள் என்பதை முதலில் ஆய்வு செய்வோம். சிறுநீர் கழிக்கும், மலம் கழிக்கும் உணர்வு அவர்களுக்கு வரும்போது அவர்களுடைய முக பாவம் எப்படி இருக்கிறது என்பதையும் கவனிப்போம். அதற்குப் பிறகு, அவர்களைக் குறித்த நேரத்தில் கழிப்பறையில் கொண்டு போய் நிறுத்துவோம். அந்தச் சமயத்தில் அவர்கள் சிறுநீர் கழிக்காமல், பின்பு வகுப்பில் கழித்துவிடுவதும் உண்டு. இப்படி பல நாட்கள் முயற்சி செய்தால், ஒருநாள் அவர்கள் சிறுநீர், மலம் கழிக்கும் உணர்வு வந்தவுடன் தாங்களாகவே கழிவறைக்குச் சென்று அதைப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையைப் பெற்றுவிடுவார்கள்.
சிலருக்கு நன்றாகக் கண் தெரியும். நடப்பார்கள். ஆனால் எதிரில் சுவரோ, வேறு பொருளோ இருந்தால் அதில் மோதிக் கொள்வார்கள். பொருட்களின்மீது மோதாமல் நிற்க அவர்களுக்குத் தெரியாது.
சிலருக்குக் கால் சட்டை எது, மேல் சட்டை எது என்று தெரியாது. அவற்றை அணிந்து கொள்ளவும் தெரியாது. பட்டன் போடத் தெரியாது. ஸிப் போடத் தெரியாது. ஒவ்வொன்றுக்கும் பல மாதங்கள் பொறுமையாகப் பயிற்சி கொடுத்தால்தான் அவர்கள் அவற்றைக் கற்றுக் கொள்வார்கள்.
இவர்களுக்குப் பயிற்சி கொடுக்க, இதற்கென்று சிறப்புப் படிப்பு படித்த ஆசிரியர்களால்தான் முடியும். அதிலும் ஓர் ஆசிரியர் அதிகபட்சம் பத்துக் குழந்தைகளைத்தான் பார்த்துக் கொள்ள முடியும். பத்துக் குழந்தைகளுக்கு இரண்டு ஆயா அம்மாக்கள் தேவை'' என்கிறார் நம்புராஜன்.
""இந்தப் பயிற்சிகள் மட்டுமல்ல, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு எழுத்துகளையும் ,எண்களையும் படிப்பதற்கும், எழுதுவதற்கும் கற்றுத் தருகிறோம். பஸ்ஸில் ஏற, பணம் கொடுத்துப் பொருள் வாங்க, பணம் செலுத்த என்று வெவ்வேறு செயல்களுக்கான வேறுபாடுகள் இவர்களுக்குத் தெரியாது. இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பயிற்சிகள் தருகிறோம்'' என்கிறார் ராதாகிருஷ்ணன்.
""இங்கே பயிலும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், காலையில் பள்ளிக்கு வந்து மாலையில் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான இந்தப் பள்ளியை நடத்துவதுடன் கூடவே, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம்'' என்கிறார் நம்புராஜன்.
""இந்தப் பள்ளியை நடத்துவதற்கு மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. எங்களுடைய சேவையைப் பற்றித் தெரிந்தவர்கள் தரும் நன்கொடை மூலமே நாங்கள் செயல்பட முடிகிறது. அதுமட்டுமல்ல, டிஎன்க்யூ புக்ஸ் அண்ட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இந்தப் பள்ளி துவங்கியதிலிருந்து இன்றுவரை இதை நடத்த பெரிய அளவுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக அரசுப் பள்ளி எதுவும் இல்லை. தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள ஒரு பள்ளியும் நிரந்தரமான பள்ளி இல்லை. ஒரு புராஜக்ட் போல நடத்துகிறார்கள். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளிகளை நடத்த அரசே முன் வந்தால் மிகவும் நல்லது. நிறையப் பேர் பயனடைவார்கள். எங்களைப் போன்றவர்கள் செய்யும் சேவை என்ன இருந்தாலும் மிகச் சிறியதுதானே?'' என்கிறார்கள் இருவரும் தன்னடக்கத்துடன்.
படங்கள்: ப. ராதா கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...