சத்தமில்லாமல் ஒரு சாதனை!

ஒவ்வோராண்டும் பல கோடிக்கணக்கான கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
Updated on
1 min read

ஒவ்வோராண்டும் பல கோடிக்கணக்கான கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பெரும்பாலும் தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன பிளாஸ்டிக் கேரி பேக்குகள். இதைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஏதாவதொரு வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அரசுகள்} பல ஆண்டுகளாக பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றன. மாணவர்களின் மனதில் பதியும்படியாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காகவும் கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமங்களின் தலைவர் எஸ்.மலர்விழி, ஏதாவதொரு நிகழ்ச்சியை அதுவும் சாதனையாகச் செய்ய வேண்டுமென நினைத்தார்.

அதன்படி, ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 300 மாணவ, மாணவியரைக் கொண்டு காகிதப் பைகளைத் தயாரிக்க முடிவு செய்தார். மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியிலும் இதற்கு முழு அளவில் ஆதரவு கிடைத்தது. மிகக் குறைந்த நேரத்தில் அதிக அளவில் காகிதப் பைகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எலைட் உலக சாதனை நிறுவனத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் இந்தியத் தூதர் ஸிரோன்லால் இச் சாதனையைப் பார்வையிட்டார்.

30 நிமிஷத்தில் 300 மாணவ, மாணவியர் 2070 காகிதப் பைகளைத் தயாரித்தனர். இதற்காக கடந்த ஒரு வாரமாகப் பயிற்சி அளிக்கப்பட்டது. எலைட் உலக சாதனைப் புத்தகத்திலும் இது பதிவு செய்து சான்றிதழும் வழங்கப்பட்டது.
 இதுதொடர்பாக கல்லூரித் தலைவர் எஸ்.மலர்விழி கூறுகையில், ""சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொருவரும் குறைந்தது 10 காகிதப் பைகளாவது செய்யப் பயிற்சியளிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் 7 முதல் 10 பைகளைச் செய்துள்ளனர். காகிதப் பைகள் தயாரித்து சாதனையாகப் பதிவு செய்வதுடன் நின்றுவிடவில்லை. கல்லூரி அமைந்துள்ள குனியமுத்தூர் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளுக்கும் எங்கள் மாணவ, மாணவியர் சென்று பிளாஸ்டிக் கேரி பேக்குகளின் தீமைகளை வலியுறுத்தி காகிதப் பைகளைக் கொடுத்துள்ளோம். இதேபோல, பொதுமக்களுக்கும் தந்துள்ளோம்'' என்றார்.


ஒரே நேரத்தில் அதிகமானோர் காகிதப் பைகள் தயாரித்ததற்காக "எலைட் உலக சாதனைப் புத்தகத்தில்' இச் சாதனை இடம் பெற்றுள்ளது. காகிதப் பைகளைத் தயாரித்த மாணவ, மாணவியரில் சிலராவது பிளாஸ்டிக் கேரி பேக்குகளைப் பயன்படுத்தாமல் இருந்தால் அதுவே இச் சாதனையை மேலும் அர்த்தப்படுத்தும்!.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com