சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கலைப் படைப்புகள் யாருக்குச் சொந்தம்? மக்களுக்கா - கலைஞனுக்கா?

சாதாரணமாக  நம்மிடமிருக்கும் பதிவு செய்யப்பட்ட இசையின் ஒலி நாடாவையோ, டிவிடி-யையோ பிறருக்குக் கொடுக்கத் தயங்குவோம்.

News image
Updated On :7 ஜூலை 2013, 4:00 am

சாருகேசி

சாதாரணமாக  நம்மிடமிருக்கும் பதிவு செய்யப்பட்ட இசையின் ஒலி நாடாவையோ, டிவிடி-யையோ பிறருக்குக் கொடுக்கத் தயங்குவோம். அவர் திருப்பித் தருவாரா, மாட்டாரா? திருப்பித் தருமுன் பிரதி எடுத்துக்கொண்டுவிடுவாரா? என்றெல்லாம் நமக்குள் குடைந்துகொள்வோம். அதிலும் மிகப் பழைய சபா கச்சேரிகள் மற்றும் சில தனியார் நிகழ்ச்சிகளில் சில கலைஞர்கள் பாடிய பாட்டுகள் எல்லாம் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. இன்றைக்கும் மதுரை மணி, எம்.எஸ்., செம்மங்குடி, எம்.டி. ராமநாதன், மாலி என்று ஒலி நாடாக்களையும், ஒலிப்பேழைகளையும் சுழலவிட்டுக் கேட்டு ரசிப்பவர்கள் ஏராளம்.
 டேக் கார்ப்பரேஷன் உரிமையாளர் ஆர்.டி. சாரிக்கு கர்நாடக இசையைப் பரப்புவதில் ஆர்வமும், உற்சாகமும் மிகுதி. பல பள்ளிகளுக்கும், கிண்டி எஞ்சினீயரிங் கல்லூரிக்கும் நவீன ஆடிட்டோரியங்கள் கட்டிக்கொடுத்ததோடு நிற்காமல், மாணவ மாணவிகளைப் பள்ளிகளில் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் ஒலி நாடாக்களைக் கொடுத்து ராகங்களைக் கண்டுபிடிக்கும்படி தூண்டி, அவர்களில் பத்துப் பேருக்கு ரொக்கப் பரிசு வழங்கி வருகிறார். ஆனால் அவர் சமீப காலத்தில் செய்த கொடை, இன்றைய மற்றும் வருங்கால இசை ரசிகர்களுக்கு.
 பல வருடங்களாகத் தாம் சேகரித்து வைத்திருந்த 6600 மணி நேர கர்நாடக இசைக்கச்சேரி ஒலிப்பதிவுகளை அப்படியே தூக்கி மியூசிக் அகடமிக்குக் கொடுத்து, அதை எல்லாரும் கேட்கும் வசதியையும் வரும் பத்து ஆண்டுகளுக்குச் செய்து கொடுத்திருக்கிறார். ஸ்ரீலங்காவில் உள்ள இசைப்பள்ளி, சிங்கப்பூரில் உள்ள கர்நாடக இசைப்பள்ளி என்று அவர்களுக்கும் ஆயிரம் மணி நேர இசைப் பதிவுகளை வழங்கி, அவற்றைப் பொது மக்கள் கேட்பதற்கான வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறார். ஒரு மணி நேர பழைய இசைப் பதிவை "டிஜிடைஸ்' செய்ய மூன்று மணி நேரம் தேவை என்றார் சாரி.
 சென்ற வாரம் மியூசிக் அகடமியில், இந்த இசை ஒலிப்பதிவுகளோடு, அவர்கள் இத்தனை வருடங்களாக நடத்தி வந்த நாட்டிய நிகழ்ச்சிகளின் பதிவுகளையும் இசை-நடன ஆர்வலர்கள் கண்டு களிக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள். நடனப் பேராசிரியர் சி.வி. சந்திரசேகர் இதைத் திறந்து வைத்தார். சங்கீத நாடக அகடமி தலைவர் லீலா சாம்சன் சிறப்புரை வழங்கினார்.
 அகடமி தலைவர் என். முரளி ஒரு முக்கியமான பிரச்னையை முன் வைத்தார். இதில் பங்குகொள்ளும் கலைஞருக்கு எந்தவிதப் பொருளாதார ஆதாயமும் இல்லாமல் ரசிகர்களுக்கு இந்த வசதியை வழங்குகிறோம் என்பதுதான் அது. அது மட்டுமல்ல. இன்றைய இணைய யுகத்தில், பதிவுகள் வெகு வேகமாகப் பரவிவிடும் வாய்ப்பு இருக்கிறது. அறிவு உரிமைக் காப்புச் சட்டத்தின் நோக்கில், இதற்கு என்ன பாதுகாப்பு கலைஞர்களுக்குக் கிடைக்கும் என்ற கவலையை வெளிப்படுத்தினார். ஆனால், மியூசிக் அகடமி இந்த ஒலிப்பேழைகளை வர்த்தக நோக்கோடு பயன்படுத்தப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்
 ததுதான் என்றார்.
 சந்திரசேகர் பேச்சிலும் இந்த அம்சம் அடிபட்டது. தாம் வழங்கிய ஒரு நடன நிகழ்ச்சியின் பிரதி ஒன்றைப் பார்த்து ரசித்ததைத் தம்மிடமே வந்து புகழ்ந்து பேசினாராம் ஒரு சீடர். அப்படி யாரும் அந்த நிகழ்ச்சியைப் படம் பிடிக்கப் போவதாக முன்கூட்டியே தெரிவிக்கவில்லையே என்று அவரிடம் கூறினாராம் பேராசிரியர் சந்திரசேகர். முன் அனுமதி பெற்றோ, பெறாமலோ இவ்வாறு கலைஞர்களின் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வது இன்றைக்கு சகஜமாகிவிட்டது என்ற தொனி அவர் பேச்சில் தென்பட்டது. ஆனால், இசை-நடன ரசிகர்களுடன் தங்கள் கலைத் திறனைப் பகிர்ந்துகொள்ளும் காலம் வந்துவிட்டது என்பதைக் கலைஞர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.
 லீலா சாம்சனும் இதைத் தம் உரையில் குறிப்பிட்டுவிட்டு, சமூகத்துக்குக் கலைஞன் தான் திருப்பிக்கொடுக்க வேண்டிய பங்காக இதைக் கருதலாம். இவை நமது பிற்காலச் சந்ததியினருக்கு என்று சொல்லித்தான் பதிவு செய்து வைக்கிறோம். எத்தனை குழந்தைகள், குறிப்பாக மாநகராட்சி பள்ளியில் படிப்பவர்கள், இம்மாதியான கலைகளைப் பார்க்கக்கூட வாய்ப்போ, வசதியோ இல்லாமல் இருந்துவருகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிற போது, கலைஞர்கள் அப்படி ஒரு வாய்ப்பை அளிக்க இன்று தேவை ஏற்பட்டிருக்கிறது என்று சமாதானம் அடைய வேண்டும் என்றார். அரசாங்கம் தன் அரிய கலைப் படைப்புகளை "டிஜிடைஸ்' செய்து பாதுகாக்க முன்வர வேண்டும். அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் இதைச் செய்கின்றன என்பதும் அவர் அளித்த தகவல்.
 கிட்டப்பா பிள்ளையின் பிரதான மாணவி சுதாராணி ரகுபதி தம்மிடமிருந்த சில அபூர்வ டிவிடிக்களை நன்கொடையாகக் கொடுத்தார். கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் சில டிவிடிகளை அன்பளிப்பாகக் கொடுத்தது. பரதநாட்டிய நடனத்துக்குத் தங்கள் பங்களிப்பைப் பலரும் அறிந்துகொள்ளும் வகையில் மேலும் சிலர்கூட இனி தங்கள் டிவிடிக்களை அன்பளிப்பாகத் தர முன்
 வரக்கூடும்.
 இந்த ஒலிநாடாக்களை இலவசமாகக் கேட்கலாம், அல்லது டிவிடிகளைப் பார்க்கலாம் என்று யாரும் எண்ணிவிடக்கூடாது. ஆண்டுக்கு ரூ.500- கட்டணம் செலுத்தி உறுப்பினராகிறவர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும். மாதச் சந்தா என்றால் ரூ.100- கட்டினால் போதும்.
 வீட்டில் நாம் வைத்திருக்கும் ஒலி நாடாக்களையே நம்மால் ஓரிடத்தில் உட்கார்ந்து கேட்க முடிவதில்லை. வருடச்சந்தாவைக் கட்டி, இங்கே வந்து உட்கார்ந்து பழைய இசை நிகழ்ச்சிகளைக் கேட்கவோ, நடன நிகழ்ச்சிகளைப் பார்க்கவோ வர விரும்புபவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். ஆனால் நாம் இவற்றிலிருந்து கற்றுக்கொள்ளலாம், நம் கலையை மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற தேடலுடன் வரும் வளரும் இசை நடனக் கலைஞர்களுக்கு இது நிச்சயம் உதவும். அந்தக் கோணத்திலிருந்து இந்த வாய்ப்பைப் பாருங்கள் என்றார் இசைத்துறையைச் சேர்ந்த ஒரு நண்பர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.