நெருப்பும், நீறும்!
கௌரி ராம்நாராயண் தயாரித்து வழங்கும் படைப்பு என்றால் அதில் தகவல்கள் அடங்கிய பேச்சு இருக்கும். நடனம் இருக்கும்.


கௌரி ராம்நாராயண் தயாரித்து வழங்கும் படைப்பு என்றால் அதில் தகவல்கள் அடங்கிய பேச்சு இருக்கும். நடனம் இருக்கும். இசை இருக்கவே இருக்கும். நாடக அம்சம் தூக்கலாகவே இருக்கும்.
ஏனென்றால் கௌரியிடம் தியேட்டரின் தாக்கம் அதிகம். ஆனால் இவற்றை எல்லாம் அவர் ஒன்று சேர்த்து ஒரு கலைப் படைப்பாக வழங்குகிறாரே, அதில் ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவு வைத்திருப்பார். அவற்றின் கச்சிதமான கலவையை அவர் பாணியில் செய்துவிட்டு, ருசி பார்க்க ரசிகர்களிடம் விட்டுவிடுவார்.
இவருடைய "கறுப்புக்குதிரை' இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றது. ஸ்வீடனில் நாடகாசியர்களின் மாநாட்டில் நடந்த "இரவின் இறுதி' நாடகம் இவருக்குச் சிறப்பான இடத்தைத் தந்தது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் நிறைய சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். அதனால் அனுபவம் ஒரு பெரிய ப்ளஸ் பாயின்ட்.
கௌரியின் பெரிய பலம் அவரது அபார நினைவாற்றல், அடுத்த பலம் அவர் நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்களை ஆட்டுவித்தல். இதில் அஞ்சனா ஆனந்தை அவர் ஆட்டிவைத்திருப்பதைப் பார்த்தால், அஞ்சனாவுக்கு ஏதாவது ஓர் அவார்டை உடனே தூக்கிக் கொடுத்துவிட வேண்டும் போல் தோன்றும்.
அதே மாதிரி, பாடல்களைப் பாடியிருக்கும் சவிதா நரசிம்மன் கௌரியிடம் என்ன பாடுபட்டாரோ, மேடையில் அவர் குரலில் ஒலித்த அத்தனை பாடல்களும் அக்மார்க் முத்திரை குத்த வேண்டிய ரகத்தைச் சேர்ந்தவை.
தாகூரின் பாடல் ஒன்றை, நல்ல வேளையாக, ரொபீந்திர ஷ்ங்கீத்தில் பாடவைக்காமல், நம் இசையில் பாட வைத்தது ரசிக்கும்படியாக இருந்தது. சவிதா பாட்டோடு நிறுத்திக்கொள்ளாமல், சில அருமையான ஓவியங்களையும் பொருத்தமாக வரைந்திருந்தார்.
முத்துத்தாண்டவரின் "தெருவில் வாரானோ'. பொதுவாக நடன மேடைகளில் அடித்துத் துவைத்து உலரப் போட்ட பாடல். "ஊர்வலத்தில் வரானே அவன் என்னைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க மாட்டானோ?' என்று நாயகி ஏங்கும் பாடல். கௌரியின் கற்பனையில், சவிதாவின் இசையில் ஒரு புதிய நாயகியை அங்கே காண முடிந்தது.
"அன்பே சிவம்' கௌரியின் புதுக்கவிதை வரிகளில் வெளிப்பட்டது. அதன் வார்த்தைகளோடு ஷீஜித் கிருஷ்ணாவின் மிருதங்க ஒலியும் இணைந்து ஒரு புதிய ஒலியை அறிமுகப்படுத்தியது என்றால், அஞ்சனா அஞ்சாமல் அசராமல் அவற்றுக்கு நடனமாடியது தனித்துவமாக இருந்தது. அதில் அதிரடி ஜதிகள் இல்லை ஆனால் வார்த்தைகளில் அழுத்தம் இருந்தது. சுகமான மிருதங்க நாதம் மிதந்து வந்து வரிகளுடன் இயல்பாக இணைந்துகொண்டது. (இங்கே கௌரி ஷீஜித்தின் மிருதங்க வாசிப்பில் மெய்மறந்துபோய், கத்திரிக்கோலைக் கொஞ்சம் கையாளாமல் விட்டுவிட்டாரோ) ஸþர்தாஸ் பாடலில் கிருஷ்ணர்தான் இருப்பார். இதில் சிவனும் இருந்தார். (மும்பையில் இருந்த போது ஒரு பார்ஸி பாடகி இந்தப் பாடலை கௌரிக்குக் கற்றுக் கொடுத்தாராம். ஆனால் கௌரி அதை ராகமாலிகைப் பாடலாக சவிதா மூலம் வெளிப்படுத்தினார்.) தாகூரின் வங்காளிக் கவிதைகூட சவிதாவின் குரலில் தேனாகக் கேட்டது.
உடல் என்ற எண்ணத்தையே துறந்த அக்க மகாதேவியின் வசனங்கள்கூட வெறும் வார்த்தைகளாக இல்லாமல், உயிர்த்துடிப்புடன் இருந்தன.
ஏன் சிவன்? சிவன் அர்த்த-நாரீசுவரன். தன் உடலின் பாதியைப் பெண்ணுக்குத் தந்தவன். உலகின் ஆதிப் பரம்பொருள். செயலுக்கும், சீற்றத்துக்கும் காரணமானவன். பழைமைக்கும், நவீனத்துவத்துக்கும் இன்றைக்கும் உதாரணமானவன். நீரையும் நெருப்பையும் உடலில் தாங்கியவன். "ஆரார் ஆசைப்படா'ரும், "முன்னம் அவனுடைய நாமம் கேட்டா'ளும் மனசில் தங்கிவிடும் முத்தாய்ப்புகள்.
பின்னணியில் ஒலித்த சுருதிசாகரின் புல்லாங்குழலும், அமிருதா முரளியின் வயலின் இசையும், ஜெயலக்ஷ்மி சேகரின் வீணை ஒலியும், சாய் சிரவணத்தின் தபலாவும் இசையை முழுதுமாக ரசிக்க வைத்தன.
கௌரி சவாலை ஒரு கை பார்த்துவிட்டு, கைதட்டலை இரு கைகளாலும் பெற்றிருக்கிறார் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரு துண்டுத்தாள் கூட வைத்துக் கொள்ளாமல் இணைப்புரைகளை அனாயாசமாக வழங்கி பிரமிக்க வைத்திருக்கிறார்.
நெருப்பும் நீறும் - ப்யர் அன்ட் ஆஷ் - பார்த்து ரசிக்க வேண்டிய படைப்பு. டிசம்பர் 6ஆம் தேதி, சென்னை கலாúக்ஷத்திரா அரங்கில் மீண்டும் மேடை யேறும் இந்த நிகழ்ச்சிக்கு, அனுமதி இலவசம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...