சூப்பர் குடும்பம் (நாடக விமர்சனம்)
இப்பொதெல்லாம் என்னவோ இளம் தம்பதிகள் திருமணமான கொஞ்ச நாட்களிலேயே (அல்லது சில வாரங்கள்-சில மாதங்களிலேயே) பிரிந்துபோய்விடத் துடியாய்த் துடிக்கிறார்கள்.


இப்பொதெல்லாம் என்னவோ இளம் தம்பதிகள் திருமணமான கொஞ்ச நாட்களிலேயே (அல்லது சில வாரங்கள்-சில மாதங்களிலேயே) பிரிந்துபோய்விடத் துடியாய்த் துடிக்கிறார்கள். அல்பமான காரணமாகத்தான் இருக்கும். ஆனால் அவர்களுக்கு அது பெரிய பிரச்னை. காலையில் அருமை மனைவி தூங்கி எழுந்தவுடன், அவளிடம் காபியைக் கொண்டு போய் ஆசையாய்க் கொடுக்கிறான் இளம் கணவன். "தூ, காபியா இது..' என்று ஒரு சண்டை.
மனைவி கஜல் பாட்டுக் கேட்டு ரசிக்கிறாள். ""பாட்டா இது, கர்மம், கர்மம்...'' என்று தலையில் அடித்துக்கொள்கிறான் கணவன். இது இன்னொரு பிரச்னை. காரணங்கள் எல்லாம் இப்படி அபத்தமானவையாக இருந்தும், அவைதாம் இளம் தம்பதிக்கு இடையே உரசலை உண்டுபண்ணி விரிசலை ஏற்படுத்துகின்றன. இது முதல் படி என்றால், அடுத்த படி, கணவனை "சரிதான் போடா' என்று துச்சமாக விரட்டுவது. இதற்கு மேல் எந்த சுயமரியாதை உள்ள ஆம்பிளை அவளோடு தொடர்ந்து குடித்தனம் செய்ய விரும்புவான்?
இதுதான் சூப்பர் குடும்பம் நாடகத்தின் துவக்கம்.
விவாகரத்துக்கான வழக்கு குடும்ப கோர்ட்டில் வருகிறது. நீதிபதி சபாபதி (எஸ்.எல். நாணு) சமாதானம் செய்யப் பார்த்தும் இரண்டு பேரும் கேட்பதாயில்லை. சரி, ஆறு மாதம் பிரிந்திருங்கள் என்று வழக்கைத் தள்ளி வைக்கிறார்.
ஆனால் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் விக்னேஷ்-நந்தினி (மகேஷ்வர்-ஆண்டாள் ஜெயந்தி) தம்பதி, தங்கள் இடத்தைக் காலி பண்ணிவிட்டு ரூம் தேடி அலைந்து, கடைசியில் ஒரே வீட்டில் உள்ள இரண்டு போர்ஷன்களில் ஒருவர் வந்திருப்பது மற்றவருக்குத் தெரியாமல் குடி வருகிறார்கள். (பின்னே, அப்பத்தானே நாடகம் நகரும்) சீன் - செட்டு போட்ட சைதை குமார், இந்தப்பக்கம் ஒன்று அந்தப் பக்கம் ஒன்று என்று கவனமாகத்தான் செஞ்சிருக்கார். ஆனால் இருவரும் சவால் விட்டுச் சண்டை போடுவது என்னவோ குடியிருக்கும் வீட்டுக்காரருடைய ஹாலில்தான்!
குடித்தன வீட்டுக்காரார் சிவராமன் (காத்தாடி ராமமூர்த்தி) இவர்களை எப்படியாவது சேர்த்து வைத்துவிடப் படாத பாடு படுகிறார். அந்தப் பாடு எல்லாம் அத்தனையும் அசல் அக்மார்க் நகைச்சுவை. நாணுவின் நகைச்சுவை. ஆனால் அந்த நகைச்சுவை எடுபட கணேஷ் (எஸ்பிஐ.மூர்த்தி), ராமானுஜன் (ஸ்ரீதர்), பஞ்சாபகேசன் (எம்.பி. மூர்த்தி - சார், காத்தாடி கைபட்ட கன்னம் எப்படியிருக்கு), சும்மா மொபைலும் காதுமாக இருக்கும் பையன் பாலாஜி (பாலாஜி) என்று எல்லோரும் நாணுவுக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறார்கள்.
விபத்தில் ஞாபகசக்தியை இழந்த அத்தை லலிதாவை (கீதா நாராயணன்) நாணு எதற்கு இப்படி நகைச்சுவை நாடகத்தில் கொண்டு வந்து திணித்திருக்கிறார்? என்று ஆரம்பத்தில் கேட்கத் தோன்றியது. ஆனால் முக்கால் நாடகம் முடிந்து, இளம் மனைவி அலுவலகத்தில் நண்பன் ஒருவன் போட்ட திட்டப்படி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மனம் அதிர்ந்து போனபிறகு, அந்த அத்தையை வெகு இயல்பாக அவளுக்கு ஆதரவு காட்டும் அழுத்தமான பாத்திரமாக மாற்றிய போதுதான் தெரிந்தது, நாணுவாவது காரக்டரை வீணாக்குவதாவது என்று.
கடைசியில் இளம் தம்பதி ஒன்று சேர்ந்து வாழ முடிவு செய்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரிந்த முடிவுதான். ஆனால் நாணுவும், காத்தாடி அன்ட் கோவும் அடிக்கிற காமெடி கலாட்டாவில், பல இடங்களில் வாய்விட்டுச் சிரிக்கிற வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன என்பதுதான் சூப்பர் குடும்பத்தின் வெற்றிக்கதை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...