உதவிக்கரம் நீட்டும் உணவுத் திருவிழா!

பொதுவாக உணவுத் திருவிழா அல்லது இசை நிகழ்ச்சி என்றாலே பல இடங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு
உதவிக்கரம் நீட்டும் உணவுத் திருவிழா!
Updated on
2 min read

பொதுவாக உணவுத் திருவிழா அல்லது இசை நிகழ்ச்சி என்றாலே பல இடங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு டிக்கெட் விற்பனை சிறிது சிறிதாகச் சூடு பிடிக்கும். இறுதி நாள் நெருங்க, நெருங்க அச்சிடப்பட்ட கட்டணத்தில் சிறிது தொகை கழிவு கொடுத்தாவது டிக்கெட் விற்பனை மும்முரமாக நடைபெறும்.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித ஆரவாரமும் இன்றி உணவுத் திருவிழா மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்தி அதில் கிடைக்கும் தொகையை கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களின் கல்விக்கு உதவித் தொகையாக கொடுத்து வருகிறது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம்.

பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவரும் இப்போது பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்லூரி இயக்குநருமான ஆர்.நந்தகோபால் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கேட்டரிங், ஆயத்த ஆடைத் துறை மாணவர்களுக்கு உதவும் வகையில் உணவுத் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

கோவை பி.எஸ்.ஜி. கல்வி நிறுவன முன்னாள் மாணவர்களிடம் மட்டும் இதற்காக நன்கொடை பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உணவு வகைகளும் தமிழகத்தின் உணவு வகைகளும் (சைவம் மற்றும் அசைவம்) தயாரித்து வழங்கப்படுகின்றன. பிற மாநில உணவு தயாரிப்பதில் சிறப்பாக உள்ள தயாரிப்புக் குழுவை வரவழைக்கின்றனர். இதன் மூலமாக கேட்டரிங் துறை மாணவர்களும் சம்பந்தப்பட்ட உணவுத் தயாரிப்பில் பங்கேற்கின்றனர். இது மாணவர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சியாக அமைகிறது.

  மேலும், உணவுகளைப் பரிமாறுவது முழுக்க முழுக்க  கேட்டரிங் துறை மாணவர்களே. இதன் மூலமாக ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது எப்படி நடந்து கொள்வது என்பதை மாணவ, மாணவியர் புரிந்து கொள்கின்றனர். ஆயத்த ஆடைத் துறை சார்பில் ஆடை அலங்கார அணிவகுப்பும் நடத்தப்படுகிறது. இந்த அணிவகுப்பில் பங்கேற்பதும் அதற்கான ஆடைகளைத் தயாரிப்பதும் மாணவ, மாணவியர்தான்.

 உணவுத் திருவிழாவின்போது இடையிடையே மாணவ, மாணவியர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. பானிபூரியில் இருந்து 30 முதல் 40 ஐட்டங்கள் வரை சைவம் மற்றும் அசைவ உணவுகள். இதுதவிர பணியாரம், இடியாப்பம், ஆப்பம், பல்வேறு வகையான இனிப்புகள், மதுரை புகழ் ஜிகர் தண்டா. யாரும் எது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

இதுதொடர்பாக, பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்லூரி இயக்குநர் ஆர்.நந்தகோபால் கூறியது:

கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக உணவுத் திருவிழா நடைபெறுகிறது. இதில், சுமார் ரூ.5 லட்சம் வரை கிடைக்கும் தொகை 200 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

உணவுத் திருவிழாவில் வைக்கப்பட்ட உணவுகள் தயாரிப்பில்  மாணவர்களும்  ஈடுபடுகின்றனர். இதன் மூலமாக அவர்களுக்கும் பயிற்சி கிடைக்கிறது. ஆடை, அலங்கார அணிவகுப்பில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் அதற்கான உடைகளைத் தாங்களே வடிவமைக்கின்றனர்.

உணவுத் திருவிழாவுக்காக பி.எஸ்.ஜி. முன்னாள் மாணவர் சங்கத்தினருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படுகிறது. இதன் மூலமாக போதுமான நிதி கிடைக்கிறது. தங்களது கல்லூரியில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த நிதி செல்வதால் அனைவருக்கும் திருப்தி ஏற்படுகிறது என்கிறார். உணவுத் திருவிழா தொடர்ந்து நடைபெற வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com