சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தந்தையின் அடிச்சுவட்டில், மீண்டும் தண்ணீர் தண்ணீர்

கோமல் சுவாமிநாதன் எண்பதுகளில் மேடையேற்றிய ஒரு புரட்சிகரமான நாடகம், நாடு முழுக்க நாடக மேடைகளில் வலம் வந்துவிட்டு, கே.பி.யின் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்து விருதுகள் பெற்றதெல்லாம் பழங்கதையாகப் போய்விடவில்லை.

News image
Updated On :6 ஏப்ரல் 2013, 5:24 am

சாருகேசி

கோமல் சுவாமிநாதன் எண்பதுகளில் மேடையேற்றிய ஒரு புரட்சிகரமான நாடகம், நாடு முழுக்க நாடக மேடைகளில் வலம் வந்துவிட்டு, கே.பி.யின் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்து விருதுகள் பெற்றதெல்லாம் பழங்கதையாகப் போய்விடவில்லை. கோமலின் மகள் லலிதா தாரிணி முயற்சி எடுத்து, மீண்டும் ஸ்டேஜ் பிரண்ட்ஸ் குழுவை சில புதிய நடிகர்களுடன் வழங்கியிருப்பது, நாடக ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியைத் தரும்.

"தண்ணீர் தண்ணீர்' நாடகத்தை ஆங்கிலத்தில் வெற்றிகரமாக பி.சி. ராமகிருஷ்ணா மேடை ஏற்றியதுதான் எங்களுக்குத் தூண்டுதலாக இருந்தது என்று மேடையிலேயே அறிவித்தார் தாரிணி. (மெட்ராஸ் பிளேயர்ஸ் குழுவினர் சிலர் புதிய "தண்ணீர் தண்ணீர்' நாடகத்துக்கு வந்து வாழ்த்தினார்கள்.)

அன்றைக்கு கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் முதல் முதலாக மேடையேற்றியபோது பார்த்த தலைமுறையினரில் சிலர், இந்த வாரம் மீண்டும் அந்த நாடகத்தைப் பார்க்கிற போது அந்த நாள் ஞாபகத்தில் சற்று நெகிழ்ந்து போனார்கள். வெள்ளச்சாமியாக ராஜ் மதன் பொறுப்புடன் நடித்திருக்கிறார் என்றால், வாத்தியாராக தம்பி கே. பார்த்தசாரதி "வாத்தியார்' ராமனை நினைவுபடுத்தினார். அடைக்கப்பனாக வரும் டி. ரவியின் நடிப்பு இயற்கையாக இருந்தாலும், சில இடங்களில் மிகையாக இருந்தது. ஆனால் உணர்ச்சி பொங்க அவர் பேசும் வசனங்களில் அந்த மிகை மறைந்துகொண்டது.

போலீஸ்காரர் அழகிரியாக பால்ராஜின் நடிப்பில் ஆவேசம் இருந்தது. தாலி கட்டிய கணவரா, கிராமத்துக்குத் தண்ணீர் கொண்டுவந்த வெள்ளச்சாமியா என்ற காட்சியில் செவந்தியின் படபடப்பான வசனத்தோடு சேர்ந்த ஆவேசம், நாடக முடிவை உணர்ச்சிக் கொந்தளிப்பாக மாற்றிவிட்டது. ஸ்வேதா சீனிவாசனுக்குள் சாது செவந்தியும் இருந்தாள், ஆவேச செவந்தியும் இருந்தாள். பொறுமையற்ற இளைஞன் கோவாலுவாக சூரஜ் வெடித்து எழும் எல்லாக் காட்சிகளிலுமே, "நாடக மேடைக்கு சமீபத்தில் கிடைத்த இந்த இளைஞரின் வரவு நல்வரவாகுக' என்று சொல்ல வைத்தது. கந்தையன் (அருண் பிரகாஷ்), குருசாமி (ரவி ஆனந்த்), பூசா (கார்த்திக்), குப்பண்ண ஆசா (எம்.எஸ்.கணேஷ்) எல்லாருமே தங்கள் பாத்திரத்தை உணர்ந்து பங்கு கொண்டிருக்கிறார்கள்.

பத்திரிகை நிருபரைப் பார்த்து அரசு இஞ்சினியர் (கே.என். ராஜன்) முதலில் அசடு வழிவதுதான் கொஞ்சம் மிகையாக இருந்தது. ஆனால் அவர் மிரட்டல் யதார்த்தமாக இருந்தது. பத்திரிகை நிருபராக தாம்பரம் சீனிவாசன் வரும் இறுதிக் காட்சியில், கதாபாத்திரங்கள் கடைசியில் என்னவானார்கள்? என்று அறிவிக்கும் பின்கதைச் சுருக்கம்தான் ரசிகர் மனசை உறுத்தவும், உருக்கவும் வைக்கிற அம்சம். வண்டிப்பேட்டை நாயக்கராக வரும் தங்க பாண்டியன், பேச்சில் மட்டுமல்ல, உருவத்திலும் இன்றைய அரசியல்வாதியைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.

முப்பதாண்டுகளுக்கு முன் தண்ணீர் இல்லாமல் தவித்த அத்திப்பட்டி போன்ற கிராமங்களும், அரசாங்கத்தின் சிவப்பு நாடாவும், விதிகளைக் கட்டிக்கொண்டு அழும் அதிகாரிகளும், சாதி வோட்டுகளை நம்பும் அரசியல்வாதிகளும் இருந்த நிலையில் இருந்து மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை என்பதை, இந்தத் தலைமுறை ரசிகர்கள் எந்த சிரமமும் இன்றிப் புரிந்துகொள்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.