இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

என் எழுத்து எனக்குப் பிடிக்கிறது!

பிரபல ஆங்கில நாவலாசியர் அமிதாவ் கோஷ் தன் சமீபத்திய நாவல் "ஃப்ளட் ஆஃப் ஃபயர்' என்ற புதிய நாவலை வெளியிட சென்னை வந்திருந்தார்.

News image
Updated On :21 ஜூன் 2015, 11:59 am

சாருகேசி

பிரபல ஆங்கில நாவலாசியர் அமிதாவ் கோஷ் தன் சமீபத்திய நாவல் "ஃப்ளட் ஆஃப் ஃபயர்' என்ற புதிய நாவலை வெளியிட சென்னை வந்திருந்தார். ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஓட்டலின் பிரம்மாண்டமான மன்றத்தில் அத்தனை நாற்காலிகளும் நிறைந்துவிட, நிறையப் பேர் நின்றுகொண்டே கோஷ் உரையைக் கேட்டனர். முதலில் சின்னத் திரையில், பின்னணித் தகவல் தரும் குறும்படத்தை ஓடவிட்டுச் சில தகவல்களைச் சொன்ன பிறகே நூலை வெளியிட்டார்.

தம் நண்பர் கோபால கிருஷ்ண காந்தியை உதாரண புருஷர் என்று நெகிழ்ந்து போய்க் குறிப்பிட்டார் கோஷ். அவர் வந்திருப்பது தமக்குப் பெருமை தருவதாகச் சொன்னார். தம் பேச்சைக் கேட்க, பெருமளவுக்குக் கூடியிருந்த சென்னை ரசிகர்களைப் பாராட்டினார்.

"ஃப்ளட் ஆஃப் ஃபயர்' நாவல் எப்படி இருந்தது? கோபாலகிருஷ்ண காந்தி சொன்னார்:

"" ராஜாஜி ஒரு முறை, நண்பர் ஒருவரிடம் அவர் போய்விட்டு வந்த கச்சேரி பற்றி விசாரித்துவிட்டு, பாடகர் எப்படிப் பாடினார் என்று கேட்டாராம். ரசிகர் உடனே, அநியாயமாகப் பாடினார் என்று பாராட்டாகச் சொன்னாராம். அதேபோல், அமிதாவ் கோஷ் அநியாயமாக எழுதியிருக்கிறார் இந்த நாவலை'' என்று கோபால் கிருஷ்ண காந்தி தமிழில் சொன்னபோது அத்தனை கரங்களும் ஒலி எழுப்பின.

அமிதாவ் கோஷ் சுமார் பத்து ஆண்டுகள் இதற்காக ஆராய்ச்சி மேற்கொண்டாராம். அந்த உழைப்புத்தான் இத்தனை பெரிய நாவலாக உருவாகியிருக்கிறது ஏராளமான சரித்திரத் தகவல்கள், ஆதாரங்கள். நீங்கள் எழுத்தாளரா இல்லை சரித்திர ஆராய்ச்சியாளரா என்று கோபாலகிருஷ்ண காந்தி கேட்கும் அளவுக்கு அத்தனை சரித்திர ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார் அமிதாவ் கோஷ்.

சுருக்கமாக, இதுதான் நாவலின் கரு: வருடம் 1839. சீனாவுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே பயங்கரப் புகைச்சல். ஓபியம் எனப்படும் அபினைக் கப்பலில் கொண்டு வந்து சீனாவில் விற்பதில் தொடங்கிய முதலாவது போர் என்றே சொல்லலாம்.

இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அபினைப் பயிரிட்டு அதைக் கொண்டுபோய் விற்கும் பணியில் பிரிட்டிஷாருக்கு உதவியாக பீஹார் படையினருடன், தமிழ்ப் படையினரும் இருந்தார்கள். ""மொத்தம் நாலாயிரம் பேர் என்றால் அதில் இரண்டாயிரம் பேர் தமிழ்ப் படையினர்'' என்றார் அமிதாவ்.

அந்தக் கப்பலில் பலவகைப்பட்டவர்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நினைப்பு. அதில் ஒருவர் கேசரி சிங். கிழக்கிந்திய கம்பெனியில் ஒரு ஹவில்தார். இந்திய சிப்பாய்களுக்குத் தலைமை தாங்கிச் செல்பவர். ஸக்காரி ரீட் என்ற ஒரு பயணியும் கப்பலில் பயணம் செய்கிறார். இன்னொரு குறிப்பிடத்தக்க பாத்திரம் ஷிரின் மோடி. சீனாவை நோக்கிப் போய், அபின் வியாபாரம் செய்த தன் கணவனின் செல்வத்தையும், செல்வாக்கையும் தேட முனைபவள். சீனா இந்த அபின் வணிகப் போரில் பயங்கரமாகத் தோற்றுப் போய்விடுகிறது. பிரிட்டிஷார் கையில் ஹாங்காங் வந்துவிடுகிறது. இன்னொரு முக்கியமான பாத்திரம் நீல் ரத்தன் ஹால்டர். கொல்கத்தாவின் செல்வந்தர் முன்ஷி, மொழிபெயர்ப்பாளர். பேராசை மிகுந்த வணிகர்கள், சீனாவில் அபின் விற்கப் போய், சீனர்களை அப்படியே தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சரித்திரப் பின்னணியை அமிதாவ் கண் முன்னே நிறுத்தியிருப்பதுதான் நாவலின் வெற்றிக்குக் காரணம்.

நாவலாசிரியர் அமிதாவ் கோஷ் கொல்கத்தாவில் பிறந்தவர். இந்தியா, பங்களா தேஷ் மற்றும் ஸ்ரீலங்காவில் வளர்ந்தவர். தில்லியிலும், ஆக்ஸ்போர்டிலும், அலெக்சான்ட்ரியாவிலும் படித்தவர். இவர் எழுதிய முதல் நாவல், "த சர்க்கிள் ஆப் சன்'. பிரான்ஸ் நாட்டுப் பரிசு பெற்றது. "த ஷேடோ லைன்ஸ்' இந்தியாவின் சாகித்ய அகாடமி மற்றும் ஆனந்த புரஸ்கார் இரண்டையுமே பெற்றது. "த கல்கட்டா க்ரோமோஸம்', ஆர்தர் ஸி. கிளார்க் பரிசு பெற்றது. "தி ஹங்க்ரி டைட்' கிராஸ்வேர்ட் புத்தகப் பரிசு பெற்றது.

ஸீ ஆப் பாப்பின்ஸ், ரிவர் ஆஃப் ஸ்மோக், ஃப்ளட் ஆஃப் ஃபயர் மூன்றும், ஒரே கருவை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட தொடர் நாவல்கள். இவற்றுக்கு 2004இல் பிள்ளையார் சுழி போட்டாராம். இவரது நூல்கள் இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஸ்விட்சர்லாந்து மற்றும் வெனிஸ் திரைப்பட விழாக்களில் கோஷ் நடுவராகப் பணியாற்றியிருக்கிறார். நியூயார்க்கர், நியூ ரிபப்ளிக், நியூயார்க் டைம்ஸ் ஆகிய இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

தில்லி பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், க்வீன்ஸ் கல்லூரி, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். 2010 இல், நியூயார்க் க்வீன்ஸ் கல்லூரி இவருக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது. 2011இல், மான்ட்ரியாலில் இன்டர்நேஷனல் கிரான்ட் ப்ரி விருது பெற்றார்.

அமிதாவ் கோஷின் பிளாக் மிகவும் பிரபலமானது. அவர் கிளைமேட் சேஞ்ச் எனப்படும் சுற்றுச்சூழல் மாறுபாடு பற்றிய தன் கருத்துரையில், ""யாருமே அதை ஒரு முக்கிய அரசியல் அம்சமாகப் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கவிஞர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாகத் திரண்டு இதை அடையாளம் காட்டவில்லை'' என்கிறார் அமிதாவ் கோஷ்.

சேதன் பகத்தும், அமிஷ் திவாரியும் எழுதுவதும் எனக்குப் பிடித்திருக்கிறது. சுவாரசியமாக எழுதுகிறார்கள். ஆனால் நான் எழுதுவது எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால்தான் நான் எழுதுகிறேன். நான் எழுதுவது எல்லாமே எனக்குப் பிடித்தமானவைதாம். இது எனக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருகிறது'' என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் அமிதாவ் கோஷ். அடுத்து, நாவல் அல்லாத இரண்டு தொகுதிகள் வெளியாகப் போகிறதாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.