விரும்புகிற கலையைக் கற்றுத் தருகிறோம்! மோகன்
""ஈரோட்டை சேர்ந்த ஒருவர் ராமேசுவரத்துக்கு ரயிலில் சென்ற போது ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பிஸ்கட் வாங்கித் தருகிறேன்.


""ஈரோட்டை சேர்ந்த ஒருவர் ராமேசுவரத்துக்கு ரயிலில் சென்ற போது ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பிஸ்கட் வாங்கித் தருகிறேன். கீழே இறங்கு என்று தனது 2 வயது மகளை ரயிலில் இருந்து இறக்கி விட்டு ரயில் புறப்படும்போது ஓடி ரயிலில் ஏறி விட்டார். "அப்பா, அப்பா' என்று அழுது கொண்டிருந்த சிறுமியிடம் விசாரித்த போது பெயர் சர்மிளா என்றும் அப்பா ஏமாற்றி விட்டுப் போய் விட்டார் என்றும் சொல்லியிருக்கிறாள். ஊர் ஈரோடு என்றும் சொன்னதைத் தவிர வேறு எந்த விபரங்களும் அந்தச் சிறுமிக்குத் தெரியவில்லை. அந்தச் சிறுமியின் அழுகையும்,அலறலும் உள்ளத்தையே உறைய வைப்பதாகவும் இருந்திருக்கிறது. ரயில் நிலையத்தில் ஒருவரை வழியனுப்பச் சென்ற சமூக சேவகர்கள் ஆத்மநாதசுவாமி, ராமநாதன், பணி ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ஜோதிமுருகன் ஆகிய 3 பேரும் அந்தச் சிறுமியை அழைத்து வந்தனர். அவர்களது பாதுகாப்பில் அச்சிறுமி வளர்ந்தது. இதைப் போலவே பலரும் இருப்பது தெரிய வர அனாதையாக விடப்படுபவர்களைப் பாதுகாக்க ஓர் இல்லம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மலர்ந்தது. அதன் விளைவே இந்த ஸ்ரீராமலிங்கா அன்பு
இல்லம்'' என்கிறார் அந்த இல்லத்தின் நிர்வாகி மோகன்.
ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோவில் தெருவில் 35 அனாதைச் சிறார்களுடன் செயல்பட்டு வருகிறது ஸ்ரீராமலிங்கா அன்பு இல்லம். சமூக சேவகர் ஆத்மநாதசுவாமி என்பவரால் கடந்த 2003 இல் 16 அனாதை சிறார்களுடன் துவக்கப்பட்டிருக்கிறது இந்த இல்லம்.
பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், ஒருவர் இருந்து மற்றொருவர் இல்லாமல் இருப்பவர்கள் என மொத்தம் 35 சிறார்கள் இந்த அன்பு இல்லத்தின் செல்லப் பிள்ளைகளாகவே வசித்து வருகின்றனர். 3 வயது முதல் 16 வயது வரை இங்கு வசிக்கும் ஒவ்வொரு சிறுவரிடமும் ஏதேனும் ஒரு தனித்திறமை இருக்கிறது என்பது தான் இந்த இல்லத்தின் சிறப்பு.
இல்லம் அருகில் உள்ள பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் இவர்கள் ஒயிலாட்டம்,சிலம்பாட்டம்,கரகாட்டம்,கதை சொல்லுதல், பஜனைப்பாடல்கள் பாடுதல், ஒவியம் வரைதல், நடனம், நாடகங்களில் நடித்தல் என ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கலையில் திறமைசாலிகளாக இருக்கின்றனர்.
பத்தாம் வகுப்பு படிக்கும் சரவணராஜாவும், முனியசாமியும் யோகாசனப் போட்டியில் மாநில அளவில் முதலிடம்.6 ஆம் வகுப்பு படிக்கும் காளீஸ்வரன் அனைத்து ஆசனங்களையும் உடனுக்குடன் செய்து காட்டுகிறார். பாரதி என்ற 17 வயது இளைஞரோ அவர் படிக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம்.
திருச்சி மதன் நடனமாடுவதிலும்,கோலங்கள் போடுவதிலும் சிறந்து விளங்குகிறார். கும்பகோணம் லோகநாதன் பாட்டுப் போட்டியில் பெறாத பரிசுகளே இல்லை. 6 ஆம் வகுப்பு படிக்கும் சித்தீஸ்வரன் ராகத்துடன் பஜனைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். 7 ஆம் வகுப்பு படிக்கும் கனகராஜும், பாண்டியராஜும் சிறந்த ஒவியர்கள். இப்படியாக ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை ஒளிந்து கொண்டிருக்கிறது இந்த அன்பு இல்ல இளைஞர்களிடம் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.
""திருச்சி, கும்பகோணம் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 35 பேர் இங்கு வசிக்கின்றனர். இந்த இல்லத்தின் தலைவராக வழக்குரைஞர்.குப்புராம்ஜி இருந்து வருகிறார். இதனைச் சிறப்பாக செயல்படுத்திட ஒரு குழுவும் இருக்கிறது. வருடம் தோறும் ஆண்டு விழா,புற்றுநோய், எய்ட்ஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிகள், குழந்தைகள் தின விழா,சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா என பல்வேறு விழாக்களையும் நடத்தி, அதில் மாணவர்களைப் பங்கு பெறச் செய்ய வைத்து, கொஞ்சம் கூட தாழ்வு மனப்பான்மை வந்து விடாமல் பார்த்துக் கொள்கிறோம். அனாதையாக விடப்பட்ட சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு அவர்களைப் பட்டப்படிப்பு வரை நல்ல முறையில் படிக்க வைத்து,சுயமாக தொழில் செய்து,சம்பாதித்து தங்களின் வாழ்க்கைத் தேவையை அவர்களாகவே பூர்த்தி செய்து கொள்ளும் வரை துணையாக இருக்கிறோம். ஓரளவு வசதியானவர்கள் சாப்பிடும் உணவைத்தான் இவர்களுக்கும் தருகிறோம். பள்ளிச் சீருடைகள், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது புத்தாடைகள் உட்பட பெரும்பாலானவற்றை நல்ல மனிதநேயம் உடையவர்கள் நன்கொடையாகத் தருகிறார்கள். ஒரு வருடத்திற்கு இருமுறை சுற்றுலா அழைத்து செல்கிறோம். குருவாயூர்,எர்ணாகுளம்,திருவனந்தபுரம்,சபரிமலை, பழனிமலை, சென்னை,கேரளாவில் உள்ள அமிர்தானந்தமயி மடம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்கிறோம். முக்கியமாக, ஒவ்வொருவருக்கும் அவர் விரும்புகிற கலையைக் கற்றுத் தர ஏற்பாடு செய்கிறோம்.
இல்லம் துவக்கப்பட்ட காலத்தில் உணவுத் தேவைக்காக மிகவும் கஷ்டப்பட்டோம். அப்போது மாதம் தோறும் பௌர்ணமி விழாவைக் கொண்டாடுவோம். அந்த விழாவிற்கு சுமார் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் வந்து இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு ஊட்டி விடும் நிகழ்ச்சியை நடத்தினோம்.
இதன் மூலம் 400 குடும்பங்களின் தொடர்பு கிடைத்தது. இக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது அரிசி, மளிகைச்சாமான்கள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கித் தருகின்றார்கள். கூலி வேலை செய்யும் பெயர் சொல்ல விரும்பாத இஸ்லாமிய சகோதரர் ஒருவர், சமையலுக்காக மாதம் தோறும் சீரகம் மட்டும் வாங்கிக் கொடுக்கிறார்.
ஒழுக்கமுள்ள, தேசபக்தியுள்ள,முக்கியமாக சுயநலமில்லாத இளைஞர்களை உருவாக்குவதே இந்த அன்பு இல்லத்தின் நோக்கம்'' என்கிறார் மோகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...