

"அசோக்குமார்' திரைப்படத்தில் எவரு! இவரு! என்ற வசனம் கலைவாணரால் பேசப்பட்டது. அந்த வசனம் படம் வெளி வந்த மறுநாளே தமிழகம் முழுவதும் பரவியது. யாரை கேட்டாலும் எங்குத் திரும்பினாலும் இவரு சொன்னால் சொன்னது தான். எவரு! இவரு! என்ற வசனம் பேசப்பட்டு கொண்டிருந்தது. அந்தப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் கலைவாணர் தம் காரில் கன்னியாகுமரிக்கு வந்தார். வழியில் காருக்குப் பெட்ரோல் போடுவதற்காக ஒரு பங்க்கில் காரை நிறுத்தினார்.
பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் பையன் ஓடி வந்து காருக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே கலைவாணர் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியால் துள்ளி குதித்தவாறே பெட்ரோல் போட்டான். "எத்தனை ரூபாய்?' என்று கேட்டார் கலைவாணர். அப்போது பெட்ரோல் விலை சியோலனுக்கு மூன்று ரூபாய் தான். என்றாலும் காருக்குப் போட்ட பெட்ரோல் ஐந்து சியோலன். ஆனாலும் கேட்டதைக் கலைவாணர் கொடுத்துவிடுவார் என்று நம்பி அந்த பையன் கலைவாணரைப் பார்த்து "இருபத்தைந்து ரூபாய்' என்றான்.
"எதற்காக இருபத்தைந்து ரூபாய்' என்றார் டிரைவர். கலைவாணர் மெளனமாக இருந்தார். "இருபத்தைந்து ரூபாய் தான். இவரு சொன்னால் சொன்னது தான். எவரு இவரு?' என்று கிண்டலாகக் கூறினான் பையன். உடனே கலைவாணர் டிரைவரைக் காருக்குள் ஏறச் சொல்லிவிட்டு பையனைப் பார்த்து" தம்பி உன் பெயரென்ன ?' என்றார். பையன் பெயரைக் கூறினான். சரி, "நீ கேட்ட ரூபாய் தரலாம், பில் கொண்டு வா' என்றார்.
பையன் பில் எழுதிக் கொண்டு வருவதற்காக உள்ளே ஓடினான். அதே வேளையில் கலைவாணரின் கார் கிளம்பியது. பதறியவாறு பையன் வந்தான். "சார் பணம் கொடுக்காமல் போறீங்களே!' என்று கத்தினான். இவரு போனால் போனது தான் எவரு? இவரு?' என்று காரில் உள்ளிருந்து பையனை எட்டிப்பார்த்தவாறு சிரித்துக்கொண்டே கூறினார். கார் போய்விட்டது. நான்கு நாள்களுக்குப் பிறகு அதே பெட்ரோல் பங்க்கிற்கு அந்தப் பையன் பெயருக்கு கலைவாணரிடமிருந்து இருபத்தைந்து ரூபாய் மணியார்டர் வந்தது. அதன்பிறகு தான் அந்தப் பையனின் மனம் பெரு மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தது.
நாகர்கோவில் ஒழுகினசேரியில் கலைவாணரின் தம்பி திரவியம் திருமணத்திற்கு எம்.கே.தியாகராஜபாகவதரின் கச்சேரி நடந்தது. கச்சேரி முடிந்தவுடன் பாகவதருக்கு வைர மோதிரம் பரிசளித்தார் கலைவாணர். பின்னர் பக்க வாத்தியக்காரர்களுக்கும் ஒவ்வொரு பரிசாகக் கொடுத்தார். கடைசியாக கடம் வாசித்தவரின் அருகே வந்து அவருக்கு மாலை போட்டுவிட்டு ஒரு பெரிய வெள்ளிக் கோப்பையைக் கொடுத்தார். அருகிலிருந்த நண்பர்களும் ரசிகர்களும் வியப்புக் குறி காட்டியதைக் கவனித்த கலைவாணர். "கடம் வித்வானுக்கு மட்டும் மிகப்பெரிய பரிசாகக் கொடுத்ததைப் பார்த்து உங்களுக்கு வியப்பாயிருக்கிறது.
அதற்குக் காரணம் உண்டு. சமீப கால ரயில் நெருக்கடியில் நமது கடம் வித்வான் நமது கடத்தை உடைக்காமல் மிகவும் கவனமாகக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறாரோ! அந்தத் திறமைக்கு தான் இந்தப் பெரிய பரிசு!' என்றார். கூடியிருந்தோர் நகையொலியுடன் கரவொலியும் கலந்து கலைவாணருக்குப் படைத்தனர்.
பாரத திரைப்பட வெள்ளிவிழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சொற்பொழிவாற்ற வருகை தந்த கலைவாணர் மேடைக்கு வந்ததும் பொது மக்களைப் பார்த்து கம்பீரமாக நின்று கொண்டு "லேடீஸ் அண்ட் ஜென்டில் மென்' என்று ஆரம்பித்து சற்று நிறுத்தினார். கூடியிருந்தோர் பெரு வியப்புடன் கலைவாணர் என்.எஸ்.கே என்ன ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றத் தொடங்கி விட்டார் என்று வாய்விட்டுக் கூறினர். அடுத்த விநாடியே அவ்வளவு தான் இதற்கு மேல் ஆங்கிலத்தில் பேச எனக்குத் தெரியாது என்று கூறியதும் வியப்புக்காட்டிய முகங்களெல்லாம் நகைப்பு காட்டி உற்சாக கடலில் மூழ்கியது.
ஒரு சமயம் கலைவாணர் வெளியூர் சென்றிருந்த போது அவரது அலுவலக நிர்வாகி கலைவாணரின் வீட்டுக்கு காவல் காரராக கூர்க்காவை நியமித்து விட்டார். அடுத்த நாள் வெளியூரிலிருந்து திரும்பிய கலைவாணர் தம் வீட்டு வாசலில் கூர்க்கா காவல் நிற்பதைக் கண்ட உடனே கூர்க்காவை நீக்கிவிட கட்டளையிட்டார்.
அதோடு ஒரு நாள் வேலைப்பார்த்த அந்த கூர்க்காவிற்கு ஒரு மாத சம்பளமும் கொடுத்தார். அந்த வேளை கலைவாணர் கூறியதாவது : "கலைஞன் இல்லத்திற்கு காவல் எதற்கு கூடவே கூடாது. பொது மக்கள் ஆசையோடு வரும் பொழுது அவர்களைத் தடுக்க ஒரு கூர்க்காவா? இனி மேல் நம் வீட்டிற்கு காவலே வேண்டாம்.' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.