/

ரோஜா மலரே! - 60: சாகாவரம் பெற்ற பாடல் - ஹ சச்சு

"வீரத்திருமகன்' படத்தில் இடம் பெற்ற எல்லா   பாடல்களுமே இனிமையானது தான் என்றாலும், அந்தத் திரைப்படத்தில் என்னை அறிமுகப்படுத்தும் விதத்தில் ஒரு பாடல் வரும். 

News image
Updated On :11 அக்டோபர் 2020, 12:30 am

சலன்

"வீரத்திருமகன்' படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களுமே இனிமையானது தான் என்றாலும், அந்தத் திரைப்படத்தில் என்னை அறிமுகப்படுத்தும் விதத்தில் ஒரு பாடல் வரும்.

""அழகுக்கு அழகு
நிலவுக்கு நிலவு
அசைந்திடும் பூச்செண்டு''

இந்தப் பாடல் மிகவும் இனிமையானவை மட்டும் அல்ல, அந்தப் படத்தில் என்னை அறிமுகப்படுத்தும் பாடலாக அமைத்து, நான் தோழிகளுடன் பாடியபடியே ஆடிக் கொண்டு வருவது போல் படம் எடுத்தார்கள். இது ராஜா ராணி கதை என்பதால் ஏதோ "வசந்த விழா' போல் இந்தப் பாடலின் காட்சிகளை அமைத்து இருப்பார்கள். தோழிகள் கூட நான் பல்வேறு விளையாட்டுகள் விளையாடி மகிழ்வது போல் இந்தப் பாடல் காட்சி அமைந்திருக்கும்.

நாங்கள் அரச குடும்பத்துப் பெண்கள் என்பதால் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டே குளிக்க வேண்டும். அப்போது பந்து மற்றும் பூ வளையம் வைத்து சில விளையாட்டுகள் விளையாடுவது போல காட்சிகள் எடுக்கப்பட்டன. அந்த காட்சிகளின் படப்பிடிப்பு மைசூர் பிருந்தாவன் தோட்டத்தில் எடுக்கப்பட்டது. அன்றைக்கு "வீரத்திருமகன்' படம் வண்ணத்தில் இல்லையே என்று இந்தக் காட்சிகளை பார்க்கும் போது கண்டிப்பாக எல்லோருக்கும் எண்ணத் தோன்றும். கருப்பு வெள்ளை படம் என்பதால் இவ்வளவு அழகான காட்சிகளாகத் தான் எடுக்க முடியும் என்று நான் நினைத்தேன். வண்ணத்தில் இந்தப் பாடல் காட்சிகள் மட்டும் இருந்தால் கண்களைக் குளிர்விக்கும் விதத்தில் மட்டுமல்ல, பார்க்கும் யாரும் சொக்கிப் போகும் அளவிற்கு இந்த காட்சிகள் இருந்திருக்கும்.

அப்பொழுதே பிருந்தாவன் கார்டன்ஸ் மிகவும் ரம்மியமாக காட்சியளித்தது. வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின. நான் சிறுமியாக இருந்த போதே மைசூர் பிருந்தாவன் தோட்டம் பார்த்து இருக்கிறேன் என்றாலும் அதே இடத்தில் நான் கதாநாயகியாக நடிக்கும் முதல் படத்தின் சூட்டிங் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அப்படிப் படப்பிடிப்பு நடந்த போது எனக்குத் தாங்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர் சிறந்த இயக்குநர் என்று போகப் போகத்தான் எல்லோரும் தெரிந்து கொண்டார்கள். ஆனால் நான் கதாநாயகியாக நடிக்கும் முதல் படத்திலேயே அவரின் கற்பனை சக்தியை, அவரின் திறமையைப் புரிந்து கொண்டேன். மலர்கள் இருந்தால் கண்டிப்பாக வண்டும், பட்டாம் பூச்சியும் இங்கு நிறைய இருக்கும் இல்லையா? அதையும் இங்கு கொண்டு வந்து காட்டி விட வேண்டும் என்று யோசித்தார் இயக்குநர். அவருக்கு விஷுவல் சென்ஸ் அதிகம் என்று நான் முன்பே சொல்லியிருக்கேன். அது இந்தப் பாடல் காட்சியில் பரிமளித்தது.

இன்றும் இந்தப் பாடல் காட்சியை பார்த்தால் நன்றாகத் தெரியும். எனது வலது உள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சியை வரைந்திருப்பார்கள். எனது இடது கையில் ஒரு மலரை வரைந்திருப்பார்கள். அதாவது வண்டு மலரை தேடி வருவது போல் இருக்கும். இதற்கே எனக்கு கிட்டத் தட்ட அரை மணி நேரத்திற்கு மேல் ஆகியது. என் கையில் வரையும் முன்னர் இயக்குநர் என்னிடம் வந்து,நீங்கள் கைகளை அழகாக, அகலமாக, சுருக்காமல் வைத்துக் கொள்ளுங்கள். எங்காவது சுருங்கி இருந்தால் வண்டும் பூவும் சரியாக வராது.

Story image

அது மட்டும் இல்லாது கைகளையோ அல்லது விரல்களையோ ஆட்டாதீர்கள், என்று என்னிடம் சொன்னார். நானும் கையை காண்பிக்க அவர்கள் சொன்னது போலவே வரைந்து விட்டு, இந்த இரு கைகளுக்கு மட்டுமே நெருக்கமான ஷாட் வைத்து கையில் உள்ள பட்டாம் பூச்சி பறப்பது போல விரல்களை அசைக்க செய்து எடுத்தார்கள். அதுமட்டுமல்ல, அந்த அசைந்திடும் வண்டு ஒரு மலர் செடிக்கு அருகில் சென்று மறைவது போல எடுத்தார்கள். இதற்கு மருதாணி போல இருக்கும் வண்ணத்தில் உள்ள ஒரு "க்யுடெக்ஸ்' வாங்கி வர செய்து, அதை என்கைகளில் வரைந்து இந்தக் காட்சியை எடுத்தார்கள். கருப்பு வெள்ளை என்ற நிலையில் எவ்வளவு அழகா எடுக்க முடியுமோ அவ்வளவு அழகாக எடுத்தார்கள். அந்த பிருந்தாவன் கார்டனை அன்று அவ்வளவு தான் அழகாக அவர்களால் காட்ட முடிந்தது. இந்தக் காட்சி படத்தில் வருவதே சில நொடிகள் தான் என்றாலும் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இந்தக் காட்சிக்காக நிறைய நேரம் செலவழித்தார்.

ஒரு காட்சிக்காக என்னை ஒரு பூச்செடிக்கு அருகில் நிற்கச் சொன்னார்கள். சரி என்று நான் அவர்கள் காட்டின மலர்ச் செடிக்கு அருகில் போய் நிற்க எழுந்தேன். அவர்கள் காட்டிய பூவை பார்த்தபடி, இல்லை இல்லை அதன் அழகை ரசித்தபடி நான் மெல்ல நடந்து அந்த செடிக்கு அருகில் போக முயன்ற போது "ஸ்ஸ்எஸ்' என்ற மெல்லிய ஓசை கேட்டது. எந்த திசையில் இருந்து அந்த ஓசை வருகிறது என்று நான் கண்டு பிடிக்க சுற்றும் முற்றும் பார்த்தேன். செடிக்கு அருகில் நான் பார்த்த போது சப்த நாடியும் அடங்கி விட்டது. "பாம்பு பாம்பு', என்று. நான் கத்தியவுடன் எல்லோரும் பரபரப்பாக அந்த மலரை தான் அப்பொழுது பார்த்தார்கள். இவ்வளவும் நடந்த பிறகும், பாம்பு அந்த இடத்தில் இருக்குமா என்ன? மெல்ல ஊர்ந்து எங்கோ சென்று விட்டது. நான் பயத்தின் உச்சியில் இருந்தேன். நானே கதாநாயகியாக இந்தப் படத்தில் தான் அறிமுகம் ஆகிறேன். இந்த நிலையில் ஒரு பாம்பு அறிமுகம் எனக்கு தேவையா? சிறிது நேரத்தில் எல்லோரும் சகஜ நிலைக்கு வந்தவுடன் படப்பிடிப்பு தொடர்ந்தது.

"வீரத்திருமகன்' படத்தில் உள்ள பாடல் ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று முனைப்போடு இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். இந்த ஒரு பாடல், சாகாவரம் பெற்ற பாடல். இன்றும் என்றும் எல்லோரும் புகழும் ஒரு பாடல். என்னை வந்து சந்திக்கும் எவரும் முதலில் குறிப்பிடும் பாடல் இது தான். அது "ரோஜா மலரே ராஜ குமாரி' என்ற பாடல் தான் என்று நான் சொல்வேன். இது மக்களின் விருப்பமான பாடலாக என்றும் இருந்து வருகிறது. அதை பற்றி விரிவாக நான் சொல்ல வேண்டும் என்று தான் காத்திருந்தேன்.

அந்தக் காலத்தில் எல்லாம் வெளிநாட்டிற்குப் போய் படப்பிடிப்பு நடத்தும் வழக்கம் எல்லாம் இல்லை. அதிகம் போனால் கொடைக்கானல், ஊட்டி என்று போவார்கள். இன்னும் சொல்லப் போனால் அன்று கோவாவிற்குப் போய் படப்பிடிப்பு நடந்ததாக எனக்கு நினைவில் இல்லை. ஹிந்திப் படத்தில் தான் வட இந்தியாவில் உள்ள மலைப்பிரதேசங்களை மக்களுக்கு காட்ட முற்பட்டார்கள். நமது தமிழ்ப் படத்தில், தமிழ் நாட்டில் உள்ள மலைப்பிரதேசங்களை தான் காட்ட முற்பட்டோம்.

கண்களுக்குக் குளிர்ச்சியான காட்சிகள் இன்னும் நிறைய இந்தியாவில் இருக்கிறது . நாம் வெளி நாட்டிற்கே போக வேண்டாம். அந்த அளவிற்கு இங்குப் பார்க்க வேண்டிய காட்சிகள் நிறைய இருக்கின்றன. அதை இயக்குநர்களும், ஒளிப்பதிவாளர்களும் படம் எடுத்து மக்களுக்குக் காட்டினாலே போதும். இன்று உள்ளது போன்ற வசதிகள் அன்று அவ்வளவு இல்லை என்று தைரியமாகச் சொல்லலாம். ஹிந்திப்பட தயாரிப்பாளர்கள் அவர்களைச் சுற்றி உள்ள ஊர்களிலேயே படப்பிடிப்பை நடத்தி விட்டு வந்து விடுவார்கள். தென்னகத்து தயாரிப்பாளர்கள் எல்லோருக்கும் சென்னை தான் சினிமா தலைநகரம்.

நான்கு மொழி படங்களின் படப்பிடிப்பும் சென்னையில் தான் நடக்கும். பாடல் காட்சி படப்பிடிப்பு என்றால் அதிக பட்சம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலம் தான். இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இந்த மாதிரி பாடல் காட்சிகளுக்குத் தேடித் தேடி லொகேஷன்களைக் கண்டுபிடிப்பார். இந்த "ரோஜா மலரே ராஜ குமாரி' பாடல் எங்கு எடுக்கபட்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.