2020: சாதனைகள் - சம்பவங்கள்

கரோனா தவிர்த்து இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இந்தாண்டு பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
2020: சாதனைகள் - சம்பவங்கள்
Updated on
5 min read

கரோனா தவிர்த்து இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இந்தாண்டு பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. தனி மனிதர்களும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அப்படிப்பட்ட சாதனையாளர்கள், சம்பவங்கள் பற்றிய தொகுப்பு:

புதிய அதிபர்

அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவர் 78 வயதான ஜோ பைடன். நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதிகள் வாக்குகளில், 290 பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற்றதையடுத்து, தேர்தலில் பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக பதவி ஏற்கிறார். அதிக வயதான அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆவார்.

சிறந்த நபர்கள்

1927-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் "டைம்' இதழ், ஆண்டின் சிறந்த நபர்களைத் தேர்வு செய்து அறிவித்து வருகிறது. அந்த வகையில், 1930- ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஆண்டின் சிறந்த நபர் என அறிவிக்கப்பட்டார். பின்னர் 1947- ஆண்டு ஜூன் மாத இதழில் காந்தியின் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டது. 1999-இல் 100 ஆண்டுகளில் சிறந்த நபர் யார் என்ற பட்டியலில் இரண்டாவதாக இடம் பிடித்தார் மகாத்மா காந்தி.

இந்நிலையில், இந்த ஆண்டின் சிறந்த நபர்களாக அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸýம், காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரேட்டா துன்பெர்க்கும், "டைம்' இதழின் சிறந்த நபர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாதனையாளர்

உலகின் பல சாதனையாளர்களின் வெற்றிக் கதைகளை அவர்கள் மூலமாகவே கொண்டு சேர்க்கும் முயற்சியாக Dear Class of2020' என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை யூடியூப் நடத்துகிறது. இந்த ஆண்டு சாதனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பேசினார். அதில் இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் பல விஷயங்களை குறிப்பிட்டார்.

""இளைஞர்களே, பொறுமையை இழக்காதீர்கள், இது அடுத்த தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கும், மேலும் எனது தலைமுறை கனவு காண முடியாத விஷயங்களை உருவாக்க இது உதவும். 27 வருடங்களுக்கு முன்பு நான் படிப்பதற்காக அமெரிக்கா வந்தேன். நான் அமெரிக்கா வருவதற்கான விமான டிக்கெட்டிற்காக என் தந்தை கிட்டத்தட்ட அவரின் ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார். நான் அந்த நிலையில் இருந்து தற்போதைய நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதிர்ஷ்டம் என்பதையும் தாண்டி தொழில்நுட்பம் மீதான என்னுடைய தீரா ஆசைதான் காரணம்'' எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்து, பின்னர் சென்னை ஐஐடியில் பயின்றவர். 2015-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டவர்.

ஆளும் பெண்கள்

பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமராகத் தேர்வாகியுள்ள சன்னாவுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. பின்லாந்தின் பிரதமராக சன்னா மரியா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அந்நாடு முழுவதும் பெண்கள் மட்டுமே வழிநடத்தும் அரசாக மாறியுள்ளது.

ஆளும்கூட்டணியில் உள்ள ஐந்து கட்சிகளின் தலைவர்களும் பெண்களேஅதிலும், அந்த ஐந்து பேரில் 4 பெண்கள் 35 வயதுக்கும் குறைவானவர்கள். தங்கள் நாட்டுப் பெண் ஆட்சியாளர்கள் பற்றி பின்லாந்தின் முன்னாள் பிரதமர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டை ஆளும் கூட்டணியில் என் கட்சி இல்லை, ஆனால், ஐந்து கட்சிகளைச் சேர்ந்த பெண்களும் இணைந்து நாட்டை ஆள்வது மகிழ்ச்சியாக உள்ளது.

இது, பின்லாந்து ஒரு நவீன மற்றும் முற்போக்கான நாடு என்பதைக் காட்டுகிறது. அரசாங்கத்திலும் பெரும்பான்மையாக பெண்களே உள்ளனர். பாலினம் என்பது அரசாங்கத்தில் பெரிய விஷயம் இல்லை அது ஒரு நாள் மாறும். அதற்கு இவர்கள் அனைவரும் முன்னோடிகளாக இருப்பார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் ட்விட்டர் பதிவு சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தலைமை விஞ்ஞானி

உலக சுகாதார அமைப்பின் ( ரர்ழ்ப்க் ஏங்ஹப்ற்ட் ஞழ்ஞ்ஹய்ண்க்ஷ்ஹற்ண்ர்ய் (ரஏஞ)) ஒரு துறையின் தலைமை விஞ்ஞானியாக செளமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னால், இந்த அமைப்பின் துணை பொது இயக்குநர் பதவியை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. மருத்துவத்தில் மேற்படிப்பு பயின்று இருக்கும் இவர், காசநோய், எய்ட்ஸ் பற்றிய ஆய்வு மற்றும் விழிப்புணர்வு திட்டங்களில் பெரும்பங்காற்றியுள்ளார்.

ஐந்தாம் இடம்

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். "போர்ப்ஸ்' நாளிதழ் வெளியிட்டுள்ள பட்டியலில், ஜியோ நிறுவனத்தில் கிடைக்கப்பெற்ற தொடர்ச்சியான முதலீட்டின் மூலம், அம்பானியின் சொத்தின் மதிப்பு சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதன் மூலம், அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி ஐந்தாம் இடத்தை அடைந்துள்ளார். அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்துமுதலிடத்தில் உள்ளார்.

உலக சாதனை

சென்னை அருகே ஒரே இடத்தில் 10,176 பேர் பரதநாட்டியம் ஆடி புதிய கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினர்.

தமிழக அரசு சுற்றுலாத்துறை சார்பில் சதிர் 10000 என்ற தலைப்பில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரே இடத்தில் பரதநாட்டியம் ஆடினர். தாம்பரத்தை அடுத்த கெளரிவாக்கத்தில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி சிதம்பரத்தில் 7190 பேர் கலந்து கொண்டு ஒரே இடத்தில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடத்தியதே இதுவரை கின்னஸ் உலக சாதனையாக திகழ்ந்து வந்தது. அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் 10,176 பேர் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.

இரட்டை-அடுக்கு ரயில்

மேற்கு ரயில்வே, நாட்டிலேயே உயரமான முதல் இரட்டை-அடுக்கு ரயிலை வெற்றிகரமாக இயக்கியதன் மூலம் இந்திய ரயில்வே ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. குஜராத்தில் உள்ள பழன்பூர் மற்றும் பொட்டாட் நிலையங்களில் இருந்து இந்த இரட்டை அடுக்கு செயல்பாடுகள்வெற்றிகரமாக தொடங்கியுள்ளன.

புதிய ஏவுகணை

பிரணாஷ் என்ற பெயரில் அதிக தூரத்தில் உள்ள இலக்கை அழிக்கும் ஏவுகணையை தயாரிக்கும் பணி இந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையாக பிரணாஷ் உருவாகிறது.


பிரணாஷ் ஏவுகணைக்கான சோதனைகள், 2021-இல் தொடங்குகிறது. அடுத்த இரு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரணாஷ் ஏவுகணைகளை, நட்பு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும். அவை, உலகின் மலிவான ஏவுகணைகளாக இருக்கும் என இந்தியா நம்புகிறது. இந்த புதிய ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. தயாரிக்கிறது.

பூமி பூஜை

ஏறத்தாழ 500 ஆண்டுகளாக நடந்து வந்த சர்ச்சைக்கு முடிவு: அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் 1528-ஆம்ஆண்டு பாபர் ஒரு மசூதியை கட்டினார் என்பது இந்துக்களின் வாதம். இதைத்தொடர்ந்து 1885-ஆம் ஆண்டு அந்த இடத்தில் ஒரு ராமர் கோயில் கட்டவேண்டும் என்று மகந்த் ரக்பிர்தாஸ் என்பவர் பைசாபாத் கோர்ட்டில், வழக்கு தொடர்ந்தார். அன்று தொடங்கிய சட்டப்போராட்டம் 2019-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி சுப்ரீம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மூலம் முடிவுக்குவந்தது.

ராமர்கோயில் கட்டுவதற்காக ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலம் 161 அடி உயரத்தில் 5 கோபுரங்களுடன் மிகப்பிரமாண்டமான முறையில் 3 ஆண்டுகளுக்குள் ராமர் கோயில் கட்ட முடிவு எடுக்கப்பட்டு பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ரபேல் விமானங்கள்

ரபேல் போர் விமானங்கள் முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன. இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில்,அவற்றில், 5 விமானங்கள் கடந்த ஜூலை 29-ந்தேதி இந்தியா வந்து சேர்ந்தது.

இந்த விமானங்கள், அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முறைப்படி இந்திய விமான படையில் இணைக்கப்பட்டன. எல்லையில் சீனாவுடன் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், ரபேல் போர் விமானங்கள் வரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

நீளமான நெடுஞ்சாலை

உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி, அக்டோபர் 3-ஆம் தேதி திறந்துவைத்தார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத் திட்டமாக இருந்த சுரங்கப்பாதைத் திட்டத்தை முடித்த தற்போதைய மத்திய அரசு, அதற்கு அவரின் நினைவாக "அடல் சுரங்கப்பாதை' என்று பெயரிட்டது. 9.2 கிலோமீட்டர் நீளம் உடைய இந்த இருவழி சுரங்கப்பாதை குதிரை லாட வடிவில் ஒற்றைக்குழாய் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது.

இதன் மூலம், ஹிமாச்சலப்பிரதேசத்தின் மணாலி முதல் லே-யின் லாஹால் இடையிலான தூரத்தை 46 கிலோமீட்டர் குறைக்கப்பட்டு, பயண நேரம் மூன்று மணி நேரம் வரை மிச்சமாகும். சுரங்கப்பாதையில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் 1,500 லாரிகள் அல்லது 3,000 கார்கள் வரை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்ல முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com