விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தியாகிகள் நினைவு போற்றப்படுமா?

வரலாறு என்பது கிரேக்க அறிஞர் ஒருவரின் கருத்துப்படி, கடந்த காலத்தைக் கவனித்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதே ஆகும். இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டுமானால், வரலாறு என்பது மூதாதையர்களின் அனுபவம்

News image
Updated On :22 ஏப்ரல் 2018, 12:54 pm

பா. இளையபதி

வரலாறு என்பது கிரேக்க அறிஞர் ஒருவரின் கருத்துப்படி, கடந்த காலத்தைக் கவனித்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதே ஆகும். இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டுமானால், வரலாறு என்பது மூதாதையர்களின் அனுபவம், தியாகம், பண்பாடு, வாழ்நிலை, மொழி ஆகிய எல்லாவற்றையும் அறிந்துகொள்ள உதவும் மிகச் சிறந்த கருவியாகும். அதன்படி பார்த்தால் நம் நாட்டின் வரலாற்றையும் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல உதவுவது சின்னங்களும், சிலைகளும்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதிலும், குறிப்பாக சுதந்திரப் போராட்டம் குறித்து அறிந்து கொள்வதற்கு சின்னங்களும், சிலைகளும் பெரும் உதவி புரிகின்றன.
சென்னையும், சுதந்திரப் போராட்டமும்: சுதந்திரப் போராட்டத்தில் சென்னைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை இங்குள்ள சிலைகள் நமக்கு உணர்த்துகின்றன. அதேபோன்று, சுதந்திரப் போராட்டத்துக்காக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பலர் வந்து செல்வார்கள். அப்போதைய சென்னை நகரையொட்டிய விருகம்பாக்கம், நெசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் தங்குவது வழக்கம். அவர்களுக்கு வேண்டிய உணவு உள்ளிட்ட வசதிகளை அப்பகுதி மக்கள் செய்துவந்துள்ளனர். அவ்வாறு, சுதந்திரத்துக்காகப் போராடியவர்களில் பலர் வரலாற்றில் இடம்பெறாமலே போயுள்ளனர். அதில், குறிப்பாக சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தியாகி முனுசாமியும், கோயம்பேடைச் சேர்ந்த பொன்னுப் பிள்ளையும் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் இருவரையும் குறித்து தேசிய வரலாற்று இலக்கியப் பேரவையின் தலைவர் விருகை பட்டாபி கூறுகையில்,
""சுதந்திரப் போராட்டத்துக்காக விருகம்பாக்கம், நெசப்பாக்கத்தில் தங்கும் வெளியூர்காரர்களுடன் இப்பகுதி இளைஞர்களும் சேர்ந்து போராட்டத்துக்குச் செல்வது வழக்கம். "வந்தே மாதரம்' கோஷத்துக்காக அடிவாங்கியவர்களில் இப்பகுதியைச் சேர்ந்த "வந்தே மாதரம்' கணேசன் என்பவர் மிகவும் பிரபலம். இது ஒருபுறமிருக்க விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முருவப்ப நாயக்கரின் மகனான முனுசாமிக்கு ஆங்கிலேயர்கள் மீதும் அவர்களது கொடி மீதும் தீராத வெறுப்பு இருந்து வந்தது. எப்படியாயினும், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பறக்கும் ஆங்கிலேயர்களின் கொடியை இறக்கிவிட்டு ராட்டை சின்னம் பொறித்த காந்தி கொடியை ஏற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருந்தார். அதற்காக ஓர் இரவில் முயற்சித்து, ஆங்கிலேய போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். போராட்டம் என்று சுற்றிக் கொண்டிருந்த முனுசாமிக்கு, வீரமுத்தம்மாள் என்ற பெண்ணை அவரது பெற்றோர் திருமணம் முடித்து வைத்தனர். ஆனாலும், சுதந்திர வேட்கை தணியாத முனுசாமி திருமணத்துக்குப் பின், ஒருநாள் சென்னை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பறக்கும் ஆங்கிலேயர்களின் கொடியை இறக்கும் முயற்சியின்போது, ஆங்கிலேய போலீஸாரிடம் வசமாக மாட்டிக் கொண்டார். 
ஏற்கெனவே, ஆங்கிலேய கொடியை இறக்கும் முயற்சியில் மாட்டியதால், இனி இவரை விட்டால் சரிப்பட்டு வராது என நினைத்த ஆங்கிலேய போலீஸார், முனுசாமியை வேனில் ஏற்றி வண்டலூர் காட்டுக்கு கூட்டிச் சென்று அவரது இடது கை கட்டை விரலை வெட்டியதுடன், கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி, காட்டுக்குள் விட்டுவிட்டு வந்துள்ளனர். துண்டித்த விரலில் இருந்து வெளியேறிய அதிகப்படியான ரத்தத்தால் முனுசாமி மயக்கமுற்ற நிலையில், அங்கேயே இரவு முழுக்க மழையில் நனைந்தபடி, கிடந்துள்ளார். 
அடுத்த நாள் காலை வண்டலூர் காட்டுக்குள் மாடு மேய்க்க வந்தவர்கள் மயக்க நிலையில் கிடந்த முனுசாமியைக் காப்பாற்றி மாட்டு வண்டியில் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வீடு வந்த முனுசாமி இடது கை கட்டை விரல் இழந்த நிலையில், வேலைக்குச் செல்ல முடியாததால், நோய்வாய்ப்பட்டு உறவினர்களின் ஆதரவில் வாழ்ந்து மறைந்தார். அவரது மனைவி வீரமுத்தமாளும் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார்.இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இவரின் தியாகமும், கோயம்பேட்டைச் சேர்ந்த பொன்னுப் பிள்ளை என்ற சுதந்திரப் போராட்ட வீரரின் தியாகமும் வெளி உலகுக்குத் தெரியவே இல்லை.
மறைக்கப்பட்ட நினைவுச் சின்னம்: திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாண்டேஸ்வரத்தைச் சேர்ந்தவரும், அப்போதைய வில்லிவாக்கம் ஒன்றியக் குழுத் தலைவருமான வெங்கடேஸ்வரலு என்பவரின் முயற்சியால் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முனுசாமி, பொன்னுப் பிள்ளை ஆகிய இருவருக்கும் கடந்த 1972-ஆம் ஆண்டு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பள்ளி வளாகத்தைச் சுற்றி சுவர் அமைக்கப்பட்டதால், அந்த நினைவுச் சின்னம் முற்றிலுமாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டது. அந்தச் சின்னத்தை பொதுமக்கள் பார்க்கும் விதத்தில் அமைக்கும்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக, அந்த நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்க்கும் விதத்தில் அமைப்பதுடன், அவர்கள் இருவரும் வாழ்ந்த விருகம்பாக்கம், கோயம்பேட்டில் நினைவுச் சின்னம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான உத்தரவை வரும் சுதந்திர தினத்தன்று அரசு அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இந்த நினைவுச் சின்னம் அமைந்துள்ள பாண்டேஸ்வரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு, இதை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.